இன்ஃபோசிஸ் நிறுவன மேலாண்மைக் குழுவில் நிலவிவரும் வெற்றிடத்தை நந்தன் நீல்கேனி நிரப்புவாரா?

0

ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு நந்தன் நீல்கேனி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்குள் நுழைகிறார். அவரை வரவேற்க இன்ஃபோசிஸ் தயாராகியிருக்கும் நிலையில் இந்த சூழ்நிலைக்குக் காரணமான பல்வேறு விஷயங்களை அலசுவோம்.

தற்போது நந்தன் நீல்கேனி செயல்சாரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய குழு உறுப்பினர்களான ஆர் சேஷசாயி, விஷால் சிக்கா, ப்ரொஃபசர் ஜெஃப்ரி லெஹ்மன், ஜான் எட்ச்மெண்டி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ரவி வெங்கடேசன் இணைத் தலைவராக பதவியிறங்கினாலும் குழு உறுப்பினராகத் தொடர்கிறார்.

நந்தன் நிறுவனத்துடன் மறுபடியும் இணைந்து தலைமைப்பொறுப்பேற்க இருப்பதால் இன்ஃபோசிஸ் மீண்டும் முன்பு போலவே சிறப்பாகச் செயல்படும் என்று அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக நிறுவனத்திற்குள் மேலாண்மை தரப்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவதை நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பவர்கள் நன்கறிவார்கள். அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில் புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்பார். அதற்கு முன்பு நந்தன் இந்நிறுவனத்தை வலுவான நிலைக்கு நகர்த்துவார் என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக நிறுவனர் எஸ் டி ஷிபுலால் பொறுப்பேற்றபோது மேலாண்மைக் குழுவில் பிரச்சனைகள் துவங்கியது. அவர் “நியூ நார்மல்” அல்லது 3.0 ப்ரோக்ராமை அறுமுகப்படுத்தினார். பாரம்பரிய அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் மற்றும் மெயிண்டெனன்ஸ் பிசினஸிற்கு மாற்றாக இருக்கும் நோக்கத்துடன் தளம் சார்ந்த வணிகம் மற்றும் விரைவான கம்ப்யூட்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் நாராயண மூர்த்தி நிர்வாகக் குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இன்ஃபோசிஸ் சில முக்கிய அக்கவுண்டுகளை இழந்தது. நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் நிறுவனர்களுக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்று வழிநடத்துவோரை கண்டறியவேண்டிய சூழல் இருந்தது. இந்த காரணங்களுக்காக மூர்த்தி பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது கிட்டத்தட்ட 10 மூத்த தலைவர்கள் பொறுப்பிலிருந்து விலகியது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு அவர் மீண்டும் பொறுப்பேற்றதை பல நிபுணர்கள் வரவேற்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிறப்பான எதிர்காலத்திற்கு இவரைப் போன்ற வலுவான தலைவர்களின் வழிகாட்டல் அவசியம். மேலும் நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தத் தகுந்த நபரை அவரால் மட்டுமே தேர்வு செய்யமுடியும் என்றும் நம்பினர்.

துரதிர்ஷ்டவசமாக விஷால் சிக்கா போன்ற வலுவான தலைவரை மிகுந்த ஆரவாரத்துடன் நியமித்த பின்னும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மீண்டும் அதே நிலைமை அரங்கேறியுள்ளது. நிறுவனர்கள் மீண்டும் நிறுவனத்தில் இணைகின்றனர். இது சரியா? குறைந்தது 84 முன்னாள் ஊழியர்கள் அவ்வாறு நம்புகின்றனர். நிறுவனத்தின் மூத்த தலைவர்களான ஷரத் ஹெட்ஜ் மற்றும் விஜய் ரத்னபார்கே குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 

“மூர்த்தி எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்கு தகுந்த ஆதாரத்துடன்கூடிய தெளிவான விளக்கத்தை குழு அளிக்கவேண்டும். அதன்மூலம் அனைத்து பங்குதாரர்களிடமும் தங்களது தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவேண்டும்,“ என்கிறார். 

மேலும் அந்த கடிதத்தில், 

“கடந்த வார பங்கு வர்த்தக நிலைக்காக மூர்த்திக்கு கடிதம் வாயிலாக குழு பதிலளித்த விதத்தைக் கண்டு முன்னாள் இன்ஃபோசிஸ் ஊழியர்களான நாங்கள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாகளாக பணிபுரிந்தவர்கள். இன்ஃபோசிஸ் மிகப்பெரிய சேவை நிறுவனமாக வளர்வதை கண்கூடாகப் பார்த்தவர்கள். பலர் இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளனர். இவை அனைத்தையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இறுதியாக இன்ஃபோசிஸ் ஒரு நிறுவனமாக எந்தவித போராட்டத்தையும் சந்திக்கவில்லை. ஆனால் மேலாண்மை தரப்பில் ஏற்படும் உட்பூசல்களே நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்ஃபோசிஸ் குறித்து சந்தை என்ன சொல்கிறது?

இது குறித்து சந்தை வேறுவிதமாக பதிலளிக்கிறது. மும்பையிலுள்ள பங்கு தரகர்கள் அடங்கிய குழு தங்களது க்ளையண்டுகளை அழைத்து இன்ஃபோசிஸ் பங்குகளை விற்க வலியுறுத்துகிறது. 

“உங்களுக்கு உடனடியாக காசோலை கிடைக்கும்.” என்று தனது க்ளையண்டிடம் சொல்கிறார் ஒரு பங்குதரகர். அவர் நிறுவனர்களுக்கும், குறிப்பாக நாராயண மூர்த்திக்கும் குழுவிற்கும் இடையே தற்போது நிலவும் மோதலினால் ஏற்படுவதற்கு சாத்தியமான சில விளைவுகள் குறித்து யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார். 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை டிஜிட்டல் உலகிற்கு வெற்றிகரமாக நகர்த்தக்கூடிய சிஇஓ-வைக் கண்டறியும் வரை குறுகிய காலத்திற்கு நந்தன் நீல்கேனி இணைந்திருப்பார் என்பது தெளிவாகிறது. மேலும் வருங்காலத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் மற்றொரு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துடன் ஒன்றுசேர்ந்துவிடலாம். அல்லது சேர்மன் எமிரிடஸ் நாராயணமூர்த்தியின் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு ஏற்றவாறு செயல்படும் சிஇஓ-வைக் கண்டறியலாம். இதன்மூலம் பங்கு நிலவரம் தற்போதிருக்கும் நிலையைப் போலவே சீராக நீடிக்கும். இவ்வாறு அந்த பங்குதரகர் குறிப்பிட்டார். 

இது அவரது பார்வையாக இருக்கையில் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் செயல்திட்டமும் அதன் பின்னணியில் உள்ளது. நந்தன் நீல்கேனி நியமிக்கப்பட்டதால் குறைந்தது குறுகிய காலத்திற்காவது பங்குச் சந்தையில் நம்பிக்கையைத் திரும்பப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புத்தகத்தில் ’ஹேண்ட் ஆஃப் தி கிங்’ என்கிற கதாப்பாத்திரங்கள் கொலை செய்யப்படும். இந்தப் புத்தகத்தில் பல்வேறு பக்கங்களைக் கண்டறிவது போலவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலை உள்ளது என்று யுவர்ஸ்டோரியிடம் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் சேசஷாயி மற்றும் குழுவின் மற்ற உறுப்பினர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். தற்போது குழு நந்தன் நீல்கேனியை முன்னிறுத்தியுள்ளனர். இது சரியான முடிவு என்கிறனர் நிபுணர்கள். அவர் நிறுவனத்தை எவ்வாறு சீரமைத்துவிட்டு புதிய சிஇஓ-வை கண்டறிந்துவிட்டு வெளியேறுகிறார் என்பதே சுவாரஸ்யமான விஷயமாகும். 

“நந்தன் அதிக நாட்கள் இணைந்திருக்கமாட்டார். நடக்கும் விஷயங்கள் எதையும் உணர்வுப்பூர்வமாக அணுகமாட்டார். சிஇஓ-வைக் கண்டறிந்தவுடன் அவர் வெளியேறிவிடுவார். நிறுவனத்தின் மரபை கருத்தில் கொண்டு புதிய சிஇஓ செயல்படவேண்டும்,” என்று சொல்லப்படுகிறது.

நிறுவனத்தில் காணப்படும் அரசியல் மற்றும் ஒழுங்குணர்வின்மை

நிறுவனத்திலிருந்து நிறுவனர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்த ஒரு கூட்டு அறிக்கையை நிறுவனர்கள் வெளியிட்டால் மட்டுமே பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கமுடியும். நந்தன் குறுகிய காலத்திற்கு மட்டுமே வழிநடத்துவார் என்பதால் மூர்த்தி உயர்மட்ட குழுவில் இடம்பெறுவார் என்பது தெளிவாகிறது. இன்ஃபோசிஸ் தீர்வுகாணவேண்டிய பெரியளவிலான பிரச்சனைகள் உள்ளது. அத்துடன் ஊழியர்கள் மற்றும் க்ளையண்டின் நம்பிக்கையை மீட்டெடுக்கவேண்டியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு விஷால் சிக்கா தனது ஊழியர்களிடம் பனயா தொடர்பான குற்றச்சாட்டுகளால் கவனம் சிதறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நிறுவனம் பல்லாண்டுகளாக உருவாக்கி வந்த நற்பெயரை அவரது ராஜினாமா சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளது. எனினும் பலர் நிறுவனத்தை நிறுவனர்களே நடத்தவேண்டும் என்று விரும்புகின்றனர். குறிப்பாக பலர் மூர்த்தியை அவரது எளிமைத்தன்மையை முன்வைத்து முன்மொழிந்தனர் என்பது முன்னாள் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் அனுப்பிய கடிதம் உறுதிபடுத்துகிறது. 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருங்காலம் என்ன என்பது குறித்து யாரும் அறியாதபோதும் இந்திய தகவல்தொழில்நுட்பத் துறையின் சிகரமாக விளங்கும் இந்நிறுவனம் அதன் பொலிவை இழந்துவிடக் கூடாது. இருப்பினும் தற்போது அரங்கேறிவரும் நடவடிக்கைகளும் நிர்வாகக் குறைபாடுகளும் நிறுவனத்தின் நற்பெயரை பெருமளவு குலைத்துவிட்டது. அதை மீட்டெடுக்கவேண்டிய தருணம் இது. அதற்கு நந்தனைக்காட்டிலும் சிறப்பானவர்கள் யாரும் இருக்கமுடியாது.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா