இயற்கை முறையில் கைதேர்ந்த சோப்புகளை தயாரிக்கும் இளம் தாய்!

தன் குழந்தைக்காக இயற்கை முறையில் சோப்பு தயாரித்ததில் கிடைத்த வெற்றி, ஐஸ்வர்யாவை ஒரு தொழில்முனைவராக்கி Nature's Destiny என்ற நிறுவனத்தை தொடங்க வைத்தது.

10

சந்தையில் ஒரு அழகு சார்ந்த பொருளை வாங்கும்பொழுது அது இயற்கையானதா? அதிக ரசாயனம் உள்ளதா? சர்மத்திற்கு ஏற்றதா? போன்ற பல கேள்வி நமக்குள் எழும். ஆனால் இந்த கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்கும் முன்னே அப்பொருளை வாங்கி பயன் படுத்தத் தொடங்குகிறோம். ஒரு வித குழப்பித்திலே அப்பொருளை பயன்படுத்துகிறோம். ஆனால் தொழில்முனைவரான ஐஸ்வர்யா ரவிகிருஷ்ணன் இதைப் பற்றி யோசித்தது மட்டும்மல்லாமல் அதற்கான தீர்வையும் கொண்டு வந்துள்ளார்.

சந்தையில் அதிக ரசயானம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதால் தன் நன்மைக்காக இயற்கை முறையில் அழகு பொருட்களை தயாரிக்க; அது தற்பொழுது Nature’s Destiny என்ற நிறுவனமாக மாறியுள்ளது.

ஐஸ்வர்யா தன் சோப்பு தயாரிப்புகளுடன்
ஐஸ்வர்யா தன் சோப்பு தயாரிப்புகளுடன்
“எனக்கு இயற்கை பொருட்கள் மேலே ஆர்வம் அதிகம்; சந்தையில் விற்கும் பொருளை வாங்கும்பொழுது கூட இயற்கை வளம் நிறைந்த பொருட்களையே வாங்குவேன்,” 

என ஆர்வத்துடன் பேசுகிறார் ஐஸ்வர்யா. பட்டப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா படிப்பு முடிந்தவுடன் அதற்கு ஏற்ற வங்கி வேலையில் அமர்ந்தார். தொடர்ந்து இரு வருடம் அந்நிறுவனத்தில் பணி புரிந்தார்.

“திருமணம் முடிந்து எனக்கு பெண் குழந்தை பிறந்த பின், அவளுக்கு எந்த வகையான இரசாயன பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என உறுதியாக இருந்தேன். என் மகளுக்காக வீட்டிலே இயற்கை பொருட்கள் கொண்டு சோப்புகளை தயாரித்தேன்,” என்றார்.
இயற்கை வகை சோப்பு
இயற்கை வகை சோப்பு

குழந்தை நலனுக்காக தொடங்கிய தயாரிப்பை பின் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக மாற்றியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த தொடக்கத்திற்குப் பிறகே தன் அடையாளத்தை உணர்ந்ததாக கூறுகிறார். ஆரம்பத்தில் பல சறுக்கல்கள் இருந்தாலும், விடாமுயற்சிக்கு பிறகு சோப்பு செய்யவதை தானே கற்றுக்கொண்டுள்ளார்.

தேங்காய், செம்பருத்தி, காரட், எலுமிச்சை, ஆலோவேரா, ஆரஞ்சு, பால், தயிர் போன்ற இயற்கை பழம் காய் வகைகளை பயன்படுத்தி கைப்பட செய்த சோப்புகளை விற்கின்றனர். முதலில் ஐஸ்வர்யா மட்டும் ஒரே ஆளாய் நின்று தொடங்கிய Nature’s Destiny இப்பொழுது ஐந்து பேர் கொண்ட குழுவாக உயர்ந்துள்ளது.

“என் கையில் இருந்த பணத்தை முதலீடாய் போட்டு இந்நிறுவனத்தை தொடங்கினேன். ஆனால் இப்பொழுது ஓர் ஆண்டு முடிந்த நிலையில் எங்கள் நிறுவனத்துடன் இரண்டு முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர்,” என்கிறார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு சிறுபாண்மை மற்றும் குடிசைத் தொழிலுக்கான சட்டம் மாறி உள்ளது. எனவே தங்கள் தொழிலை சீரமைக்க சட்டரீதியாக சில சிரமங்களை மேற்கொண்டதாக நம்முடன் பகிர்ந்தார்.

“அதைத் தாண்டி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொருட்களை பெறுவதும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. மற்றும் மேற்கத்திய பொருளில் இருந்து விடுபட்டு இயற்கை பொருளை பயன்படுத்த மக்களை இணங்க வைக்கவும் சிரமமாக இருந்தது,”

என தன் தொழிலுக்கு முட்டுகட்டையாய் இருந்த சிலவற்றை குறிப்பிடுகிறார்.  இடைத்தரகர்களை தடுப்பதால் குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்தே மூலப்பொருட்களை வாங்குகிறார். இதனால் இறுதி பொருளும் விலை குறைவாக கிடைக்கிறது. இந்த இயற்கை அழகு பொருட்களின் விலை 80 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை உள்ளது. 

சோப் மட்டுமல்லாமல், ஷாம்பூ, பாடி வாஷ் என வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனித்துவமாக செய்து தருகின்றனர். இந்நிறுவனம் சமூக வலைதளங்களில் மட்டுமே தங்கள் பொருட்களை விளம்பரம் செய்கின்றது. மேலும் நெட்டிசன்களே தங்கள் இலக்கு என கூறுகிறார் ஐஸ்வர்யா. சமூக வலைதளத்தின் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று, உலக அளவில்  பல வாடிகையாளர்களை சம்பாதித்துள்ளது Nature’s Destiny.

ஹோம்ப்ரூனர் விருது பெற்ற போது
ஹோம்ப்ரூனர் விருது பெற்ற போது
“என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது, அவளை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டு என் பணியை நான் தொடங்குவேன். ஒரு தாயாய் எனக்கு இது கடினம் தான் ஆனால் என் மகள் என்னைக் கண்டு பெருமிதம் கொள்வாள்,”

என முடிக்கிறார் ஐஸ்வர்யா. மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற ஹோம்ப்ரூனர் விருது விழாவில், சுகாதாரப் பிரிவில் விருது பெற்றுள்ளார் இந்த இளம் தாய். 

ஃபேஸ்புக் முகவரி: Nature’s Destiny

Related Stories

Stories by Mahmoodha Nowshin