தமிழகத்தின் முன்னணி நிறுவன நிறுவனர்கள் பின்பற்றிய தாரக மந்திரம்...

33

உலகெங்கிலும் தொழில் புரிவோர்களும், வெற்றிப்பெற்ற தொழிலதிபர்களும் தங்களின் வெற்றிக்கான ரகசியத்தையும், சவால்களை கடந்து வந்த பாதையின் மூலம் கற்ற அனுபவங்களையும் பொன்மொழிகள் மூலம் கூற கேட்டுள்ளோம். அதே போன்று நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பல தொழில்முனைவர்களும், தொழிலதிபர்களும் சர்வதேச அளவில் தங்களுக்கான வெற்றித்தடத்தை பதித்ததற்கு பின்னுள்ள தாராக மந்திரத்தை தெரிந்து கொள்வதும் அவசியம்.

இதோ தமிழகத்தைச் சேர்ந்த தலைச்சிறந்த 10 தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் பின்பற்றிய தங்கள் வெற்றிக்கு வித்திட்ட கோட்பாடுகள்:

1. சரவண பவன் ஹோட்டல் : பி.ராஜகோபால்

”வெற்றியின் மீது என் இதயத்தை வைத்தேன்.”

இட்லி அரசர் என அழைக்கப்படும் அண்ணாசி, பி.ராஜகோபால், சரவணபவன் ஹோட்டல் நிறுவனர், ஹோட்டலில் சர்வராக துவங்கி, இந்தியாவில் 33 கிளைகள் சர்வதேச அளவில் 47 கிளைகள் கொண்ட ஹோட்டல் சாம்பிராஜ்யத்தின் அதிபராக தமிழகம் நன்கறிந்த  கோடீஸ்வரராக உருவாகியுள்ளார்.

2. ஆச்சி குழுமம் : ஏ.டி.ஐசக்

”படைப்பாக்கம் என்பது ஏற்கனவே உள்ளதை மறு ஆக்கம் செய்வதாகும்.”

மசாலா மன்னரான ஏ.டி.ஐசக்; கோத்ரெஜ் நிறுவன விற்பனை மேலாளரில் இருந்து மசாலா பொருட்கள் சக்ரவர்த்தியாக உயர்ந்துள்ளார். அவருடைய தொழில்முனைவு பயணம், ஜவுளித்துறை (டிவின் பேர்ட்ஸ்) உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.

3. ஹட்சன் அக்ரோ பிராடக்ட்ஸ் : ஆர்.ஜி.சந்திரமோகன்

”அதிகம் இருக்கும் பிரச்சனை என்பது ஒரு விதத்தில் வரமாகும்.”

ஐஸ்கிரீம் மனிதரான ஆர்.ஜி. சந்திரமோகன் தனது தந்தையின் நிலத்தை விற்று ஐஸ்கிரீம் தொழிலை துவக்கியவர், இன்று இந்தியாவின் மிகப்பெரிய பால் பண்ணை நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார். அருண் ஐஸ்கிரீம்ஸ், ஐபாகோ ஆகிய வெற்றிகரமான பிராண்ட்களை உருவாக்கி இருக்கிறார்.

4. நல்லி சில்க்ஸ் : குப்புசாமி செட்டி

”பருத்தி இழையில் கோடீஸ்வரர் ஆனேன்.”

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டி குடும்ப வர்த்தகத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு நல்லி சிலிக்ஸ் பெயருக்கு காப்புரிமை பெற்றார். நெசவு தொழிலில் 100 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் இன்று இந்தியா முழுவதும் மற்றும் அமெரிக்காவின் ஷோரூம்கள் கொண்டுள்ளனர்.

5. ஜோஹோ கார்ப்பரேஷன் : ஸ்ரீதர் வேம்பு

”வெற்றியாளர்கள் மாறுபட்ட செயல்களை செய்வதில்லை. ஆனால் மாறுபட்ட முறையில் செய்கின்றனர்...”

ஐ.ஐ.டி பட்டதாரியான ஸ்ரீதர் வேம்பு சாண்டியாகோவின் குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். சென்னையை தலைமையகமாக கொண்டு உலகம் முழுவதும் சேவைகள் வழங்கி வரும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷனை நிறுவியிருக்கிறார்.

6. எம்.ஆர்.எப் : கே.எம்.மாமேன் மாப்பிள்ளை

“நான் இஞ்சின்களை உருவாக்கி அவற்றுடன் சக்கரங்களை இணைக்கிறேன்...”

இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப் நிறுவனத்தின் நிறுவனர் கே.எம்.மாமேன் மாப்பிள்ளை. பொம்மை பலூன் தயாரிப்பில் துவங்கி நைலான் டயர்களை தயாரிக்கத்துவங்கினார். அமெரிக்காவுக்கு டயர் ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் எம்.ஆர்.எப்.

7. டி.வி.எஸ் : டி.வி.சுந்தரம் ஐயங்கார் 

”பணத்தை பின் தொடர்ந்து செல்லாமல், தொலைநோக்குடன் செயல்படுங்கள், பணம் தானாக தேடி வரும்.”

டி.வி.சுந்தரம் ஐயங்கார் வழக்கறிஞராக துவங்கி, பின்னர் ரெயில்வே மற்றும் வங்கியில் பணியாற்றினார். பின்னர் மதுரையில் பஸ் சேவையை துவக்கியவர் ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டு, டிவிஎஸ் குழுமத்தை உருவாக்கினார்.

8. கவின்கேர் : சி.கே.ரங்கநாதன்

”நான் என் ஆர்வத்தை பின் தொடர்ந்து செல்கிறேன், விற்பனையை அல்ல...”

புறா வளர்ப்பு மூலம் பணம் சம்பாதித்த சி.கே.ரங்கநாதன், 15,000 ரூபாய் முதலீட்டில் ஷாம்பு தயாரிப்பை துவக்கினார். அவரது வழிகாட்டுதலில் கவின்கேர் நிறுவனம், நுகர்வோர் தயாரிப்பு மற்றும் உணவு பிரிவில் சர்வதேச அளவில் வளர்ந்துள்ளது.

9. முருகப்பா குழுமம் : முருகப்ப செட்டியார்

”உங்களுடன் வர்த்தகம் செய்யும் யாரும் நஷ்டமடையக்கூடாது. அப்போது உங்களுக்கும் நஷ்டம் வராது.”

முருகப்ப செட்டியார், ஆங்கிலேயே ஆட்சியின் கீழ், பர்மா மாகாணத்தில் உதவியாளராக இருந்தார். இந்தியா திரும்பிய பின் பல துறைகளில் வர்த்தகத்தை துவக்கினார். முருக்கப்பா குழுமம், குடும்பத் தொழிலில் இருந்து வர்த்த உலகிற்கு வெற்றிகரமாக மாறிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

10. ராமராஜ் காட்டன் : கே.ஆர்.நாகராஜன்

”பிராண்டின் ஆற்றல்; சமரசம் இல்லாத சிறந்த தரம்.” 

கே.ஆர்.நாகராஜன், தரமான பாரம்பரிய வேஷ்டிகளை அளிக்கும் நோக்கத்துடன் வர்த்தகத்தை துவங்கினார். மார்க்கெட்டிங்கில் நீண்ட அனுபவம் மூலம் அவர் கற்றுக்கொண்ட தரத்தில் சமரசம் இல்லை எனும் தாரகமந்திரத்தை தனது வெற்றிக்கான வழிகாட்டியாக கொண்டிருக்கிறார்.

தகவல்களுக்கு நன்றி; www.corporatevalley.com