800 டன் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சி செய்யும்  கேரள நிறுவனம்!

1

கடந்த வருடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கே திரும்ப வந்தன. ஓராண்டுக்குப் பிறகு தற்போது மதிப்பிழக்கப்பட்ட நோட்டுகள் தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இந்த நாட்டின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படும்.

மத்திய அரசாங்கம் வெஸ்டர்ன் இந்தியன் பிளைவுட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த இந்நிறுவனம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது முதல் இந்த ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அட்டை பலகைகளாக (hardboards) மாற்றி வருகின்றனர். தற்போது தென்னாப்பிரிக்காவில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு இந்த அட்டை பலகைகளுக்கான தேவை உள்ளது.

வெஸ்டர்ன் இந்தியன் ப்ளைவுட் நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவர் பி மெஹபூப் ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் தெரிவிக்கையில் 800 டன்களுக்கும் அதிகமாக ரூபாய் நோட்டுக்களை திருவனந்தபுரத்திலிருக்கும் ரிசர்வ் வங்கியின் வட்டார அலுவலகத்திலிருந்து பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த செயல்முறை குறித்து அவர் விவரிக்கையில்,

”ரூபாய் நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்த பிறகு அவை துண்டுகளாக்கப்பட்டு எங்களிடம் அனுப்பப்படும். ஏனெனில் இந்த உயர்தர நோட்டுக்களை கூழாக்கக்கூடிய இயந்திரம் எங்களிடம் உள்ளது. மரக்கூழ்களைக் கொண்டு கடினமான அட்டைகள் மற்றும் மிருதுவான அட்டைகளை நாங்கள் தயாரிக்கிறோம். துண்டுகளாக்கப்பட்ட நோட்டுகளை பெற்றுக்கொண்டதும் நோட்டுகளின் கூழிலிருந்து 5 முதல் 15 சதவீதத்திற்கிடையே மரக்கூழுடன் அட்டை தயாரிப்பிற்காக சேர்க்கப்படும். தெர்மோ-மெக்கானிக்கல் கூழாக்கப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்தர நோட்டுகளை கூழாக்குகிறோம்.

வெஸ்டர்ன் இந்தியன் ப்ளைவுட் பொது மேலாளர் பிஎம் சுதாகரன் நாயர் என்டிடிவிக்கு தெரிவிக்கையில்,

“இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி நோட்டுகளை எரித்துவிடும். ஆனால் இப்போது அதை பயன்படுத்த முடிகிறது. கூழாக்கப்பட்ட பழைய நோட்டுகளை பயன்படுத்தும் சதவீதத்தில் கவனமாக இருக்கவேண்டும். அதில் தவறு நடந்தால் இறுதி தயாரிப்பு முற்றிலும் வீணாகிவிடும்.”

கட்டுரை : Think Change India