43 ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாம் நடத்தும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற மருத்துவர்!

1

தனியார் மருத்துவமனைகள் அதிகரித்துள்ள இவ்வேளையில், தனியார் மருத்துவர்களுக்கான தேவையும் அதிகமாகவே நம் நாட்டில் உள்ளது. இதனால் ஏழை மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள் இன்றும் போதாமலே உள்ளது. இருப்பினும் ஒருசில டாக்டர்கள் தங்களின் உன்னத சேவையால் சமூகத்தில் தனித்து நின்று பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில், பி.ரமண ராவ் என்ற மருத்துவர், இலவச மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு பல ஆண்டுகளாக அளித்து வருகிறார். 

இதய நிபுணர் மற்றும் பொதுநல மருத்துவரான டாக்டர்.ராவ், பல பிரபலங்களுக்கு வைத்தியம் பார்த்தவர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் பல அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இதில் அடங்குவர். தன் தீவிர உழைப்பால் உயர்ந்த இந்த மருத்துவர் தன் நிலையை ஒரு நாளும் தவறாக பயன்படுத்தியது இல்லை. 

கடந்த 43 ஆண்டுகளாக, இலவச மருத்துவ முகாம்களை கர்நாடகாவில் உள்ள பேகூர் என்ற கிராமத்திலும், மேலும் சில சிறு கிராமங்களிலும் நடத்தி வருகிறார். 1974-ல் தனது முதல் க்ளினிக்கை தொடங்கிய டாக்டர்.ராவ், 2010-ம் ஆண்டு பதம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். அவர் ஊரக மருத்துவத்துறையில் ஆற்றிய பங்கிற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கைகளால் அங்கீகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

40 ஆண்டு கால அனுபவம் கொண்ட டாக்டர்.ராவ், இலவச மருத்துவ முகாமை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கிராமத்தில் நடத்துகிறார். இவர் மணிப்பால் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றவர். தன் பெற்றோர்களின் உந்துதலால் சமூகத்துக்கு உதவிடவேண்டும் என்ற எண்ணம் வந்ததாக குறிப்பிடுகிறார்.

கிராமப்புற பகுதிகளில் மருத்துவ வசதிகள் மோசமாக உள்ளது என்கிறார் Dr.ராவ். ஒரு மனிதனுக்கு அடிப்படை மருத்துவ வசதி என்பது அத்தியாவசிய உரிமை எனவும் எண்ணுகிறார். இந்த வசதிகள் பெறாத கிராமப்புற மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை வழங்குவது அவரின் கடமை என்றும் கூறுகிறார். அதனால் வாராவாரம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார். 

Dr.ராவ் தன் மருத்துவ குழுவுடன் கிராமங்களுக்குச் சென்று இலவச செக்-அப் அளித்து, தேவையான மருந்து, மாத்திரைகளையும் வழங்குகிறார். மேலும் சிகிச்சை தேவைப்படுவோருக்கும் தேவையான மருத்துவ  உதவிகளை வழங்குகிறார். இவரது முகாம்களுக்கு வர கிராம மக்கள் நீண்ட வரிசையில் வாராவாரம் காத்திருக்கின்றனர்.

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL