பிச்சை எடுத்து தனது வீட்டில் கழிப்பறை கட்டியுள்ள பீஹார் பெண்மணி!

0

பீஹாரைச் சேர்ந்த வறுமையில் வாடும் பெண் ஒருவர் தனது வீட்டில் கழிப்பறையை கட்டுவதற்காக பிச்சை எடுத்து பணம் சேகரித்துள்ளதாக சமீபத்தில் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சூபால் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோஷி பகுதியில் உள்ள பைப்ரா ப்ளாக்கின் கீழுள்ள பாத்ரா உத்தார் கிராமத்தில் வசிப்பவர்தான் அமினா கதூன். இவர் கழிப்பறை கட்டுவதற்காக அருகாமையிலுள்ள கிராமங்களில் பிச்சையெடுத்து பணம் சேகரித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவரது முயற்சியைக் கண்டு கழிப்பறை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனாரும் பணியாள் ஒருவரும் வியந்தனர். இவர்கள் தங்களுக்கான கூலியைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமினா தெரிவித்தார். இவரது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் அமினாவின் முயற்சியை மாவட்ட நிர்வாகத்தினர் பாராட்டினர். கணவரை இழந்த 40 வயதான அமினாவிற்கு பதின்மவயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் வாழ்வாதாரத்திற்காக கூலிவேலை செய்கிறார்.

அமினா கழிப்பறை கட்டுவதற்காக உதவி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அக்கறைக் காட்டவில்லை. பீஹாரில் ஸ்வச் பாரத் திட்டங்கள் பெரியளவில் பிரபலமாகியுள்ளபோதும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதிகளாக மாற்றும் முயற்சியில் பீஹார் பின்தங்கியே உள்ளது.

பீஹாரில் உள்ள மில்லியன் கணக்கானோர் இன்றளவும் திறந்தவெளியிலேயே மலம் கழிக்கின்றனர். இதுவரை ஒரே ஒரு மாவட்டம்கூட திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. ஸ்வச் பாரத் மிஷன்–கிராமின் (SBM-G) திட்டத்தின்கீழ் 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் பீஹாரை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசு முயற்சியான ’ஸ்வச் பாரத்’ திட்டம் துவங்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் கட்டப்பட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளியியல் விவரம் தெரிவிக்கிறது. அதே போல் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் கழிப்பறை இல்லாத பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பதிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் அவற்றை அணுகுவதும் பயன்படுத்தப்படுவதும் நிறைவேற்றப்படாத வாக்குறுதியாகவே உள்ளது என்பதே கள நிலவரமாக உள்ளது.

கட்டுரை: Think Change India