நிறுவன பணி கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பை மனித வள குழுவிடம் அவுட்சோர்ஸ் செய்யாதீர்; நவீன் திவாரி

0

இன்மொபி (InMobi) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நவீன் திவாரி டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்திய போது, தனது நிறுவனம் சிறியதாக இருந்த போது பணி கலாச்சாரத்தில், தான் மேற்கொண்ட சில தவறுகளை சரி செய்த விதம் பற்றி பகிர்ந்து கொண்டார்:

“மக்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். நாம் இன்னமும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கவில்லை. நாம் வளர்ந்தவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறோம். நாம் அர்த்தமுள்ள பணியை ஆற்ற விரும்பினால் நம்முடையை ஊழியர்கள் நமக்காக அர்த்தமுள்ள பணி செய்யும் விருப்பத்தை உண்டாக்க வேண்டும். அவர்களை ஒரு வளமாக கருதி அணுக கூடாது” என்றார் அவர்.

அதன் பிறகு அவர், இன்மொபி முதலில் எப்படி செயல்பாடுகளை மதிப்பிட சிக்கலான நிர்வாக அமைப்பை கொண்டிருந்தது என்றும் பின்னர் அது வீண் முயற்சி என உணர்ந்து கொண்டது என்பது பற்றியும் விரிவாக குறிப்பிட்டார்.

நம்முடன் இணைபவரை நம்புங்கள்

“நாம் எல்லோரும் நம்முடன் இருப்பவர்களை (ஊழியர்களை) நம்புவதாக சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் அவ்வாறு நம்புவதில்லை. நாம் அவர்களை நம்பத்துவங்கும் போது அவர்கள் சிறப்பாக செயலாற்றத் துவங்குகின்றனர்” என்று குறிப்பிட்டவர் தமது நிறுவனத்தில் அனைத்து வகையான அனுமதி பெறுதல், மற்றும் அங்கீகாரம் அளித்தலை கைவிட்டதாக தெரிவித்தார்.

தமது முடிவுக்கு புள்ளிவிவரங்கள் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முற்பட்டனர். இந்த முடிவுக்கு பிறகு எல்லாம் குழப்பமாகலாம் என அஞ்சியதற்கு மாறாக ஊழியர்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருந்ததாகவும், எல்லாம் சீராக நடக்கத் துவங்கியதாகவும் தெரிவித்தார்.

ரத்தினங்களை ஏன் வெளியே தேட வேண்டும்?

”ஊழியர்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக நாங்கள் கண்டறிந்தது அவர்கள் வளர்ச்சி வாய்ப்புகளை காண முடியாததாக உணர்ந்தது தான். அதை மாற்ற விரும்பினோம். உள்ளுக்குள் பணிக்கு தேர்வு செய்து கொள்ளும் முறையை அறிமுகம் செய்தோம். நமது ஊழியர்கள் புதிய விஷயங்களை முயற்சித்து, அவற்றை கண்டறிய ஏன் அனுமதிக்க கூடாது என நினைத்தோம்” என்கிறார் நவீன்.

இந்த கொள்கையை அறிமுகம் செய்த பிறகு 35 சதவீத பதவிகள் உள்ளுக்குள் இருக்கும் திறமைசாலிகளை கொண்டே நிரப்ப பட்டது.

“நிறுவன வளாகத்திற்குள் ஊழியர்களை வேறு இடங்களில் பணியாற்றச்செய்வதில் உள்ள மற்றொரு சாதகமான விஷயம் அதன் மூலம் சாத்தியமாகும் பரஸ்பர கற்றலாக இருக்கிறது” என்கிறார் அவர்.

பெரிதாக யோசித்து சின்னதாக துவக்கவும்

"ஒரு நிறுவனத்தை உருவாக்கும் போது, நிறுவனத்தை சிறிய அளவில் உருவாக்குகிறோமா அல்லது பெரிய அளவில் சர்வதேச தரப்பினருக்காக உருவாக்குகிறோமா என தீர்மானிக்க வேண்டும். நீண்ட கால நோக்கில், ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதை விட, ஏற்கனவே உள்ளதை மேம்படுத்துவது சுலபமானது. எனவே பெரிதாக யோசித்து சின்னதாக துவக்கவும்”.

நிறுவனத்தின் மகத்தான பணி கலாச்சாரத்தை உருவாக்க நிறுவனர்கள் தங்கள் தனிப்பட்ட நேரத்தை செலவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தனது உரையை நிறைவு செய்யும் வகையில் "சீரிஸ் ஏ,பி,சி போன்றவற்றை கடந்து நீங்கள் முன்னேற விரும்பினால், பணி கலாச்சாரத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட நேரத்தை செலவிடுங்கள், உங்கள் நிறுவனத்திற்கான பணி கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பை மனித வள குழுவிடம் அவுட்சோர்ஸ் செய்ய வேண்டாம்” என்று நவீன் குறிப்பிட்டார்.