தனியே உலகைச் சுற்றும் துணிச்சல் பெண்கள்!

0

பல காலங்களாய் வெறும் திட்டமாகவே இருக்கும், உங்கள் தோழியோடான பயணத்தைத் தொடங்க, பரபரப்பாக தயாராகுகிறீர்கள். உங்கள் சாகசப் பயணத்தை, உலகம் அறிய வேண்டி, முகநூலில் பதியத் தொடங்கும் போது, பதிலளிக்க விருப்பமே இல்லாத அந்த அழைப்பொலிக் கேட்கிறது. உங்கள் தோழியால், பயணிக்க முடியாது. இந்நிலையில், உங்கள் முன் இரு தேர்வுகள் - ஒன்று விடுமுறை முழுதையும் படங்கள் பார்த்துக் கொண்டோ, சீரியல்கள் பார்த்துக் கொண்டோ கழிக்கலாம்; அல்லது, பைகளின் முடிச்சுகளை அவிழ்க்காமல், வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி, தனித்து பயணிக்கத் தொடங்கலாம்.

பயணத் திரைப்படங்களின் பெரும் வெற்றி, சுற்றுலா சார்ந்த இணையதளங்கள் அளிக்கும் பயணிகளுக்கு சாதகமான தள்ளுபடிகள், மேலும், பயணிகளை வரவேற்று தங்குமிட வசதி செய்யும், நாம் முன்பு அறிந்திராத குக்கிராமத்தின், உள்ளூர்வாசிகள் மூலம் 2015 ன் குறிச்சொல்லாக ‘பயணம்’ இருந்ததை அறிகிறோம்.

ஆச்சரியப்படுத்தக் கூடியது என்னவென்றால், வழக்கத்திற்கு மாறான பலதரப்பட்ட பயணிகளின் அறிமுகம் தான். குடும்பச் சுற்றுலா, தேனிலவிற்கு செல்பவர்கள், நண்பர் குழுக்கள் மட்டும் இல்லாமல், ‘தனிப் பயணப்’ பிரியைகளை அடையாளம் காட்டியது 2015.

“பயணத்தின் போது தனியாகவோ, பாதுகப்பன்றோ நான் எப்போதும் உணர்ந்ததில்லை. நான் சந்தித்தப் பலர், என் பயணத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தனர், பல முறை அவர்கள் வீட்டுப் பெண்களை ஊக்கப்படுத்த தங்கள் வீட்டிற்கு வரவேற்கவும் செய்தனர்” என்கிறார் சைக்ளிஸ்ட் மற்றும் தனிப் பயணப் பிரியை ப்ரிசில்யா மதன்.

பெண்கள் தனியே பயணிப்பது அரிதாக இருந்த காலம், இனியுமில்லை. ‘ஹாலிடேஐக்யூ ட்ராவல் ட்ரெண்டு ஃபோர்கேஸ்ட் 2016’, சமீபக் காலங்களில், பெண் பயணிகளால் திட்டமிடப்படும் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனச் சொல்கிறது. பெண்கள் தனியே செல்லும் பயணம் மட்டுமல்ல, பெண்கள் திட்டமிடும் குடும்ப மற்றும் தம்பதியர் பயணமும் அதிகரித்துள்ளதாய் சொல்கிறது இந்த ஆய்வு.

தங்கள் அனுபவங்களாலும், கதைகளாலும், பைகளை கட்டிக் கொண்டு உலகை அறிய உங்களைப் பயணிக்க தூண்டும் ஆறு துணிச்சல் பெண்களின் பட்டியல் இதோ!

1) கௌரி ஜெயராம்

சைக்கிள் வாங்குவதற்காக ‘ஹோண்டா சிட்டி’ காரை விற்ற கௌரி என்றால் எல்லோருக்கும் புரியும். ஆக்டிவ் ஹாலிடே கம்பெனி என்ற சுற்றுலா அறிவுரை மற்றும் சாகசப் பயணங்களுக்கு வழிமுறைகள் அளிக்கும் சர்வதேச சாகச சுற்றுலா நிறுவனத்தை தோற்றுவித்தவர், கௌரி. வாழ்வின் ஒருக் கட்டத்தில், தன் வேலை சலித்துப் போய்விட்டதா அல்லது சாதிக்க எதுவுமே இல்லாததாய் தான் உணர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிப் பகுதியில் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தன் பணி வாழ்க்கைக்கும், குடும்பத்திற்கும் அப்பாற்பட்டிருந்த உலகை கவனிக்கத் தொடங்கினார். தன் விடுமுறை நாட்களை, மாரத்தான் போட்டிகளுக்கு ஏதுவாய் அமைத்துக் கொண்டார்.

கௌரியின் பயண மந்திரம் : “அது என்னை எங்கேனும் கொண்டு செல்லும், அல்லது, நான் அதை எங்காவது கொண்டு செல்வேன்!”

2) ருதாவி மேத்தா

ஹோட்டல் உரிமையாளர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அதிகாரி, சமூக ஊடக திறனாளர் என பன்முக அனுபவம் கொண்ட ருதாவி, தற்போது, மும்பை ட்ராவல் மேசிவின் தலைமைப் பொறுப்பை கவனிக்கிறார். பல பணி மாற்றங்களுக்கு மத்தியில், நிலையாக இருந்தது அவருக்கு பயணக்காதலும், ஆர்வமும் தான். பயண வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கும் ருதாவி, ராயல் என்ஃபீல்டு, தி பிக்கர்னி போன்ற ப்ராண்டுகளால் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும், கேரளா ப்ளாக் எக்ஸ்ப்ரஸ், என்.டி.டி.வியில் ஒளிபரப்பப்பட்ட எவரெஸ்ட் சவால் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் பங்கெடுத்திருக்கிறார்.

ருதாவியின் பயண மந்திரம் : “ நீங்கள் சென்று சேரும் இடத்திலிருந்து பலவற்றை எடுத்துக் கொள்கிறீர்களே, அதற்கு ஏதேனும் கொடுக்க வேண்டாமா?”

3) ஸ்வாதி ஜெயின்

பயணிப்பதற்காகவே வேலையை துறந்த ஸ்வாதி ஜெயின், தற்போது, பொது உறவுகள் யோசனையாளர் மற்றும் பயணப் பதிவர்.

“நம்மால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை பார்க்கவும், புதிதாய் ஒன்றை முயற்சிக்கவும், நமக்கு நாமே சவால் விடவும் தான் தனியே பயணிக்கிறோம் என நினைக்கிறேன்” என, தனித்துப் பயணிப்பதாய் எடுத்த தன் முடிவை விளக்குகிறார் ஸ்வாதி ஜெயின். 

தன் நாடோடி வாழ்வில், இந்தியாவின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளுக்கு பயணித்து, 20 மாநிலங்களையும், இரண்டு யூனியம் பிரதேசங்களையும் 18 மாதங்களில் கண்டிருக்கிறார். லடாக்கில் இருக்கும் ஸங்க்ஸ்கர் பள்ளத்தாக்கு என்ற குக்கிராமத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரின் தெருக்களிலும் கூட தனித்து சுற்றியிருக்கிறார்.

ஸ்வாதியின் பயண மந்திரம் : “ உலகம் ஒரு அழகான இடம், அதை சிறப்பான முறையில் கண்டறிய வேண்டும். அழகும், மேன்மையும், ஒளியும் நிறைந்திருக்கிறது. இன்று எனக்கு வேண்டியதெல்லாம், நானும் அதில் ஒருப் பங்காக இருக்க வேண்டும் என்பதே”!

4) ப்ரிசில்யா மதன்

மும்பைக் கல்லூரி ஒன்றில், கணினியில் முதுநிலைக் கற்கும் 22 வயது மாணவி ப்ரிசில்யா மதன். எந்த வழிமுறைக் குறிப்புகளும் இல்லாமலே, மும்பையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பன்வெலில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்தவர். தூரத்தைப் பற்றியும், சாலையின் சரிவுகளைப் பற்றியும், வழியில் தனக்கு உதவும் மனிதர்களைப் பற்றியும் மட்டும் தான் நினைத்துக் கொண்டே இருந்ததாய் சொல்கிறார். தன் 1800 கி.மீ பயணத்தில் போது, 18 இரவுகளிலும் ஹோட்டல்களில் தங்காமல், தான் முதன் முறையாக சந்திக்கும் மக்களின் வீடுகளில் தங்கியிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளின், தனிமையான பகுதிகளைக் கடக்க நேர்ந்த போதும், எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் ஆளானதில்லை என்கிறார்.

ப்ரிசில்யாவின் பயண மந்திரம்: “ பெருமிதத்தை சுயமாக கண்டுபிடிக்கும் ஒரு பயணமாகத் தான் இருந்தது”. வீடுகளில் அடைக்கப் பட்டிருக்கும் தன்னைப் போன்ற இளம் பெண்களும், மகளிரும் அதிலிருந்து வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வை செய்ய விரும்பியதாய் கூறுகிறார்.

5) பர்விந்தர் சாவ்லா

15 வயதான போது, பர்விந்தருக்கு, முடக்கு வாதம் இருப்பது கண்டறியப்பட்டது. தேர்ந்த கதக் நடன மங்கையாகவும், ஓடி ஆடி விளையாடிய பெண்ணாகவும் இருந்த பர்விந்தரின் உற்சாகத்தை இழக்கச் செய்தது வீல் சேர். அவரால் நடக்க முடியாவில்லை, ஆனால், அவருடைய கனவுகள் நிலைபெற்று இருந்தன. இன்று, தன் 46 வயதில், வீல் சேரோடு, உலகை தனியாக சுற்றும் துணிச்சல் பெண் அவர். அமெரிக்கா, ஜகார்த்தா, பாலி உட்பட பதினோரு நாடுகளுக்கு பயணித்திருக்கிறார்.

பர்விந்தரின் பயண மந்திரம் : “உடல் ஊனமுற்றவர்களின் தேவைகளின் பிரதிநிதியாக இருந்து, அந்தத் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வேலையை நோக்கித் தான் திட்டமிட்டிருக்கிறேன்”.

6) பிண்ட்ஸ் கஜ்ஜார்

ஒரு தாய், பைக் ஒட்டுனர் மேலும் பலருக்கு ஊக்கம் எனப் பன்முகத் திறமைக் கொண்ட பிண்ட்ஸ் கஜ்ஜரின் முதல் பயணம், இந்தியாவிலேயே நீளமான, குஜராத் கடற்கரையோரம் 2011ல் தொடங்கியது. குஜராத் கடலோர மாசு விழிப்புணர்வு பைக் பேரணியைப் போலவே, இந்த பயணம், கட்சின் லாக்பட்டிலிருந்து, மும்பை அருகில் இருக்கும் உம்பர்காவுன் வரை 1650 கிலோமீட்டர்களை கடந்தது. 2005 ல் மேற்கு இமாலயத்தில் இருக்கும், உத்தரகாண்டின் மலர்களின் பள்ளத்தாக்கிற்கும், கர்வால் இமாலயத்தில் இருக்கும் ஹர் கி டுன்னிற்கும் தனியே பயணித்திருக்கிறார். இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ பெண் பைக் ஓட்டுனர்களுக்கான அமைப்பான ‘பைக்கர்னி’யோடு இணைந்து பைக் ஓட்டியிருக்கிறார். தன் பயணங்களின் மூலமாக லிம்கா சாதனை புத்தகத்திலும் பெயர் பதித்திருக்கிறார்.

பிண்ட்ஸ் கஜ்ஜாரின் பயண மந்திரம் : “மகிழ்ச்சியை எங்கு கண்டாலும் அனுபவிக்க நாம் தகுதியானவர்கள் என்றும் வயது எதற்குமே தடையில்லை என்றும் நாம் உறுதியாக நம்புகிறேன்”.

உங்கள் பயணம் எத்திசையில்? நிச்சயமாக, உங்கள் பயண அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும்!

ஆக்கம் : Prateeksha Nayak | தமிழில் : Sneha

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பயணம் தொடர்பான கட்டுரைகள்:

உலகைச் சுற்றும் சாகசத் தம்பதியர்!

சிறு நகரங்களில் தங்குமிட வசதி செய்யும் ‘விஸ்டா ரூம்ஸ்’ நிறுவப்பட்ட கதை!