நிஜ வாழ்விலும் மக்களின் மனம் கவர்ந்த ஹீரோயின் 'மஞ்சு வாரியார்'

0

கதாநாயகிக்காக கதை எழுதும் ஒரு டிரண்ட் மலையாளத்தில் உருவாகவும் காரணமாக இருந்தவர் மஞ்சு வாரியர்

'36 வயதினிலே' இது திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்திக் கொண்ட நடிகை ஜோதிகா மீண்டும் நடித்தப் படம். தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடிப்பார் என்று எதிபர்க்கப் பட்டாலும் அது இதுவரை நடைப்பெறவில்லை. ஆனால், 36 வயதினிலே படத்தின் மூலக்கதையான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' எனும் மலையாளப் படம் கேரளாவில் பெரும் வர வேற்பை பெற்றிருந்தது. அதில் நடித்த நடிகை மஞ்சு வாரியாரும் ஒரு இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்தவர்தான். ஆனால், தனது 36 வது வயதில் மீண்டும் நடிக்க வந்த அவருக்கு, இரண்டாவது இன்னிங்க்ஸ் பெருமளவுக்கு கைகொடுத்துள்ளது.

மஞ்சு வாரியார் ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு நடன கலைஞர்ரும் கூட. 1978 -ல் நாகர்கோயிலில் பிறந்த மஞ்சு வாரியார், பின்னர் வளர்ந்தது எல்லாம் சொந்த மாநிலமான கேரளாவில். கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் மத்தியில் அரசு நடத்தும் கலை விழாக்கள் அங்கு மிகவும் பிரசித்தம்.

அதில் வெற்றி பெறுவது என்பது மாநிலத்தின் சிறந்த கலைஞர் விருது பெறுவது போன்றது. அப்படி மாநிலம் முழுதுமான பல்கலைகழகங்களுக்கு இடையே நடந்த கலை நிகழ்சிகளில் பரதம், மோகினி ஆட்டம், குச்சுபுடி என்று கலந்து கொண்டு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் 'கலா திலகம்' பட்டத்தை பெற்றார், பல்கலை வித்தகியான மஞ்சு வாரியார்.

அப்படி பிரபலமடைந்த மஞ்சு வாரியாருக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே அவரது 17 ஆம் வயதில் முதல் திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது. அப்படி 1995 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறைக்குள் புகுந்த மஞ்சு, ஐந்து ஆண்டுகள்தான் நடித்தார். அதற்குள் மோகன்லால், சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்புக்கள் தேடிவந்தன.

தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது, பிலிம் பேர் விருதுகள் என்று பல விருதுகளையும் பெற்று சிறந்த குணச்சித்திர நடிகை என்கிற பெயரையும் பெற்றிருந்தார். இப்படி மார்கெட் உச்சியில் இருந்த மஞ்சு வாரியார், 1998 ஆம் ஆண்டு திடீரென நடிகர் திலீப்பை காதலித்து மணமுடித்தார். அதோடு நடிப்புக்கு முழுக்குப் போட வேண்டிய நிலைக்கு எல்லா நடிகைகளைப்போல் அவரும் தள்ளப்பட்டார். பின்னர் கால ஓட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மண முறிவில் சென்று முடிந்தது.

16 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு சாட்சியான அருடைய மகள் மீனாட்சியுடன் தற்போது தனி வாழ்க்கையை தொடங்கி உள்ளார், மஞ்சு வாரியார். அப்போதுதான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது மேடையில் மீண்டும் நடன நிகழ்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அதுவே திரைப்படங்களில் அவரது அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்குவதற்கு வாய்ப்புக்களையும் உருவாக்கி கொடுத்தது. அப்படித்தான் 2014-ல் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் நாயகி ஆனார். அது கதா நாயகிக்கு முக்கியத்துவம் தந்தக் கதை என்பதால் அவரது நடிப்புத் திறமைக்கும் தீனியாக அமைய, மீண்டும் மலையாள ரசிகர்கள் அவரை கொண்டாடத் தொடங்கினார்கள்.

'நச்சு இல்லாத மாடி தோட்டக் காய்கறி' எனும் விழிப்புணர்வு கேரளம் முழுவதும் பரவ அந்த படம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பலனாக 5 படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது ஆண் கைப்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் ஆக ஒரு படத்திலும், தபால்காரியாக ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டுக்கும் இன்னும் பெயர் வைக்கப்படவில்லையாம். இப்படி கதாநாயகிக்காகக் கதை எழுதும் ஒரு டிரண்ட் மலையாளத்தில் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறார், மஞ்சு வாரியார்.

விளம்பரங்களும், பிராண்ட் அம்பாசிடர் பொறுப்புக்களும் தொடர்ச்சியாக தேடிவர, அவற்றில் மட்டுமே மூழ்கி விடாமல் ஒரு சமூக பொறுப்பாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார், 37 வயது மஞ்சு வாரியார். 2015 ஆம் ஆண்டு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சிகளில் மெடல்கள் வாங்கிய முதல் 15 ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். அவர்களுடைய படிப்பு செலவுகளையும் கவனித்து வருகிறார்.

அதோடு நில்லாமல் கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் விதமாக திருவனந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட முக்கிய கேன்சர் மருத்துவ மனைகளுக்கு சென்று நோயாளிகளுக்கு உற்ற தோழியாக செயல்பட்டு வருகிறார். நடமாடும் கேன்சர் சிகிச்சை மருத்துவ வாகனம் ஒன்றையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். நடன நிகழ்சிகள் மூலம் கேன்சர் நோய் சிகிச்சைக்கான நிதி திரட்டும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். இப்படியாக அவரது பொது சேவையும் ஒரு பக்கம் தொடர்கிறது.

ஒரு நடிகை என்பதைத் தாண்டி அவரது சமூக பணிகள் குறித்து கேட்ட போது,

" எந்த காரணமும் இல்லை. திடீரென்று மனதில் தோன்றியது செய்கிறேன் அவளவுதான்.."

என்று கூறும் மஞ்சு வாரியார் அண்மையில் சென்னை அப்பொல்லோ மருத்துவ மனைக்கு வந்திருந்தார். இதயம் மற்றும் நுரை ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல்நலம் தேறிவரும் அம்பிளி பாத்திமா எனும் சிறுமி குறித்து பத்திரிகைகள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்திருந்தார். கேரள மக்களின் மனம் கனிந்த நன்கொடையோடு தாமும் அந்த மாணவியின் சிகிச்சைக்கு ஒரு தொகையை தருவதாக கூறியுள்ளார். நடிகை மஞ்சு வாரியார் தம்மை பார்க்க வந்தபோது செல்ஃபி எடுத்துக் கொண்டதில், அம்பிளி பாத்திமாவின் பாதி நோய் குணமாகி விட்டது போன்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்த பரிவைத்தானே ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள்..!

மலையாளத்தில்: சுஜிதா ராஜீவ் | தமிழில்: ஜெனிட்டா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பன்முகத்திறமை கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்:

'வானமே எல்லை': நடிகை தாப்ஸி, சினிமா முதல் தொழில்முனைவு வரை!

நடிகை, முதலீட்டு வங்கியாளர், தொழில்முனைவர் என பல்முகம் கொண்ட சுமா பட்டாச்சார்யா!