அஞ்சேல் 4 | காத்திருக்கப் பழகு! - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 1]

'விக்ரம் வேதா' மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பகிரும் அனுபவக் குறிப்புகள்.

1

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

சென்னைக்கு வந்த புதிதில் மாதவனின் 'தம்பி' படத்துக்கான இசைப் பணிகளை எட்ட நின்று வியப்புடன் கவனித்து வந்தேன். இப்போது மாதவனின் 'விக்ரம் வேதா' மூலம் இசையமைப்பாளராக கவனம் ஈர்த்திருக்கிறேன். இதற்கு இடையிலான காலக்கட்டத்தில் என்னை நானே செதுக்கிக் கொண்டு 'காத்திருந்தது'தான் என் திரைப் பயணத்துக்கு அடித்தளம்.

நான் பிறந்தது கம்பம். வளர்ந்தது மூணார். தாத்தா ஹார்மோனிய இசைக் கலைஞர். அவர் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து இசை மீது எனக்கும் ஆர்வம் தொற்றியது. நான் படித்தது, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் என்பதால் என் அன்றாட வாழ்க்கையே இசையோடு தொடர்புடையதாக இருந்தது. இசைதான் எனது கலைத் தொழிலாக மாறப் போகிறது என்று தெரியாத சிறுவயதில் முழுக்க முழுக்க இசை நிறைந்த இடங்களிலேயே வலம் வந்துகொண்டிருந்தேன்.

மூணாரில்தான் பள்ளிப் படிப்பும், இளங்கலைப் படிப்பும். திருச்சி செயின்ட் ஜோசப்பில் எம்.சி.ஏ. முடித்தேன். அதன்பின், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். என்னதான் நல்ல ஊதியம் கிடைத்தாலும், பணியில் மனநிறைவு என்பது எனக்குத் துளியும் கிடைக்கவில்லை. இங்கே மிகைப்படுத்திச் சொல்லவில்லை. என்னால் உண்மையிலேயே முழு ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், என் ஆத்ம திருப்திக்காக ஆல்பம், விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினேன். சின்னச் சின்ன ஆல்பங்கள், விளம்பரப் படங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதே அரிதாக இருந்தது. எனினும், தொடர் முயற்சிகளால் இசையோடு பயணிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

சினிமாவில் மட்டுமல்ல, விளம்பரப் படங்களில் கூட ஜெயிக்கிற குதிரை மீதுதான் நம்பிக்கைக் காட்டுவர். கலைத்திறமை இரண்டாம் பட்சம்தான். எனவே, இசை வாய்ப்புகள் கிடைப்பதே மிக அரிதாக இருந்தது. இப்போது இருப்பதுபோல் 2007-களில் சமூக வலைதளங்கள் எனும் மிகப் பெரிய களங்கள் அன்று இல்லை. எனவே, யாருடைய துணையும் இல்லாமல் நம்மால் நம் திறமைகளை எளிதில் வெளிக்காட்டிட முடியாது. எஸ்.எஸ். மியூஸிக் போன்ற சேனல்களில் வருவதே மிகப் பெரிய இலக்காக இருந்தது.

ஐ.டி. துறையில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். இனியும் இதையே முதன்மையாகக் கருதுவது சரியல்ல என்று முடிவு செய்து திரைத்துறையில் தீவிரம் காட்டத் தொடங்கினேன். அந்தப் பயணம் கடினமானதுதான். ஆனால், அதை எளிதில் சமாளிக்கக் கூடிய வகையில் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.

அந்தக் காலக்கட்டத்தில், சென்னையில் எனக்கு ஒருவரைக் கூட தெரியாது. சென்னைக்கு புதிதாக வந்திறங்கும் இளைஞர்களை சினிமாவில் காட்டுவார்களே, அவர்களைப் போலத்தான் நானும். எனக்கான முகவரிக்குத் தேடித் திரியத் தொடங்கினேன்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.

என் ஆல்பம் ஒன்றைக் கேட்டுவிட்டு 'ஓர் இரவு' எனும் த்ரில்லர் படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அம்புலி 3டி' இயக்குநரின் முந்தையப் படம் அது. ஐ.டி. துறையில் இருக்கும்போதே பகுதி நேரமாகவே பின்னணி இசை அமைத்தேன். 'ஓர் இரவு'க்கு நான் அமைத்த பின்னணி இசையைக் கேட்டு தயாரிப்பாளர் தாணு வெகுவாகப் பாராட்டினார். அதுதான் திரைத்துறையில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு. மேலும், என்னால் சினிமாவுக்கு இசையமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்தது. எனவே, சினிமாவின் கதவைத் தட்டுவதற்காக எந்தத் தயக்கமும் இல்லாமல் என் ஐ.டி. வேலையைத் துறந்தேன்.

சினிமாவில் ஓர் இளம் இசையமைப்பாளரின் வெற்றியை அவரது இசை மட்டுமே நிர்ணயித்துவிடாது. நட்சத்திரங்களை உள்ளடக்கிய வெற்றிப் படங்கள்தான் பெரும்பாலும் ஒரு படத்தின் இசையமைப்பாளரை கவனிக்க வைக்கிறது. குறிப்பிடத்தக்க வெற்றி பெறாத படத்தில் இசை மிகச் சிறப்பாக வந்திருந்தால் கூட, அங்கே இசையமைப்பாளர் எவராலும் கவனிக்கப்பட மாட்டார். எனவே, இசையமைப்பாளருக்கு மிகப் பெரிய முகவரி தேவைப்படுகிறது.

'ஓர் இரவு'க்குப் பிறகு, 'அம்புலி 3டி' பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைத்தோம். இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் எனது பங்களிப்பாக இருந்தது.

அதன் பிறகுதான் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டது. எனக்கென சரியான வாய்ப்புகள் வரவில்லை. திரை இசையில் பங்கு வகிக்கக் கூடிய 'ப்ரோகிராமிங்' பிரிவில் நிறைய படங்களில் பங்கு வகித்தேன். ஆனால், என் மனதுக்கு நிறைவு தரக் கூடிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

எனினும், திரை இசை குறித்த தேடல்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டே இருந்தது. இசைக்கு மொழி இல்லை. ஆங்கிலப் படங்களில் பெரும்பாலும் உணர்வுகளை இசை வழியே பார்வையாளர்களுக்குக் கடத்துவர். அது இங்கே அதிகம் இல்லை என்பதால், அதையொட்டி நிறைய கற்றுக்கொண்டேன். நான் வளர்ந்தது இளையராஜா சார், ரஹ்மான் சார் பாடல்களைக் கேட்டுதான். அவர்கள் வழியில் தனித்துவம் காட்டவேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தேன்.

விக்ரம் வேதா படக்குழுவில் இசையமைப்பாளர் சாம்
விக்ரம் வேதா படக்குழுவில் இசையமைப்பாளர் சாம்

சுமார் நான்கு ஆண்டுகள் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இசையமைப்பாளர்களிடம் ப்ரோக்ராமிங் செய்து கொடுக்கும் வாய்ப்புகள் மட்டும் கிடைத்து வந்தன. அதைக் கச்சிதமாக செய்து வந்தேன். காத்திருப்பு பழகிப்போக ஆரம்பித்தது.

அந்த நேரத்தில், சின்னச் சின்ன படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பணம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதைச் செய்யவுமில்லை. சின்னப் படங்கள் என்றால் வெறும் பட்ஜெட் சார்ந்தது அல்ல; எனக்கு நிறைவு தராத கதை - திரைக்கதைகளைக் கொண்ட படங்களைச் சொல்கிறேன். அப்படிப்பட்ட படங்களை ஒப்புக்கொண்டு செய்திருந்தால் என் திறமையை நானே வீணடித்திருக்கக் கூடும். 

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல; தேவையற்ற வாய்ப்புகளை நிராகரிப்பதிலும் நமக்கு கவனம் அவசியம். காலம் கடந்தாலும் பரவாயில்லை; காத்திருப்பதில் தவறில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

'விக்ரம் வேதா'வுக்கு முன் முதலில் கமிட் ஆனது, என் நண்பர் இயக்கிய 'புரியாத புதிர்'. 2003-ல் நடிகர் விஜய் சேதுபதி நட்சத்திரமாக வலம்வரத் தொடங்கிய காலக்கட்டம். பல்வேறு காரணங்களால் அப்படம் வெளியாவதில் மிகவும் தாமதம் ஆனது. கடந்த ஆண்டு அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது, இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு சில விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துத் தந்திருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருந்த மிகப் பெரிய நம்பிக்கையின் அடையாளமாகவே 'விக்ரம் வேதா' எனும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் நடிக்கும் அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டைப் படித்து மிரண்டு போனேன். அந்தப் படத்துக்கு உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களில் எவரேனும் பங்கு வகித்திருந்தால் இன்னும் வேற லெவலில் வந்திருக்கும். பிரபல இசையமைப்பாளர்கள் நிச்சயம் அந்தப் படத்துக்கு இசையமைக்க முன்வந்திருப்பர். ஆனால், எல்லாவற்றையும் மீறி புஷ்கர் - காயத்ரி என் மீது நம்பிக்கைக் கொண்டு வாய்ப்பு கொடுத்ததை, என் ஒட்டுமொத்த திறமைகளையும் காட்டுவதற்கான சவால்மிகு வாய்ப்பாகக் கருதினேன். 'விக்ரம் வேதா'வும் பெரிய அளவில் வெற்றி பெற்றது; நானும் ஓர் இசையமைப்பாளராக கவனிக்கப்பட்டேன். இப்போது தமிழ், மலையாளம், இந்தி என 14 படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன்.

ஓர் இசையமைப்பாளராக நான் கவனம் ஈர்ப்பதற்கு 'விக்ரம் வேதா' உறுதுணை புரிந்தது. என் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதைத் தாண்டி வேறொரு விஷயத்தையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

திரைத்துறையில் திறமையாளர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு படம் கூட இசையமைக்காவிட்டாலும் என்னைவிட திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள். நம் சினிமா உலகில் 'வாய்ப்புக் கிடைத்தவர்கள்', 'வாய்ப்புக் கிடைக்காதவர்கள்' என இரண்டே வகையினர்தான் இருக்கின்றனர். வென்றவர்கள் - தோற்றவர்கள் எவரும் இல்லை. வெற்றி என்று சொல்லப்படுவதை நிர்ணயிப்பதே சரியான வாய்ப்புகள்தான்.

சினிமாவில் ஈடுபாட்டுடன் இயங்கும் கலைஞர்களில் பெரும்பாலானோருக்கும் பணம் சம்பாதித்தல் என்பது இரண்டாம் பட்சம்தான். சினிமா எனும் வடிவத்தில் தங்கள் கலைத்திறன் மூலம் மக்களை மகிழ்வித்து, அவர்களின் பாராட்டு மூலம் அன்பைப் பெறுவதுதான் முக்கிய நோக்கம். குறிப்பாக, தங்கள் படைப்பாற்றல் மக்களைப் பரவலாகச் சென்றடைவதும், அவர்களால் கொண்டாடப்படுவதும்தான் முதன்மையான இலக்காக இருக்கும்.

இசை என்பதே ஒரு பாசிட்டிவ் போதை. எல்லா விதமான கலைகளுமே இப்படித்தான். கலை உலகில் கவனம் பெறுவதற்கு ஒரு பக்கம் நம் திறமைகளை மேம்படுத்துவதில் ஈடுபாடு காட்டும் அதேவேளையில், இன்னொரு பக்கம் சரியான வாய்ப்புகள் வரும் வரை காத்திருத்தலும் அவசியம். அதுவரை நம் வாழ்வாதாரத்தை சமாளிக்க வேண்டும்.

திரைத்துறை மூலம் வருவாய் ஈட்டத் தொடங்குவதற்கு முன்பு, ஐ.டி. வேலையை உதறிய பிறகு எனக்கும் பணப் பிரச்சினைகள் இருந்தன. வெப்சைட் டிசைனிங் போன்ற பகுதி நேரப் பணிகளைத் தேடிப் பெற்று செய்வேன். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இசைக் கருவிகள் வாங்குவேன்.

நமக்கான இலக்கு என்று ஒன்று இருக்கும். அந்த இலக்கை மட்டுமே நோக்கிச் சென்றுகொண்டிருந்தால் நிச்சயம் திணறித் தவிக்க வேண்டியது வரும். இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; அதற்குப் பக்கபலமாக இருக்கக் கூடியவற்றிலும் கவனம் செலுத்துவதுதான் சரியான அணுகுமுறை.

வாழ்வாதாரம் என்பது மிகவும் முக்கியம். நமக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம் இலக்குகளுக்குத் தொடர்பில்லாத வருவாய் சார்ந்தப் பணிகளைச் செய்ய நேர்ந்தாலும், அதைச் செய்துகொண்டே பாதை மாறாமல் பயணிப்பதுதான் சிறப்பு.

பொருளாதாரத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான் 'இசையமைப்பாளர் ஆக வேண்டும்' என்ற ஒன்றை இலக்குடன், அதற்காக மட்டுமே 10 ஆண்டு காலம் முழுமையாக இயங்கி வந்திருந்தால், நம் இந்தியச் சூழலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கவே முடியாது. எனக்குக் கிடைத்த பகுதி நேர வேலைகளை சர்வைவலுக்காக செய்துகொண்டே இசையில் கூடுதல் கவனம் செலுத்தியதால் இதோ இப்போது நான் இருக்கும் 'இடம்' சாத்தியமாயிற்று.

'விக்ரம் வேதா' பின்னணி இசையில் கையாண்ட உத்தி மட்டுமல்ல; இனி நான் இசையமைக்கும் படங்களுக்கும் உறுதுணையாக அமையப்போகும் அம்சங்களும் எனது காத்திருப்புக் காலத்தில் நான் மேற்கொண்ட பயிற்சிதான்...

***இன்னும் பகிர்வேன்***

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்