பளு தூக்குதலில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள தமிழன்!

0

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர வேற எந்த போட்டியும் இல்லை என்பது போல நாம் அனைவரும் அதிலே மூழ்கி கிடக்கிறோம். சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் செய்தி பேசப்படும் அளவுக்கு வேற எந்த விளையாட்டும் பேசப்படுவதில்லை. இருப்பினும் சிலர் மற்ற விளையாட்டை தங்கள் வாழ்க்கையாய் எடுத்துக்கொண்டு ஜெயித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறு பளு தூக்குதலை தன் இலட்சியமாகக் கொண்டு சமீபத்தில் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான வெயிட் லிப்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் வால்டர் அருண்குமார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த வால்டர் அருண்குமார் (33) தற்போது சென்னை அம்பத்தூரில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். உடற் பயிற்சியாளராக இருக்கும் இவர் பல போராட்டங்களுக்குப் பிறகு அசாமில் தேசிய அளவில் நடைப்பெற்ற “ஸ்ரென்த் லிப்டிங் போட்டியில்” (Strength Liftin) வென்றுள்ளார்.

“சிறு வயதில் நான் மிக ஒல்லியாய் இருப்பேன், என் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளானேன். அதன் பின்னரே ஜிம் போக வேண்டும் உடலை கட்டுகோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பின் இதுவே லட்சியமாகவும் தொழிலாகவும் மாறிவிட்டது,” என்கிறார் அருண்குமார்

மாவட்ட மற்றும் மாநில அளவில் இதுவரை 38 பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு போட்டியில் கலந்துக்கொள்ளவும் பல தடைகளை சந்தித்துள்ளார் அருண்குமார். எந்த வித பயிற்சியாளரும் இல்லாமல் தானாகவே கற்று முன்னேறியுள்ளார்.

“எனக்கு எந்த வகையிலும் யாரும் உதவில்லை. எனக்கு தேவையானவற்றை நானே ஏற்பாடு செய்து கொண்டேன். குடும்பத்திலிருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கென்று ஸ்பான்சர்ஸ் என்று எவரும் இல்லை,” என்று வருந்தினார்.

குடும்பம், வாழ்க்கை சூழ்நிலை, தொழில், பணம் என்று தனது வாழ்க்கையில் பல முட்டுக்கட்டை இருந்தாலும் சுயமாக உழைத்து தன் லட்சியதிர்க்கான படியை ஒவ்வொன்றாங்க ஏறி வந்துள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் போல நம் நாட்டில் பளு தூக்குதலில் வரவேறப்பு இல்லாத காரணத்தினால் அருண்குமார் போல லட்சியம் கொண்டுள்ள பலர் வெளியே வர முடியவில்லை.

“அரசு தங்களைப் போல் லட்சியம் உள்ளவர்களை ஊக்க படுத்த வேண்டும். உடல் பயிற்சிக்குத் தேவையான ஊக்கத்தொகை மற்றும் எந்த பாரபட்சமும் இன்றி தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்,” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

அருண்குமாரின் அடுத்த இலக்கு காமன் வெல்த் கேம் மற்றும் ஒலிம்பிக்ஸ். இவர் தன் லட்சியத்தை அடைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவை. அது மட்டுமின்றி அவரது மற்றொரு லட்சியமான சொந்தாமாக உடற்பயிற்சி கூடம் வைப்பதற்கும் முயற்சித்து வருகிறார். தேசிய அளவில் நம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர் முறையான ஊக்கம் இருந்தால் உலகளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories

Stories by Mahmoodha Nowshin