தனிநபருக்கு ஏற்ப நிறுவனங்களுக்கு சந்தைபடுத்த உதவும் 'மாக்ஸ்மார்க்கெட்'

சென்னை இளைஞனின் லட்சியப் பயணம்

0

இன்றைய காலகட்டத்தில் இருபத்தியைந்து வயது இளைஞன் தொழில்முனைவராக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை, ஆனால் அவரின் தீராத தமிழ்ப்பற்று பற்றி அறியும் பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை. அதுவே அவரின் தொழில் ஆர்வத்திற்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் தமிழ் யுவர்ஸ்டோரி ப்ரேத்யேக நேர்காணல் கண்டது...

சென்னையில் பிறந்து வளர்ந்த லெனின் ஸ்ரீனிவாசன், அண்ணா பல்கலைகழகத்தில் படித்து முடித்து இங்கே ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக தனது வேலையை ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இடம் பெற்றார். "எனது பணி நிமித்தமாக நிறைய தேசங்களுக்கு சென்றுள்ளேன், அதுவும் லிதோனியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு சந்தைபடுத்தும் வாய்ப்பு, எனக்கு மிகுந்த படிப்பினைகளை தந்தது" என்கிறார் லெனின்.

அமெரிக்க பயணம்

2010 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்திற்கு இடம் பெயர்ந்தேன். அங்கு புதிய கிளையை நிறுவி வர்த்தகத்தை மேலும் விரிவு படுத்துதலே என் தலையாய பணி. செம்மொழித் தமிழ் மேல் உள்ள பற்று, மாலை நேரங்களில் அங்குள்ள ஒரு பல்கலைகழகத்தில் தமிழ் மொழி கற்பிக்க தூண்டியது. "பிற நாட்டு இளைஞர்கள் தமிழ் மொழி பயில வந்தது சந்தோஷம் அளித்தாலும், நமது நாட்டு இளைஞர்கள் மேலும் மொழியை அறிந்து கொள்ள முயலாதது வருத்தத்தை அளித்தது" என்கிறார்.

பின்னர் டெக்சாஸ் மாகாணத்திற்கு இடம் மாறினேன். அமெரிக்க குடியுரிமையும் கிடைத்தது. வாழ்க்கை இலகுவாக சென்றாலும் அடுத்த இலக்கிற்கான தேடல் ஆரம்பித்தது. "பலருக்கு அமெரிக்கா ஒரு கனவு தேசம், நான் அங்கேயே நிரந்தரமாக குடியேற வேண்டும் என்று எண்ணவில்லை, என்றாவது ஒரு நாள் இந்தியா திரும்பும் எண்ணம் வலுவாக இருந்தது. இந்த தேடல் விரைவாகவே அதை ஏற்படுத்திவிட்டது".

மாக்ஸ் மார்க்கெட் உருவாகக் காரணம்

நிறைய சிறுதொழில் நிறுவனங்கள் தங்களின் சந்தைப்படுத்தும் உத்தியில் புதுமையையோ நவீனத்துவத்தையோ பயன் படுத்துவதில்லை, அதுவும் இந்த டிஜிட்டல் உலகில் இது இன்றியமையாதது. இதற்கு முக்கிய காரணம் செயல்பாட்டில் உள்ள தீர்வுகள் அனைத்துமே சிறுதொழில் நிறுவனங்களின் பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

இந்த எண்ணம் பல நாள் என்னுள் இருந்தது, இதை பற்றி அசைபோட்டுக்கொண்டே இருந்தேன்.

"ஒரு நள்ளிரவில் எனது எண்ணத்தையும் அதற்கான தீர்வை பற்றியும் வலைப்பதிவிட்டேன். சில மணி நேரத்தில் என்னுடைய வலைப்பதிவு, "ஒய் காம்பிநேடர்" என்ற தளத்தில் முகப்பு பதிவாக ஒரு நாள் முழுவதும் இருந்தது. ஒரே நாளில் முன்னூற்றைம்பதுக்கும் அதிகமானவர்கள் உண்மையாகாவே இந்த தயாரிப்பை வாங்க முனைவு உள்ளதாக கூறினர்". மிகுந்த உற்சாகத்துடன் எங்கள் தயாரிப்பை சந்தைபடுத்த தீவிரம் காட்டினோம். எனது இந்தியா பயணம் இனிதே ஆரம்பித்தது, "மாக்ஸ் மார்க்கெட்" (Maax Market) பிறந்தது என்கிறார் லெனின் அதன் நிறுவனர்.

ஒரே சிந்தனையுடைய குழுவாக

இந்நிறுவனத்தில் உள்ள அனைவரும் நண்பர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக இணைந்தவர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டால் "நமது வாழ்க்கை நம்மை மற்றவர்களிடம் முன்னிறுத்துவதே" அதுவும் சந்தைபடுத்தும் தயாரிப்பில் தொழில்முனைய இருக்கும் எனக்கு அது பொருட்டாகவே இருத்தல் கூடாது என்று தீர்கமாக கூறுகிறார். என்னுடைய எண்ணத்தை ஆர்வத்தை பகிர்ந்து கொண்ட பொழுது அவர்களும் ஒத்த சிந்தனையில் இருந்ததால் சவாலாக இருக்க வில்லை.

இவர்களது குழுவில் அநேகமாக தொழில்நுட்ப வல்லுநர்களே இருந்தாலும், ஒரு வழக்கறிஞரும், சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றும் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். லட்சியம் மற்றும் சிந்தனை இவர்களை ஒன்றிணைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

"எங்களில் முக்கியமானவர், முனைவர் அணி என்று எதுவுமில்லை. அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை. அனைத்து செயல்களிலும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து பணியாற்றிக்கொள்வோம்" என்கிறார் லெனின்.

தன்னுடைய சேமிப்பான இருபாதயிரம் டாலர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறும் லெனின், இந்த ஒன்றரை மாதத்தில் நாங்கள் ஒருவர் கூட சம்பளம் என்று எதையும் பெற்றுக் கொண்டதில்லை என்கிறார்.

இது மற்றவர்களுக்கு எவ்வாறு சாத்தியப்படுகிறது என்று கேட்டோம், ஏனென்றால் இந்த குழுவில் பெரும்பாலோனோர் திருமணமடைந்தவர்கள். ஒவ்வொருவரின் ஈடுபாடும் வியக்க வைக்கிறது. ஷபீர் ஏற்கனவே மூன்று தொழில்முனை நிறுவனங்களை ஆரம்பித்தவர் என்பதால் இதில் உள்ள சவால்களை மதிக்கிறார். திலீபன் தொழில்முனை ஆர்வத்தில் இருந்தவர். ராம் வக்கீல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆக ஒவ்வொருவரும் இதை ஈடுபாட்டுடன் லட்சியப் பயணமாக கொண்டுள்ளதால் சிரமம் பார்க்கவில்லை என்றே கூறுகின்றனர்.

மாக்ஸ் மார்க்கெட் தீர்க்கும் சவால்

தற்போதைய ஆன்லைன் மற்றும் நவீன தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து தக்க சமயத்தில் அவர்களுக்கேற்ற சேவையை ஆற்றுவதும், அவர்களை தக்க வைத்துக் கொள்வதும் பெரும் சவால். உதாரணமாக நாம் ஆன்லைனில் ஒரு பொருள் வாங்க முற்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வாங்கும் முடிவை தாமதப்படுத்தினாலோ அல்லது நமக்கு தேவையான பொருள் இல்லை என்ற சந்தர்பத்தில் பெரும்பாலும் நிறுவனங்கள் ஒரு மின்னூட்டலை அனுப்புகின்றன. பெரிய நிறுவனங்கள் தவிர்த்து மற்றவை பெரும்பாலும் வாடிக்கையாளரின் தேவையறிந்து பிற்காலத்தில் நுண்ணறிவு கொண்டு அவர்களை தங்களின் நிறுவன பொருட்களின் மேல் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதில்லை. இங்கு தான் "மாக்ஸ் மார்க்கட்" தன்னுடைய தயாரிப்பின் மூலமாக சிறு நிறுவனங்களும் இது போன்ற வாடிக்கையாளர்களின் நலனை கொண்டு தங்களின் சேவையை பிரத்யேகமாக அவர்களுக்கென முன்னிறுத்த உதவுகிறது.

இவர்களின் தற்போதைய வாடிக்கையாளர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டில் உள்ள நிறுவனங்கள் தான்.

நிதி திரட்டும் எண்ணம் பற்றி

நிதி திரட்டும் போக்கை பற்றி லெனின் வைத்துள்ள கருத்து ஆச்சர்யப்பட வைக்கிறது. பெரும்பாலான தொழில்முனை நிறுவனங்கள் நிதி திரட்டும் இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த கால கட்டத்தில், லெனின் இதில் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை கொண்டுள்ளார். 

"தொடங்கிய சில மாதங்களிலேயே, நிதி திரட்டும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நம் தயாரிப்பை கொண்டு தானாக வருவாய் ஈட்ட முற்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவை அறிதல், அதற்கேற்ற தீர்வில் ஈடுபடுதல் என்ற இலக்கை முன்னிறுத்தி சென்றால் நமக்கு தேவையான நிதியை நாமே சம்பாதிக்க முடியும். நம் தொழிலை ஸ்திரப்படுத்தி விட்டோமேயானால் நிதி திரட்டுவது இலகுவாகவே அமையும்" என்று கூறும் லெனின் முதலீட்டாளர்களின் நலனும் முக்கியம், இதுவும் அவர்களுக்கு ஒரு வர்த்தக செயல்பாடு என்ற எண்ணம் வேண்டும் என்கிறார்.

இலக்கு

எண்ணத்திலிருந்து முதல் செயல்வடிவம் பெற இரண்டே வாரங்கள் தான் ஆயிற்று. முன்னூற்றைம்பது வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் தற்பொழுது ஐம்பது நிறுவனங்கள் எங்களது தயாரிப்பை பீட்டா தணிக்கையில் ஈடுபடுத்தியுள்ளன. இதிலிருந்து ஐந்து நிறுவனங்கள் இந்த டிசம்பர் மாதத்திற்குள் எங்களின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் ஐநூறு வாடிக்கையாளர்களும் மூன்று மில்லியன் டாலர் வருமானம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

தீர்கமான பயணத்தை நோக்கி தன்னை செலுத்திக் கொள்ளும் லெனின் ஆசைப்படுவதெல்லாம், இந்த வெற்றி அவருடைய கனவு திட்டமான செம்மொழி தமிழை பாதுகாத்து அதற்கான கலௌட் முயற்சியை வெற்றிகரமாக முடிக்க வழி வகை செய்ய வேண்டும் என்பதே.

"என்னை தொழில் முனைய உந்தியது இந்த தமிழ் கலௌட் திட்டம் தான், அதை செம்மையாக செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம்" என்று நிறைவு செய்கிறார் லெனின்.

இணையதள முகவரி Maax Market