கல்வியுடன் நல்லிணக்கத்தை போதிக்கும் அரசு சாரா நிறுவனம் தொடங்கியுள்ள 19 வயது மேகனா!

மேகனா தப்பாரா ’மேக் தி வேர்ல்ட் வொண்டர்ஃபுல்’ என்கிற அரசு சார நிறுவனத்தை நிறுவி 2023-ம் ஆண்டிற்குள் 2,500 குழந்தைகளுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளார்

1

தென்னிந்தியாவின் ஹைதராபாத்தின் எல்லைப்பபுறங்களில் 50 குழந்தைகளுக்காக ஒரு சமத்துவமான சாம்ராஜ்யம் உருவாகியுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு முன்பு உதவி தேவைப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் இதை நிர்வகிக்கும் அளவிற்கு பயிற்சிபெற்றுள்ளனர். வருந்தத்தக்க பின்னணியின் காரணமாக ஏற்பட்ட இவர்களது காயங்கள் கல்வியின் வாயிலாக குணப்படுத்தப்படுகிறது.

ஆனால் இது சாதாரண கல்வி அல்ல. இதில் அறிவியலுடன் மனசாட்சியும் போதிக்கப்படுகிறது. இசையால் மட்டுமல்லாமல் நல்லிணகத்தால் அவர்களது வாழ்க்கையை நிரப்புகிறது இந்த கல்வி முறை.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயதான மேகனா தபாரா வடிவமைத்த பாடதிட்டமானது ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த மாடலில் நலிந்தோர் இவரது பள்ளியில் தங்கி படிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, சாதி, மதம் வர்க்கம், நிறம் ஆகியவற்றில் சமத்துவம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறது. மேலும் இந்த கற்றல் முறையானது உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் அளவிற்கு உள்ளது.

உலகை அற்புதமாக மாற்ற விரும்புகிறார் மேகனா தபாரா.


கடந்து வந்த பாதை…

ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தாபூர் மாவட்டத்தில் குண்டக்கல் என்கிற ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார் மேகனா. அவரது அம்மாவின் கிராம வாழ்க்கை ஒற்றுமையோடு அமைந்திருந்தது குறித்த கதைகளைக் கேட்டு வளர்ந்தார் மேகனா.

”இன்று நான் இவ்வாறு இருப்பதற்கு அவரது கதைகள்தான் முக்கிய காரணம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒருவர் அடுத்தவருக்கு உதவ முன்வராமல் இருக்கும் மனப்பாங்கை உணர்ந்தேன். இதனால் உலகில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கத் தீர்மானித்தேன்.” என்றார்.

பதின் பருவத்தை அடைந்ததும் சிறப்பான உலகை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளத் துவங்கினார். அவருக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டதால் iB க்ரூப்பில் வழிகாட்டுதலுக்கான ப்ரோக்ராமிற்காக விண்ணப்பித்தார். இதில் மதிப்பு சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் கற்றுக்கொடுக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நிறுவனத்தைத் துவங்க தீர்மானித்தார். மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே அவரது நோக்கம். இதை அடைவதற்கு அது சரியான நேரம் என்று நினைத்தார். அப்போது அவருக்கு வயது 17.

iB குரூப்பின் iB ஹப்ஸ் என்கிற ஸ்டார்ட் அப் ஹப் மூலமாக ஒரு தனிக்குழுவை அமைக்கத் துவங்கினார். ஹைதராபாத்திலிருந்து கியாதி, கலிஃபோர்னியாவச் சேர்ந்த சௌம்யா கதூரி (18), நியூ யார்க்சைச் சேர்ந்த பிரணிதா கரிமிலா ஆகியோருடன் இணைந்தார். வயது ஒரு தடையல்ல. இதுவே சரியான வாய்ப்பு. சரியான நபர்கள் உடன் இணைந்தனர். எனவே புதிதாக துவங்க இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்தார். ”வயது என்பது எண்ணிக்கை மட்டும்தான். நோக்கத்தில் தெளிவு இருந்தது. நான் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன் என்பதில் தெளிவு இருந்தது. ஸ்டார்ட் அப்பிற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை இந்தத் தெளிவுதான் உணரவைத்தது.” என்றார்.

ஆனால் அவருடைய முடிவை சமுதாயம் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றபோது சமூகம் என்னிடம் பல கேள்விகள் எழுப்பியது. ஆனால் என் மனம் தெளிவாக இருந்தது. என் பெற்றோரும் iB Hubs-ம் எனக்கு ஆதரவளித்தது.” என்றார்.

சௌம்யாவும் ப்ரனிதாவும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு திரும்பினர். நால்வரும் அஞ்சல் வழியில் வணிக நிர்வாகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்றனர். ”நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்த அனைத்தையும் களத்தில் நிஜமாகவே பார்க்கும், கற்கும் வாய்ப்பை இந்த அரசு சாரா நிறுவனம் எங்களுக்கு வழங்கியது. முழுநேரமாக இதில் பணியாற்றுவது எங்களுக்குப் பயனளிப்பதாக இருந்தது.” என்றார்.

நமக்கான உலகம்

நல்லிணக்கம் உருவாவதற்கான முதல் படி, பார்வையை மாற்றியமைப்பதுதான் என்பதை மேக்னாவால் உணரமுடிந்தது. நீங்கள் உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள், சுற்றிலும் உள்ள உலகை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். உங்கள் நம்பிக்கைகள், விருப்புவெறுப்புகள், கருத்தாக்கங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம்தான் பார்வை என்பது. இந்தப் பார்வை குழந்தையாக இருக்கும்போதே உருவாகத் தொடங்கிவிடுகிறது. இதுதான் அவர்களுடைய முழு வாழ்வையும் தீர்மானிக்கிறது.

”வளமான ஒரு எதிர்காலம் உருவாகவேண்டுமானால் குழந்தைகளுக்கு நேர்மறையான மதிப்பீடுகளையும் நல்ல குணநலன்களையும் வளர்த்தெடுக்கவேண்டும், என்பதை உணர்ந்தோம். சரியான ஒரு பார்வையைக் கட்டமைப்பதுதான் இதற்கான தீர்வு. இளம் வயதிலேயே இதைச் சாத்தியப்படுத்த முடிந்தால் அவர்கள் வளரும்போது பொறுப்புமிக்கவர்களாகத் திகழ்வார்கள்.” என்றார் அவர்.

இவ்வாறு 2015-ம் ஆண்டு உருவானதுதான் ’மேக் தி வேர்ல்ட் வொண்டர்ஃபுல்’. தற்போது 2023-ம் ஆண்டிற்குள் 2,500 கேப் மையங்களை அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. “எங்களது சைல்ட் அடாப்ஷன் ப்ரோக்ரம் (CAP) மூலமாக நல்லிணக்கத்துடன் அதிகாரமளிக்கும் கலாச்சாரத்தில் குழந்தைகள் வளரக்கூடிய தலைமுறையை உருவாக்க விரும்புகிறோம். சோதனை முயற்சியைத் துவங்கி ஒரு மாதிரியை உருவாக்கி உலகின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.” என்றார்.

இந்த வளர்ச்சியடையக்கூடிய சோதனை திட்டமானது நலிந்தோரின் உணவு, தங்குமிடம், கல்வி என அனைத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் மையமாகும்.

ஹைதராபாத்தின் மேட்செல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் லீஸ் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்றடுக்கு கட்டிடமாகும். இதில் படிக்கும் அறை, நூலகம், ஒரு ஹால், கம்ப்யூட்டர் ஹால், இரண்டு தங்குமிடங்கள், நான்கு படுக்கும் அறைகள், ஒரு சமையலறை, குழந்தைகளால் உருவாக்கப்பட்ட தோட்டம், வெளிப்புற நடவடிக்கைகளுக்காக திறந்த மைதானம் போன்றவை உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கட்டில், மெத்தை, படிக்கும் மேஜை, நாற்காலி போன்றவை இருக்கும்.

”நெருங்கிய வட்டத்திலிருந்தும் iB ஹப்பில் சமூக நலனில் அக்கறை கொண்ட தனிநபர்களாலான நெட்வொர்க்கிலிருந்தும் நிதி பெறப்படுகிறது.” என்றார் மேகனா.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இக்கு சமமான தேசிய அளவில் சான்றிதழ் பெற்ற குழுவான NIOS-ஐ (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்) பின்பற்றுகின்றனர். ”ஒவ்வொரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்களை வழங்கும் விதத்தில் பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும் உலக சமூகத்துடன் இணைந்து செல்லும் குடிமக்களாகவும் குழந்தைகளை உருவாக்குவோம். மதிப்பு சார்ந்த கல்வி வாயிலாக சரியான அணுகுமுறையை ஊக்குவிப்போம்.” என்றார்.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் உதவியுடன் MTWW குழு பாடதிட்டத்தை வடிவமைக்கிறது. இதில் புலனறிவு மேலாண்மை முக்கிய பாடமாகும். இவை மற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தலாம். ”இந்த திட்டத்தில் பார்வை குறித்த வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறோம். மற்றவர்களுடனான உறவுகளை மேம்படுத்துவதுடன் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. பரந்த மனப்பான்மை, தனிப்பட்ட வளர்ச்சி, சிறந்த தன்னம்பிக்கை, சுய மேலாண்மை, உணர்வுசார் நுண்ணறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம்.” என்றார்.

குழந்தைகள் தற்போது 3 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கின்றனர். காலை 5.30 மணிக்கு எழுந்ததும் யோகா பயிற்சி. காலை 9 முதல் மாலை 4 மணி வரை படிப்பு. இடையில் உணவு இடைவேளை. கூடுதல் நடவடிக்கைகளாக வாரத்தில் இரண்டு நாட்கள் நடனம், வாரத்தில் மூன்று நாட்கள் குங்ஃபூ, மாலை 4-6 மணி வரை தோட்டம் மற்றும் விளையாட்டு போன்றவை இருக்கும். “ஒவ்வொரு குழந்தைக்கும் வழிகாட்டிகள் இருப்பார்கள். நாள் நிறைவடைகையில் குழந்தைகளுக்கு தனிப்பட்ட வளர்ச்சிக்கான அமர்வுகளும், கதை சொல்லும் அமர்வுகளும், உறுதிமொழிகள் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்றவை தூங்குவதற்கு முன்னால் நடைபெறும்.” என்று விவரித்தார் மேகனா.

குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும் என்பதற்காக சான்றிதழ் பெற்ற உணவுமுறை வல்லுனரால் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படியே குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. பழங்கள், கஞ்சி, பழுப்பு மற்றும் வெள்ளை அரிசி சாதம், பருப்பு, சப்பாத்தி போன்றவை குழந்தைகளுக்கான உணவில் இடம்பெற்றிருக்கும். ”குழந்தைகளின் பிஎம்ஐ, அதாவது ஒவ்வொரு குழந்தையின் உயரம், எடை போன்றவை ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும்.” என்றார்.


அளவிடக்கூடிய மாற்றங்கள்

இவர்கள் சிலரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமானது மிகவும் முக்கியமானதாகும். நால்கொண்டா என்கிற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் மைனா. இவரது பெற்றோருக்கு விவாகரத்தானதால் இவரது அம்மா இவரை வளர்த்தார். மைனாவின் அம்மாவிற்கு செவிலியர் பணி கிடைத்தது. அதன் பின்னர் ஒரு சிறு தெருவோர கடையை அமைத்தார். மாலை வேளையில் இங்கு காய்கறி விற்பனை செய்தார். இதில் நாள் ஒன்றிற்கு சுமார் 50 ரூபாய் கிடைத்தது. மைனாவிற்கு பள்ளிக்கு செல்ல ஆர்வம் இருந்தது. ஆனால் அம்மாவின் நிலைமையைக் கண்ட அவர் வீட்டிலேயே தங்கி கடையின் வேலைகளில் அம்மாவிற்கு உதவி வந்தார். மைனாவின் உறவினர் மேகனாவை அணுகினர். அவர் மைனாவை சந்தித்தார். மைனாவின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தினார். CAP-க்கு அழைத்துச் சென்றார். அங்கு வரும்போது முன்கோபமுடையவராகவும் பதட்டமாகவும் இருந்தார். ஆனால் MTWW-வின் சூழ்நிலை மற்றும் ஏற்றுக்கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை அவரை மாற்றியது. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான அமர்வுகள் விரைவாகவே அவரை உற்சாகமான நபராக மாற்றியது.

கடினமான ஒரு சூழலில் வளர்ந்த ஒரு குழந்தையை அழைத்து வந்து அவரைப் புரிந்துகொண்டு, பராமரித்து, விழிப்புணர்வும் நம்பிக்கையும் அடைய நாங்கள் உதவிவோம். மைனாவைப் போலவே 50 நலிந்த வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது மாற்றத்திற்கான தனிப்பட்ட கதைகள் உண்டு.” என்றார்.

விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லுதலும் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளுதலுமே 50 மாணவர்களுக்கு முக்கிய பாடமாக போதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் தேசிய அளவிலான கல்லூரி விழாவில் MTWW மாணவர்கள் பங்கேற்றனர். மற்றொரு அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். சண்டைக்கான முக்கியக் காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வையின் பற்றாக்குறை என்று தெரியவந்தது. உடனடியாக MTWW மாணவர்கள் தங்களது போர்வைகளை அந்த மாணவர்களுக்குக் கொடுத்தனர். அத்துடன் அதிக போர்வைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். “இப்படிப்பட்ட தலைமுறையைதான் நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். அதாவது தனிநபர்கள் நம்பிக்கையுடன் வலுவடைவதுடன் சுற்றியிருப்பவர்கள் வலுவடைவதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றனர்.” என்றார் மேகனா.

நியூயார்க்கின் ஐக்கிய நாடுகளின் இளைஞர் சட்டமன்றம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் நாடு மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதியாக நால்வரும் பங்கேற்றனர். பிஐடி மெஸ்ரா, ஐஐஐடி ஆர்கே வேலி, என்ஐடி ராய்பூர், ஐஐடி கராக்பூர் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களில் பேசியுள்ளனர். என்ஐடிஐ ஆயோக் நிறுவனத்தின் சிஇஓ அமிதாப் கண்ட், இஸ்ரோ ஆய்வு கழகத்தின் முன்னாள் இயக்குனர் டிஜிகே மூர்த்தி, தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ கே டி ராமா ராவ், தெலுங்கானா டிஜிபி ஸ்ரீ அனுராக் ஷர்மா போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த இளம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தனர்.

பயணத்தின் ஒவ்வொரு நிலையையும் பதிவுசெய்கின்றனர். இவ்வாறு உருவாக்கப்படும் மாதிரியானது அடுத்த முறை இந்த செயல்முறையை பின்பற்ற உதவும். “நன்றியுணர்வு, பகிர்ந்துகொள்ளுதல், தளராத நம்பிக்கை போன்ற முக்கிய குணங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லிணக்கத்தை அளவிடுவதற்கான அளவீடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா