சமூக முன்னேற்றத்திற்கு பயன்படும் சமூக வலைத்தளம்!

0

கொல்கத்தாவில் உள்ள சேரி ஒன்றில் வசிக்கும் சிறுமி அஞ்சலி. பிற சேரிவாசிகளைப் போலவே அவளது வாழ்க்கையும் இருட்டில்தான் இருந்தது. ஆனால் அந்த 12 வயது சிறுமியின் வாழ்க்கையில் திடீரென்று வண்ணங்களைப் பாய்ச்சினார் சுபியா காத்தூன்.

சுபியா காத்தூன்
சுபியா காத்தூன்

“எங்களுக்குக் கற்றுக் கொடுத்த கல்வி விளையாட்டுக்களை விரும்பினேன். நாங்கள் கற்றுக் கொண்ட மருத்துவ வகுப்பும் எனக்குப் பிடித்திருந்தது. அவசர நோய் நேரங்களில் எப்படி எங்களை நாங்களே கவனித்துக் கொள்வது என்பதை அதில் கற்றுக் கொடுத்தார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவர், தற்காப்புக் கலையைப் பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். இப்போது நான் நன்கு வாசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அக்கா கொடுத்த புத்தகத்தை திறந்து வைத்து சத்தமாகப் படிக்க முயற்சிக்கிறேன். அக்கா எனக்கு எடுத்த ஓவிய வகுப்புகள் என்னைச் சந்தோஷப்படுத்தியது. அதன்பிறகு நானே ஓவியம் வரைய ஆரம்பித்தேன். ” அஞ்சலியின் வார்த்தைகள் இவை.

கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும் இணைத்தோம்

சுஃபியா காத்தூனின் “நமது உலகம் நமது முன்முயற்சி (Our World Our Initiative -OWOI)” ஒரு மனிதாபிமான முன்முயற்சி. ஃபேஸ்புக் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட ஒரு முன்முயற்சி இது. சமூகத்தில் அங்கீகாரம் பெறாத அடித்தட்டில் உள்ள மக்களையும் அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களையும் இணைப்பதற்கு சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தினார் சுஃபியா.

“ஒவோய் (OWOI) அலாதியான முறையில் செயல்படும் ஒரு அமைப்பு.” என்கிறார் சுஃபியா. “நாங்கள் பலவிதமான திட்டங்களை பல்வேறு விதமான நபர்களை கொண்டு செயல்படுத்துவதால், இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க பொதுவாக யாருக்கும் முடிவதில்லை. எனவே ஒரு சுதந்திரமான ஏற்பாட்டை வைத்திருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் விரும்பும் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி விட்டு விரும்பும் போது அவர்களது சொந்த வேலைக்குத் திரும்பிவிடலாம். ஏராளமானோர் வந்து பலருக்கு உதவும் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னல் இது. இதில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள், மாணவர்கள், சிஏக்கள் சிஎஸ்கள், கார்ப்பரேட் பணியாளர்கள், இல்லத்தரசிகள், வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களும் இதில் உள்ளனர். பெரும்பாலும் எங்கள் திட்டம் என்ன என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிடுகிறது. அதில் சேர விரும்புகிறவர்கள் யாராக இருந்தாலும் சேர்ந்து உதவுவார்கள். இவை மொத்தத்தையும் வழி நடத்துகிறேன். சுயசார்புடன் நிற்பதற்கு உதவி செய்தல், மருத்துவ உதவி, ஆலோசனை உதவி, தேவைப்பட்டால் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதி உள்ளிட்ட உதவிகள் என எல்லாவற்றையும் நான் நிர்வகிக்கிறேன். ” என்கிறார் அவர்.

18 வயது பிரியா ஷர்மா; கொல்கத்தாவின் காலிகாட் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சேரிவாசி. “சுஃபியா அக்காவும் அவரது நண்பர்களும் முதன் முறையாக எங்கள் பள்ளிக்கு வந்தது இப்போதும் நினைவிருக்கிறது” என்கிறார். "அவர்கள் எங்களுக்குப் பல்வேறு திறன்களைக் கற்பித்தனர். அது போன்ற ஒரு அற்புதமான அனுபவத்தை அதற்கு முன் எப்போதும் நான் அனுபவித்ததில்லை. கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி எனக்குப் பிடித்திருந்தது. வாழ்த்து அட்டைகளை தயாரிக்க அக்கா எனக்குக் கற்றுக் கொடுத்தார். எங்கள் பகுதியிலேயே அதை வாங்க பலர் ஆர்வம் காட்டினார்கள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, வாசிப்பு பட்டறை காரணமாக ஆங்கில அறிவில் நான் தேர்ச்சி பெற்றேன்" என்கிறார் அவர்.

வெறும் கல்வி மற்றும் கைவினைப் பயிற்சி மட்டுமல்ல. சுஃபியாவுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் - குறிப்பாக சேரிப்பகுதிகளில் அது எவ்வளவு அவசியம் - என்பது தெரியும். அவருடைய வகுப்பில் பல நேரங்களில் அது குறித்தும் கற்பிக்கிறார்.

“மாதவிடாய் காலங்களில் எப்படி எங்களைக் கவனித்துக் கொள்வது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அந்த விஷயத்தில் சுஃபியாவின் சுகாதார வகுப்புகள் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஒரு வருடத்திற்குத் தேவையான சானிடரி நாப்கின்கள், புத்தகங்கள், நகல்கள், கைவினைப் பொருட்களுக்குத் தேவையானவை என அனைத்தும் எங்களுக்கு வழங்கப்பட்டது. பத்துக்கு மேல் முடித்தாயிற்று, பள்ளிக்குச் செல்லவில்லை. சுஃபியா அக்கா எனக்கும் எனது தங்கைகளுக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தால் என்னென்ன வேண்டுமோ அத்தனையும் வாங்கிக் கொடுத்தார். நான் நிறையப் படிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார். ஒரு தையல் பயிற்சி வகுப்புக்கும் அனுப்பினார். அதன் மூலம் சொந்தமாக தொழிலை தொடங்கி விடலாம்.” என்கிறார் பிரியா.

ஒவோய் (OWOI) வெற்றிகரமான பல திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறது. ‘சாண்டா ஆன் தி வே’ (Santa on the Way) திட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும், கொல்கத்தா முழுவதும் உள்ள தெருவோர குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆடைகள், உணவுப் பாக்கெட்டுகள், கேக்குகள், விளையாட்டுப் பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

‘பியூட்டிபுல் ஸ்மைல்’ (Beautiful Smile) என்ற திட்டத்தின் கீழ், அனாதை ஆசிரமம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளை ஒரு நாள் எங்காவது சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் ஆசியான் இல்லக் குழந்தைகள் நிக்கோ பூங்காவுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மதிய விருந்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. மற்றொரு திட்டமான ‘லீட் தி வே’ (Lead the Way) திட்டத்தின் கீழ், சேரிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சுயவாழ்வாதாரத்திற்கான திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்படித்தான் தொடங்கியது

ஒவோய் எப்படித் தொடங்கியது என்பது பற்றி கூறுகையில், “2012 ஏப்ரலில்தான் இந்த யோசனை எனக்குத் தோன்றியது. எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வயதான ஒரு பெண்மணி தனது கஷ்டங்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதைப் பார்த்த எனது ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் அந்த பெண்மணிக்கு உதவ முன்வந்தார்கள். இந்த சம்பவத்தின் மூலம் சமூக வலைத்தளங்களின் சக்தியையும், தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதன் மூலம் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நான் புரிந்து கொண்டேன். இந்தத் தாக்கம்தான் அடுத்த கட்டத்திற்குச் சென்று குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உதவியது. இது எல்லாம் எப்படி செயல்படுகிறது என்பது எனக்கு பிறகுதான் தெரியவந்தது. நல்ல முயற்சிக்கு எப்போதுமே பலன் உண்டு. ஃபேஸ்புக்கில் ஒவோய் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான ஆதரவால் என்னால் பிறருக்கு உதவ முடிகிறது.” என்கிறார் சுஃபியா.

தடைகளைத் தாண்டி

ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவும் சுஃபியா தனது பணிகளுக்குக் குறுக்கே வரும் தடைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்தக் கொடையாளி தனது பயணத்தைப் பற்றிக் கூறுகையில், “எனக்குக் கிடைத்த அனுபவங்கள் திருப்திகரமானவை. அது எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏனெனில் திட்டமிடவும், மனிதர்களை அணி சேர்க்கவும், நிதி திரட்டவும், அதைப் பகிர்ந்தளிக்கவும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் சிறிது காலம் பிடிக்கும். உடனடியாய் முடியாது. பொறுமை காக்க வேண்டியது அவசியம். எனினும் எல்லாம் நல்லபடியாகவே நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் அன்பான அற்பணிப்பு மிக்க தன்னார்வத் தொண்டர்களும் நன்கொடையாளர்களும்தான்.” என நன்றியோடு சொல்கிறார்.

தாக்கம்

குழந்தைகள்தான் சுஃபியாவுக்கு ஆசிரியர்கள். அவர்களிடமிருந்து தினந்தோறும் அவர் கற்றுக் கொள்கிறார். “குழந்தைகளுடன் பணியாற்றும் போது நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். அவர்களது வாழ்க்கை நமது வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நமக்கு வாழ்க்கைக்கான மதிப்பீடுகள், குடும்பம், கல்வி, வீடு என்று வாழ்க்கையின் அனைத்து நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு அப்படி எதுவுமே இல்லை. தெருவோரத்தில் வசிக்கும் அவர்கள், பலரின் மோசடியான பயன்பாட்டிற்கு பலியாகின்றனர். அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பொறுமை வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு அதில் எல்லாம் ஆர்வமில்லை. உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் வசதி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குள்ளும் ஆற்றல் மறைந்திருப்பதை நான் பார்க்கிறேன். முறையான கல்வி மூலம் தற்போதைய வறுமைச் சூழலை வெற்றி கொள்ளலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். அது சாத்தியம்தான் என்று எனக்குத் தெரியும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சுஃபியா.