தீயில் சிக்கிக்கொண்ட 20 பேரை துணிச்சலோடு காப்பாற்றிய 58 வயது ஜோதி!

0

திங்கள் நடு இரவில் டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பிடித்தது. சுமார் 20 பேர் கட்டிடத்துக்குள் மாட்டிக்கொண்டனர். அதை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டிருந்த போதும், 58 வயதான ஜோதி வர்மா தன் உயிரைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் மற்றவர்களின் உயிரை காப்பாற்ற துணிந்தார். 

ஜோதி தீயில் சிக்கிய கட்டிடத்துப் பக்கத்தில் இருந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு ஏணியை போட்டார். தீயில் சிக்கிய பலரை அந்த ஏணி வாயிலாக பக்கத்து கட்டிடத்துக்கு வெளியேற்றி காப்பாற்றினார். இப்படி 20 பேரின் உயிரையும் காத்தார் ஜோதி. இது பற்றி ஜோதி பகிர்கையில்,

“என் பக்கத்துவீட்டுக்காரர் அருகில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக கூறினார். நான் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது, கறும்புகையுடன் அந்த இடமே இருண்டு காணப்பட்டது,” என்றார்.

மற்றொரு பகுதிவாசியான முன்னா, ஜோதிக்கு உதவியாக மக்களை காப்பாற்றினார். ஜோதியின் ஐடியாபடி, முன்னா எட்டு அடி ஏணி ஒன்றை அருகாமை கட்டிடத்தில் சாத்தினார். பாலம் போல அதை அமைத்து, தீயில் சிக்கியவர்களை அதில் நடந்து வந்து பக்கத்து கட்டிடத்தை அடைய உதவி புரிந்தார். இரண்டாம் மாடியில் இருப்போரை காப்பாற்றியவுடன், முதல் மாடியில் தீயில் மாட்டிக்கொண்ட எட்டு பேரை காப்பாற்ற விரைந்தார் ஜோதி.

தீயில் இருந்து பிழைத்து அனைவரும் ஜோதிக்கு மனமாற நன்றி தெரிவித்தனர். அவரின் துணிச்சலையும் வெகுவாக பாராட்டினர். 

கட்டுரை: Think Change India