31 வருட போராட்டத்துக்கு பின் கிடைத்த நீதி: தந்தையின் கொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஐஏஎஸ் மகள்!

0

போலி என்கவுண்டர்கள் நம் நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது நடக்கும் கொடுமையான ஒரு விஷயமாகும். பலமுறை அப்பாவியான எவரோ என்கவுடண்டரில் இறந்து அந்த சாவு சுலபமாக அதிகாரிகளால் மறைக்கப்பட்டுவிடுவதும் இங்கே சகஜம். இது போன்ற ஒரு போலி என்கவுண்டர் சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற பகுதியில் நடந்தது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். டெபுட்டி எஸ்.பி. கே.பி.சிங் என்ற காவல்துறையை சேர்ந்த ஒருவரும் இந்த எண்கவுண்டரில் பலியானார். ஆனால் மற்ற போலி என்கவுண்டர்கள் போல் இதை சாதரணமாக விடாமல், சிங்கின் மகள் கிஞ்சல் சிங், தன் தந்தையை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து தன் தாய்க்கு நீதியை பெற்று தந்தார்.  

கிஞ்சல் சிங்
கிஞ்சல் சிங்

தன் வயது குழந்தைகள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருக்க, கிஞ்சல் தன் தாய் விபா உடன் உச்சநீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருந்தார். உத்திர பிரதேசத்தில் இருந்து டெல்லி வந்து கோர்டில் தங்கள் வழக்கை வாதாடினார்கள். விபா, தன் கணவரின் கொலைக்கான குற்றவாளி தண்டனை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். வாரனாசி ட்ரெஷரியில் பணியில் சேர்ந்து தன் இரு மகள்களை படிக்கவைத்தார் விபா. மற்றொரு புறம் கோர்ட் படிகளை மகளுடன் ஏறி நியாயத்துக்கு போராடிவந்தார். 31 வருட போராட்டத்துக்கு பின்னர் இவர்களுக்கு நீதி கிடைத்தது. 

டிஎஸ்பி சிங், அவருடன் பணிபுரிந்த காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். முக்கிய குற்றவாளியான போலீஸ் அதிகாரி சரோஜ் தன்னை பற்றிய உண்மைகளை சிங் அறிந்ததால், அவர் வெளியில் சொல்லாமல் இருக்க போலி என்கவுண்டரில் அவரை கொன்றுவிட்டார். சரோஜ் லஞ்சம், குற்ற நடவடிக்கைகள் பலவற்றுக்கு உடந்தையாக இருந்த ஒரு அதிகாரி. 

மாதவ்பூர் என்ற பகுதியில் குற்றவாளிகள் ஒழிந்து கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சிங் அங்கே சென்றார். அவர்கள் பதுங்கி இருந்த வீட்டின் கதவை தட்டிய போது திடீரென பின்னால் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரி சரோஜ் சிங்கை சுட்டார். மாரில் குண்டு பாய்ந்து சிங் இறந்தார். இதே போல் அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். 

கிஞ்சல் தினமும் உபி’யில் இருந்து டெல்லி கோர்டுக்கு சென்று கொண்டே தன் படிப்பையும் தொடர்ந்தார். டெல்லியில் உள்ள பிரபலமான லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் சேர்ந்து கடுமையாக படித்தார். ஆனால் விதி மீண்டும் கிஞ்சலின் வாழ்க்கையில் விளையாடியது. அவரின் தாயார் விபாவிற்கு கேன்சர் நோய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான போராட்டத்திற்கு பின் அவரும் இறந்து போனார். ஆனால் தன் மகள்களை ஐஏஎஸ் படிக்க வழிகாட்டிவிட்டு, ஐஏஎஸ் அதிகாரி ஆகி தந்தையின் சாவிற்கு நீதி பெறவேண்டும் என்று தன் மகள்களுக்கு சொல்லி விட்டு இறந்தார் விபா. 

டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறிய கிஞ்சல்,

“என் அப்பா ஒரு நேர்மையான அதிகாரி என்பதில் எனக்கு எப்பொழுதும் பெருமை உண்டு. என் அம்மாவும் ஒரு திடமான பெண்மணியாக தனியாக எங்களை வளர்த்து, அநீதியை எதிர்த்து போராடி தன் கணவருக்காக போராடினார்.”

கே.பி.சிங் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்று கனவு கண்டார். அதை அவரின் மகள்கள் நிறைவேற்றிவிட்டனர். கிஞ்சல் கல்லூரியில் தனது கடைசி ஆண்டு தேர்வை எழுதிவிட்டு தன் தங்கை ப்ரஞ்சலையும் டெல்லிக்கு அழைத்து வந்தார். பின் இருவரும் இணைந்து யூபிஎஸ்சி தேர்வுக்கு சேர்ந்து படித்தனர். இருவரும் 2007 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கிஞ்சல் 25-வது இடத்திலும், ப்ரஞ்சல் 252-வது இடத்திலும் வெற்றி பெற்றனர். 

சகோதரிகளின் இந்த வெற்றி தங்களின் தந்தையின் சாவிற்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தின் முதல் அடி. தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி, இறுதியில் அதிலும் நியாயம் பெற்றனர். 2013-இல் அதாவது  31 வருட சட்ட போராட்டத்துக்கு பின்னர், லக்னோ சிபிஐ ஸ்பெஷல் கோர்டில் நீதி கிடைத்தது. தந்தை சிங்கின் கொலைக்கு சம்பத்தப்பட்ட 18 குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைத்தது.  

“என் அப்பா இறந்தபோது எனக்கு வெறும் இரண்டரை வயது தான். அவரை பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை. இருப்பினும் என் அம்மா அவருக்காக எப்படி போராடினார் என்பதை உணர்ந்துள்ளேன். கேன்சர் வந்தபோதும் அவர் நீதிக்காக போராடி 2004-இல் இறந்தார். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த வெற்றிக்கு பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்,” என்றார் கிஞ்சல். 

கிஞ்சல் சிங் தற்போது ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ஆவார். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தும் தன் விடாமுயற்சியால் இந்த நிலைக்கு வந்து பலருக்கு ஊக்கமாய் திகழ்கிறார். 

கட்டுரை: Think Change India