ரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை  கையகப்படுத்தியது பி.வி.ஆர் நிறுவனம்! 

0

சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளை கொண்டிருக்கும் ’சத்யம் சினிமாஸ்’ (SPI Cinemas) நிறுவனத்தை, நாட்டின் முன்னணி திரையரங்க குழுமமான பி.வி.ஆர் நிறுவனம் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 

ரொக்கம் மற்றும் பங்குகள் உள்பட சுமார் ரூ.850 கோடி மதிப்பில் இந்த கையகப்படுத்தல் அமைய உள்ளது.

எஸ்.பி.ஐ சினிமாசுக்கு சொந்தமான சத்யம் சினிமாஸ் சென்னை நகரில் திரைப்பட அனுபவத்தை மாற்றி அமைத்த நிறுவனமாக கருதப்படுகிறது. கடந்த 1974 ம் ஆண்டு சத்யம் திரையரங்கம் ஒற்றை திரையரங்கமாக துவங்கியது. அதன் பிறகு பல் அடுக்கு திரையரங்கமாக வளர்ந்து திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்தது. அண்மை ஆண்டுகளில் நவீன வசதிகளோடு, எஸ்2, எஸ்கேப், பலாசோ, தி சினிமா உள்ளிட்ட திரையரங்களோடு மிகப்பெரிய திரையரங்க குழுமமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

படம். தி நியூஸ் மினிட்
படம். தி நியூஸ் மினிட்

இந்நிறுவனத்தின் வலைப்பின்னலில் 76 திரைகள் உள்ளன. (இவற்றில் எட்டு திட்டமிடப்பட்டுள்ள திரைகள்). சென்னை தவிர தென்னந்திய நகரங்கள் மற்றும் மும்பையில் செயல்பாட்டை கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 திரைகளை தொடும் வகையில் விரிவாக்கத்திற்கு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் குழுமமான பி.வி.ஆர் (PVR) நிறுவனம், சத்யம் சினிமாசை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ரொக்கம் மற்றும் பங்குகள் கொண்டதாக இந்த கையகப்படுத்தல் அமைகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.850 கோடியாக அமைகிறது. 

தனிப்பட்ட பங்குகளாக இருக்கும் சத்யம் சினிமாசின் 2.22 லட்சம் சமபங்குகளை பி.வி.ஆர் லிட் வாங்க உள்ளது. இது 71.7 சதவீத செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனமாகும். ரூ.633 கோடி மதிப்பில் தற்போதைய பங்குதாரர்களிடம் இருந்து பங்குகள் வாங்கப்பட உள்ளன. மேலும் இந்த கையகப்படுத்தலுக்குப்பிறகு, பிவிஆர் நிறுவனம் 1.6 மில்லியன் சமபங்குகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது, என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த கையகப்படுத்தல் பிவிஆர் நிறுவனத்தின் வசம் உள்ள திரைகள் 706 ஆக உயர்த்த உள்ளது. 60 நகரங்களில் 152 திரையரங்களில் இந்த திரைகள் அமைந்திருக்கும். திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இது பிவிஆர் சினிமாசை உலகின் ஏழாவது பெரிய திரையரங்க நிறுவனமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கையகப்படுத்தல் தென்னிந்தியாவில் பிவிஆர் நிறுவனத்தின் நிலையை மேலும் வலுவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு, திரைப்பட ரசிகர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திரைப்பட ரசிகர்கள் பலரும் சத்யம் சினிமாஸ் தொடர்பான தங்கள் அனுபவத்தை டிவிட்டரிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.