நண்பர்கள் செலவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக நிர்வகிக்க உதவும் செயலி 'நோடியூஸ்'

2

கடவுள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்றவர்கள் எல்லாம் ரொக்கத்தில் செலுத்த வேண்டும்”

- அமெரிக்க பழமொழி

உங்கள் தனிப்பட்ட மற்றும் ஸ்டார்ட் அப் நிதி வாழ்க்கை பற்றி தெளிவாக அறிந்திருப்பது மிகவும் அவசியம் என்றாலும் நம்மில் பலர் மிகவும் தாமதமாகும் வரை இதை மறந்துவிடுகிறோம். மாத இறுதியில் திரும்பி பார்க்கும் போது பலருக்கு பணத்தை எப்படி செலவு செய்தோம் என்பதும், நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் ஏதேனும் பில்கள் செலுத்தப்படாமலும் இருக்கின்றனவா என்று தெளிவாக தெரியாமல் இருக்கிறது. தனிநபர் நிதி செயலிகள் செலவுகளை கணக்கு வைத்திருக்க உதவினாலும், நண்பர்களுடன் இணைந்து செய்த செலவுகளை நினைவில் கொள்வது சிக்கலாகிறது. ஐதராபாத் ஐபிஎஸ் மற்றும் டிஏபிஎம்.ஐ-ல் பயின்றவர்களால் உருவாக்கப்பட்ட 'நோடியூஸ்' (KnoDues ) செயலி நட்பு மற்றும் பண பகிர்வை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பகிர்வுக்கான செயலி

நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் இடையே செலவுகளை கணக்கு வைத்திருந்து, சரியாக பகிர்ந்து கொள்ள உதவும் ஸ்மார்ட்போன் செயலியாக நோடியூஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரது பாக்கித்தொகையை அறிந்து கொள்ளவும் அவற்றை சரியான நேரத்தில் செலுத்தவும் உதவுகிறது.

நிறுவனர்கள் இந்த செயலியை, சேர்ந்து செய்யும் செலவுகளை கணக்கு வைத்துக்கொள்ளவும், பாக்கித்தொகையை அறியவும், பகிர்ந்து கொள்ளவும் வழி செய்யும் பகிர்வு செயலி நண்பன் என்று சொல்கின்றனர். இதனுள் அரட்டை சார்ந்த வசதி இருப்பதால் நோடியூஸ் நோட்பேடில் எழுதுவது, கணக்கிடுவது, ஸ்பிரெட்ஷீட்டில் குறித்து வைப்பது போன்றவை அவசியமில்லை.

அம்சங்கள்

குழுக்கள் ( நிகழ்வுகள்) உருவாக்கும் வசதி; விடுமுறை, பயணங்கள் அல்லது குடியிருப்பு பகிர்வுக்கான எளிமையான தானியங்கி நிகழ்வு சுருக்கம் உருவாக்கப்படுகிறது. நண்பர்கள் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தை பதிவு செய்து அந்த நிகழ்வுக்கான மற்றவர்கள் பணம் தர வேண்டிய தகவலை பெறலாம்.

மொபைல் எண் : இந்த செயலி பயனாளிகளின் இமெயில் முகவரி அல்லது பிற விவரங்களை சார்ந்திராமல் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டது. எனவே பயனாளிகள் இந்த செயலியை நிறுவியிருக்காவிட்டால் கூட நிறுவியுள்ள நண்பர்களிடம் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பெறலாம்.

நினைவூட்டல்; பயனாளிகள் நண்பர்களுக்கு புஷ் நோட்டிபிகேஷன் மூலம் பாக்கித்தொகை பற்றி நினைவூட்டலாம். நேரில் நினைவூட்டும் சங்கடத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.

இதுவரை பயணம்

இணை நிறுவனர்கள் சாகேத் பக்டா (Saket Bagda) மற்றும் சாஹில் சேத்தி (Sahil Sethi) கல்லூரியில் படிப்பதற்கு முன்பே நண்பர்கள். பின்னர் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலையில் சேர்ந்து படித்தனர். சாகேத், ஐபிஎஸ் -ல் இருந்து எம்பிஏ பெற்று எர்ன்ஸ்ட் யங்கில் பணியாற்றினார், சாஹில் மணிபால் டிஏபிஎம்.ஐ - ல் எம்பிஏ பெற்று கிரிசிலில் பணியாற்றினார்.

ஒன்றாக தங்கியிருந்த போது அவர்கள் செலவை நிர்வகித்து, பகிர்ந்து கொள்வதில் சிக்கலை உணர்ந்தனர். ஆரம்பத்தில் செலவுகள் குறைவாக இருந்தாலும் பின்னர் அதிகரித்து சிக்கலானது.

"நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, திரைப்படம், டின்னருக்கு செல்வது உற்சாகமானது மற்றும் நம் எல்லோருக்கும் அவசியமாது. ஆனால் செலவை பிரித்து, அவற்றை கணக்கில் வைத்துக்கொள்வது சிக்கலானது. இதை சரியாக நிர்வகிக்காவிட்டல் நட்பில் கசப்பு ஏற்படலாம்” என்கிறார் சாஹில்.

எனவே அவர்கள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் இவர்கள் நோடியூஸ் செயலியை துவக்கினர். இணை நிறுவனர்கள் தவிர இதன் குழுவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய நான்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இரண்டு கிராபிக் டிசைனர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர்.

2015 ஆகஸ்ட்டில் இந்த செயலி அறிமுகமானது. 1500 பயனாளிகளை பெற்றுள்ளது. 160 பயனாளிகளிடம் இருந்து 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. சொந்த நிதியில் செயல்பட்டு வரும் குழுவினர் வளர்ச்சியை இலக்காக கொண்டு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். இப்போதைக்கு இந்த செயலியில் புதிய அம்சங்களை சேர்த்து, பயனாளிகள் பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே இப்போதைக்கு வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தவில்லை.

பல திட்டங்களை வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் கருத்துக்களுக்கு ஏற்ப பி2பி மற்றும் பி2சி மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருவதாகவும் சாஹில் கூறுகிறார். இது வரை வாய் மொழி பரிந்துரைகள் மற்றும் சகாக்கள் குழுக்களின் பரிந்துரையையே மார்க்கெட்டிங்கிற்காக சார்ந்துள்ளனர்.

இந்த செயலிக்குள் இருந்தே பாக்கித்தொகையை செலுத்தும் வகையில் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளது. இது செயலியை முழுமையான சேவையாக்கும். ஐஓஎஸ் செயலி மற்றும் இணைய வடிவத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

துறை பற்றிய பார்வை

பகிர்வு பொருளாதாரம் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. கேப் நிறுவனங்கள் (கார் பூலிங்) இதை நன்றாக பயன்படுத்தி வருகின்றன. சிறிய குடும்பங்கள் பெருகுவது, திருமணமாகதவர்கள் சேர்ந்து தங்குவது அதிகரிக்கும் நிலையில் செலவுகளை சிக்கலில்லாமல் வெளிப்படையான முறையில் கணக்கிட்டு பகிர்வது நேரத்தை மிச்சமாக்கும். சர்வதேச அளவில் ஸ்பிளிட்வைஸ் (Splitwise) இந்த துறையில் முன்னணியில் உள்ளது, 2014 டிசம்பர் வரை 1.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

இ-மெயில் முகவரியை பயன்படுத்தாமல் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவது இந்தியா போன்ற நாட்டில் முக்கியமானது என நம்புகிறோம். என்னிடம் எல்லா நண்பர்களின் போன் எண்களும் இருக்கின்றன, ஆனால் இ-மெயில் முகவரிகள் இல்லை” என்று போட்டி பற்றி சாஹில் கூறுகிறார்.

ஸ்பிளிட்வைஸ் பேப்பால் மூலம் பணம் செலுத்து வசதியை அளிக்கிறது. வர்த்தக செலவுக்கான செயலியான ஹாப்பே (Happay ) மற்றும் டைம்ஸ் இண்டெர்நெட் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்ஸ்பெண்ட்ஸ் (SmartSpends) ஆகியவை இந்த துறையில் உள்ள வேறு சில செயலிகளாகும்.

நமக்கு பிடித்தவை

நோடியூஸ் நன்றாக யோசித்து உருவாக்கப்பட்ட செயலி. மற்ற அடையாள முறைகளுக்கு பதில் மொபைல் எண்ணை பயன்படுத்துவது நல்ல அம்சம். மேலும் நண்பர்களுக்கு இடையே சமமாக அல்லது சமமில்லாமல் செலவை பங்கிட்டுக்கொள்ளும் வசதியும் கவரலாம்.

இப்போதைக்கு ஒரு குழுவில் அல்லது செலவில் சேர்க்கக் கூடிய எண்களுக்கு எந்த வரம்பும் இல்லை என்கிறார் சாஹில். பெரிய குழுக்களுக்கு இது உதவியாக இருக்கும். செயலிக்குள் சாட் வசதி மற்றும் நினைவூட்டல் பட்டன்கள் மிகவும் அவசியமானவை. இவை பயனுள்ளதாக இருப்பதோடு மற்ற இடங்களில் நிதி விஷயங்கள் தொடர்பான பேச்சு தொடராமல் இருக்க உதவுகிறது.

தேவையான மேம்பாடுகள்

செயலி பெயருக்கேற்ற சேவையை அளித்தாலும், பணம் செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் முழுமையாகாது. மேலும் அடுத்து வரும் மாதிரிகளில் இந்தி மற்றும் பிராந்திய மொழி வசதியை அளிப்பது வாடிக்கையாளர் பரப்பை விரிவாக்கும்.

பயனாளிகள் பணத்தை எங்கே எல்லாம் செலவு செய்கிறோம் என தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க உதவும் மாதந்திர செலவு கணக்கை காட்டும் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும். செலவு பகிர்வில் தான் இப்போது கவனம் செலுத்தினாலும் நிதி விஷயங்களை நிர்வகிக்கும் வகையில் தனிநபர் நிதி அம்சங்களை பலரும் கோரி வருவதாக சாஹில் உறுதி படுத்துகிறார்.

யுவர்ஸ்டோரி தீர்ப்பு

திருமணமாகதவர்கள் மற்றும் திருமணமானவர்கள், சமூக குழுவாக செயல்படும் இடங்களில் பணம் பகிர்வு பற்றி பேசும் சங்கடம் இல்லாமல் தங்கள் செலவுகளை நிர்வகிக்க நோடியூஸ் உதவுகிறது. பல்வேறு பின்னணியை கொண்ட அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டுள்ள குழுவை பெற்றிருக்கும் இந்த செயலி எப்படி இதை மேலும் உருவாக்குகிறது மற்றும் எப்படி வருவாய் ஈட்டுவது என்பது சுவாரஸ்யமான பயணமாக இருக்கும்.

இணையதளம்: Knodues

ஆக்கம்; ஹர்ஷித் மல்லையா | தமிழில்; சைபர்சிம்மன்