தொழில்முனைவோருக்கு கீதை சொல்லும் 5 பாடங்கள்!

1

தொழில் முனைவோருக்கு ஆலோசனை

வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆக விரும்பும் எல்லோருமே அடிக்கடி உலக அளவில் பெரிய நிர்வாகிகள், வழிகாட்டிகள் போன்றோரின் பேச்சை தேடிப்பிடித்துக் கேட்பதுண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு நம் மரபில் புதைந்து கிடக்கும் அறிவுப் பெட்டகங்கள் கண்ணுக்குத் தெரிவதே இல்லை. நமது காவியங்களில் நவீன வாழ்விலும் நாம் கடைபிடிக்கக் கூடிய பல்வெறு நிர்வாகவியல் உண்மைகள் உறங்குகின்றன. நாம் ஒரு புனிதமான நூலாக மட்டுமே பார்த்துப் பழகிய கீதையில் எவ்வளவோ நிர்வாகவியல் கோட்பாடுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பானைச் சோறு போல ஐந்து ஸ்லோகங்களை எடுத்துக் கொண்டு, அவற்றை நிர்வாகவியல் பார்வையில் இங்கே முன்வைக்கிறேன்.

” கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|

மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||”

நம் மரபில் 'கர்மா' என்கிற வார்த்தைக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வரிகள்தான் அதற்கான உண்மையான விளக்கம். ஒரு நல்ல தொழில் முனைவோர் தன் பணியை(கர்மாவை) அதன் விளைவுகளைப் பற்றி எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி செய்யப் பழக வேண்டும். தன் வேலையின் இறுதி வெற்றியை பற்றிக் கவலைப் படாமல் அதை நோக்கி செல்லும் பாதையையும், தன் முயற்சிகளையும் மட்டும் அனுபவித்து செய்யப் பழகிக் கொண்டால் நம் உற்பத்தி திறன் பலமடங்கு கூடும். வேலையின் முடிவில் வெற்றியை எதிர்பார்ப்பதும், நேர்மறை எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதும் தவறல்ல. ஆனால் அந்தப் பரபரப்பில் வேலையைச் செய்யும் போது கிடைக்கும் இன்பத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்பதே முக்கியம். வேலையின் பயனாக கிடைக்கும் வெற்றியை மட்டுமல்ல மொத்த வழிமுறையையும் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வதே நல்ல அணுகுமுறையாகும்.

அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடப்பவன் அப்படி நடக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்தபடியே தன் குறிக்கோளை நோக்கி முன்னேறுவதைப் போல நம் பயணமும் அமைய வேண்டும்.

______________________________________________________________________

தொடர்பு கட்டுரைகள்:

உங்கள் நிறுவனம், உங்கள் தொழில், உங்களையும் புதுப்பித்துக் கொள்ள 10 வழிகள்!

________________________________________________________________________

” வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|

ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||.”

புதுமைகளை ஏற்றுக் கொள்வதே வெற்றிக்கு அடிப்படை என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதுதான் ஒரு தொழில்முனைவோருக்கு கடினமான பாடம். முதலில் எடுக்கும் முடிவிலேயே சிக்கி நின்று கொண்டிருப்பது நல்லதல்ல. பார்வைகளை மாற்றிக் கொள்ளவும், ஒரே விஷயத்தைப் புதுக் கோணங்களில் காணவும் தயாராக இருப்பதே வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். ஒரு நெடுந்தூரப் பயணி எந்த ஊரிலும், தங்கும் விடுதியிலும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாது, பயணிப்பதன் இன்பத்தை அனுபவித்தபடியே முன்னேறுவதைப் போலவே நமது வாழ்கைப் பயணமும் அமைய வேண்டும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்து புது அனுபவங்களுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பஞ்சுச்சுருள் எப்படி தண்ணீரை உறிஞ்சிக் கொள்கிறதோ அது போலவே நாமும் மாற்றங்களை உடனடியாக உள்வாங்கத் தயாராக இருக்க வேண்டும். நம் நிலைப்பாடுகளில் பிடிவாதமாக நில்லாது, திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதே வெற்றிக்கு வழியாகும்.

“க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|

ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||”

கோபத்தை கட்டுப் படுத்துவது என்பதும் தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய அத்யாவசியமான ஒரு குணமாகும். காரண காரியங்களோடு சிந்திக்கும் நம் தர்க்க புத்தியை கோபம் மழுங்க வைக்கும். விளைவாக நமது குறிக்கோளை, லட்சியத்தை மறந்துவிடவும் கூடும். நமது குறிக்கோளை மறந்து போவது என்றால் வெற்றியையும் சேர்த்து மறந்துவிடுவதாகவே பொருள்.

எனவே கோபத்தை துறப்பது வெற்றிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அதற்கு ஒரே வழி நமது கவனத்தை நம் செயலில் மட்டும் குவிப்பது. அதன் மூலம் நம் பொறுமையின் வலிமையை அடைந்து, கோபத்தை கட்டுப் படுத்த முடியும்.

” தஸ்மாத³ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர|

அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: ||3-19||”

எதன் மீதும் பற்றுக் கொள்ளாமல், அதே நேரம் திறந்த மனதுடன் இருப்பது எனும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றின் மீது பற்றுக் கொள்வது என்பது உழைப்பதற்கான உத்வேகத்தைத் தரும் என்பது உன்மைதான். அதே நேரம் அந்தப் பற்றே நம் வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்துவிடும். அதிகப்படியான பற்று பேராசையை நோக்கி நம்மை நகர்த்திவிடும் அபாயமும் உண்டு.

எனவே செய்துகொண்டிருக்கும் வேலையின் மீது மட்டும் நமது ஆர்வத்தை குறுக்கிக் கொண்டுவிடாமல் தொலை நோக்குப் பார்வையோடு மாற்றங்களை எதிர்கொள்ளும் மனதோடு வளர்வதன் மூலமே வெற்றியை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும்.

”தூ⁴மேநாவ்ரியதே வஹ்நிர்யதா²த³ர்ஸோ² மலேந ச|

யதோ²ல்பே³நாவ்ருதோ க³ர்ப⁴ஸ்ததா² தேநேத³மாவ்ருதம் ||3-38||”

இந்த எளிய இரு வரி ஸ்லோகம் தன்னுள் கொண்டிருக்கும் பொருள் மிகவும் ஆழமானது. தீயை புகையும், கண்ணாடியை அழுக்கும் மூடியிருப்பதைப் போல அறிவை ஆசை மூடியிருக்கிறது. எனவே ஆசையை துறக்காமல் அறிவை அடைய முடிவதில்லை. சொல்வது போல அது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அறிவாளியான மனிதனுக்குத் தான் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எவை என்பதிலும், அடைய வேண்டிய விஷயங்கள் எவையெவை என்பதிலும் தெளிவு இருக்க வேண்டியது அவசியம். வெற்றிகரமான வாழ்கைக்கு இந்த அடிப்படைத் தெளிவு தவிர்க்க முடியாத தேவையாகும்.

ஆங்கிலத்தில்: Atul Pratap Singh| தமிழில்: எஸ். பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தொழில்முனைவர்கள் கற்கவேண்டிய அனுபவப் பாடங்கள் தொடர்பு கட்டுரைகள்:

ஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?

முதல் கட்ட முதலீடு திரட்டலின்போது நான் கற்றுக்கொண்ட 8 பாடங்கள்!