இந்திய கிராமங்களில் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் 24 வயது மருத்துவர்!

0

மீரட் பகுதியில் உள்ள மிலானா கிராமத்தில் வசிக்கும் 42 வயதான பானு ராணி மருத்துவ பரிசோதனை மற்றும் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்துகொள்ள பயப்பட்டார். இந்தப் பரிசோதனைக்கான அதிகப்படியான கட்டணமே அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் அவரது உடல்நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் அவரால் பரிசோதனைகள் செய்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

”மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைக்கு அதிகம் செலவாகும் என அக்கம்பக்கத்தினர் கூறினர். கிட்டத்தட்ட 8,000 ரூபாய் செலவாகும் என்பதால் நான் செல்லவில்லை,” என்றார் பானு ராணி.

மற்றொரு மாவட்டமான பாக்பத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான குசும் தனது உடல்நலப் பிரச்சனை குறித்து ஒருவருடனும் பேசவில்லை. இது குறித்து இவரது கணவரிடம் தெரிவித்தபோது இவர் கப்ரானா கிராமத்தில் இருந்த இவர்களது வீட்டை விட்டு வெளியே சென்றால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்றும் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் எம்ஏ பட்டதாரியாக இருப்பினும் இவரது கணவரின் வார்த்தைகளைக் கேட்டு நடந்துகொண்டார்.

மேற்கு உத்திரப்பிரதேசத்தின் தொலைதூரத்தில் இருக்கும் ரெஹத்னா கிராமத்தில் உள்ள 32 வயதான கீதாவின் அம்மாவிற்கு குரு தேக் பகதூர் மருத்துவமனையில் கருப்பை புற்றுநோய்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டு சிகிச்சை குறித்து நினைவுகூர்ந்தார். இவரது கிராமத்தில் போதுமான மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால் பெண்கள் மருத்துவ முகாமில் பங்கேற்பதும் கடினமாகிறது.

”ஒரு முறை என்னுடைய கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் என்னுடைய கணவர் என்னை அனுப்பவில்லை. எனினும் முகாமின் குழு உறுப்பினர்கள் என்னுடைய வீட்டின் கதவைத்தட்டி என்னுடனும் வீட்டில் உள்ள மற்ற பெண்களும் பேசுவதற்கு நேரம் கேட்டனர். அவர்கள் மருத்துவர்கள். சிலர் மொபைல் ஃபோனில் பதிவு செய்தனர். குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைக் கேட்கத் துவங்கினர்,” என்றார் கீதா. 
”என்னுடைய அம்மாவைப் பற்றி சொன்னதும் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். என்னுடைய தாத்தாவும் புற்றுநோய் பாதிப்பின் காரணமாகவே உயிரிழந்தார். கருப்பை புற்றுநோய் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. நான் உடனடியாக ஸ்கிரீனிங்கும் அல்ட்ராசவுண்டும் செய்துகொள்ள ஆலோசனை வழங்கினர்,” என்றார் கீதா.

இந்திய கிராமங்களில் மருத்துவ வசதிகளும் விழிப்புணர்வும் இல்லாததை சுட்டிக்காட்டும் இவ்வாறான நூற்றுக்கணக்கான குரல்களைக் கேட்கமுடியும். அதிகமான கட்டணங்கள், சமூக விதிகள், மருத்துவ வசதிகளை அணுக முடியாத நிலை போன்ற காரணங்களால் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுகிறது.

இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண 24 வயதான டாக்டர் ப்ரியஞ்சலி தத்தா ’ஆரோக்கியா’ (Aaroogya) என்கிற நிறுவனத்தை சுயநிதியில் நிறுவினார். ஒவ்வொரு வீடாகச் சென்று சுகாதார வசதியளிக்கும் ஆரோக்கியா டெல்லி-என்சிஆர் பகுதி, ஹரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 5,00,000 பெண்களுக்கு உதவியுள்ளது.

துவக்கம்

2017-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரோக்கியா ’ட்ரிப்பிள் நெகடிவ்’ வகையிலான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இது இந்த நோயின் ஒரு அரிய வகையாகும். இது குறிப்பாக இளம் பெண்களையே தாக்கும். இதற்கு சிகிச்சையளிப்பது கடினம்.

இந்தியாவில் பத்து பெண்களில் எட்டு பெண்களுக்கு இந்த நோயின் பாதிப்பு இருப்பது தாமதமாகவே கண்டறியப்படுவதால் ஐந்தாண்டுகளுக்கு மேல் இவர்களால் உயிர் வாழ முடிவதில்லை. உடல் அமைப்பினை கிண்டல் செய்தல், தவறான நம்பிக்கை, அறியாமை போன்ற சமூகத்தடைகளே இவ்வாறு தாமதமாக நோய் கண்டறியப்படுவதற்கான காரணமாகும்,” என ப்ரியஞ்சலி விவரித்தார்.

ப்ரியஞ்சலி டாக்டர் திருவ் காக்கர் அவர்களுடன் இணைந்து ’ஆரோக்கியா’ நிறுவினார். இது இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்கிடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவதற்காக நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் நான்காம் நிலை கிராமங்களில் நிகழ்நேர ஆய்வு, டிஜிட்டல் தகவல் சேகரிப்பு, தரவு பகுப்பாய்வு, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதற்கு தொலை தொடர்பு வசதி வாயிலான ஆலோசனையை (டெலிகன்சல்டேஷன்) நடைமுறைப்படுத்துதல் என இவர்கள் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

ஒரு அரிய வகை புற்றுநோய் தாக்கத்திற்கு முந்தைய நிலையில் இவரது அம்மா இருந்தது கண்டறியப்பட்டபோதுதான் கிராமப்புற ஏழை மக்களின் நலனுக்காக பணிபுரியவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படத் துவங்கியது.

நான் அவருடன் இருக்கும்போது மகிழ்ச்சியாகவும் திடமாகவும் இருப்பது போல் காட்டிக்கொள்வேன். ஆனால் ஒரு நாள் சாலைகள், கடைகள் என எல்லா இடங்களிலும் அழத் துவங்கினேன். அப்போதுதான் பல தாய்மார்களை தங்களது குழந்தைகளிடமிருந்து பிரிக்கும் இந்தக் கொடிய நோய் எதிர்ப்பிற்காக அர்த்தமுள்ள வகையில் செயல்படவேண்டும் என தீர்மானித்தேன். என்னுடைய பாட்டியையும் புற்றுநோய் காரணமாகவே நான் இழந்துவிட்டேன். அப்போது குழந்தையாக இருந்த நான் என் கண்கள் முழுவதும் கனவுகள் நிறைந்திருக்க இந்த உலகை புற்றுநோயிலிருந்து காப்பேன் என அவருக்கு வாக்களித்தேன்,” என்றார்.

’வுமன் ஆன் விங்ஸ்’ கூட்டு நிர்வாக இயக்குனர் ரொனால்ட் வேன் ஹெட் ஹாஃப் ஆரோக்கியாவின் வழிகாட்டி ஆவார். 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற AIIMS முன்னாள் தலைவர் டாக்டர் பிரமோத் கே ஜுல்கா ஆரோக்கியாவின் முதன்மை ஆலோசகர் ஆவார்.

செயல்பாடுகளின் துவக்கம்

ஆரோக்கியா அதன் இயக்கத்தை டாக்டர் ப்ரியஞ்சலியின் சொந்த ஊரான மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில் துவங்கியது. இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் புகையிலை, பாக்கு போன்றவை அதிகளவில் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் காட்மியம், ஆர்சனிக் போன்றவற்றை சுவாசிக்க நேர்வதால் தொழில்சார்ந்த ஆபத்துகள் இருப்பதாலும் இந்தப் பகுதி நாட்டில் அதிகளவு புற்றுநோய் பாதிக்கும் பகுதியாக கருதப்படுகிறது.

2020-ம் ஆண்டில் 17.3 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு உண்டாகாக்கூடும் என்றும் 8.8 லட்சத்திற்கும் மேலானோர் இந்த நோய் தாக்கத்தினால் உயிரிழக்கக்கூடும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவிக்கிறது. இந்தியாவில் பொதுவாக காணப்படும் புற்றுநோய் வகை மார்பக புற்றுநோயாக்கும். அதைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரவலாகக் காணப்படுகிறது. 2016-ம் ஆண்டு 1.5 லட்சம் பேருக்கு புதிதாக மார்பக புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக இந்தக் கவுன்சில் மதிப்பிடுகிறது. 2016-ம் ஆண்டு பத்து சதவீத்திற்கும் மேல் அனைத்தும் புதிதாக பதிவு செய்யப்பட்ட புற்றுநோய் தாக்கமாகும்.

நாட்டில் ஹெல்த்கேர் என்பதே தவறான சொல்வழக்காக உள்ளது. மூன்றாம் நிலை மையங்களில் நோய் மேலாண்மையில் காணப்படும் இடைவெளியானது அறியாமையால் உருவானதாகும். மார்பக புற்றுநோய் போன்ற நோய் பாதிப்பால் பத்தில் எட்டு பெண்கள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் மார்பக புற்றுநோய் தாக்கம் அதிகமாக காணப்படும் மாநிலங்களிலும் விரைவாக நோய்கண்டறியப்படுவதால் பத்தில் ஒன்பது பேர் உயிர்பிழைக்கின்றனர்,” என்றார் ப்ரியஞ்சலி.

எளிதாக பாதிக்கப்படுவோரை இலக்காகக் கொண்டனர்

எளிதாக பாதிப்படையக்கூடியப் பகுதியை இந்தக் குழுவினர் கண்டறிகின்றனர். அதில் ஆரம்ப சுகாதார வசதிகளையும் அவற்றை அணுகக்கூடிய தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கிராமத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு முற்றிலும் எதிரான நிலையில் இருக்கும் மற்றொரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பகுதிகளின் பாதிப்புக் காரணிகளை ஆய்வு செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தக் குழுவில் மருத்துவர்களும் தன்னார்வலர்களும் உள்ளனர். இவர்கள் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்கின்றனர். அங்குள்ள பெண்களிடம் நோய் குறித்துப் பேசுகின்றனர். மருத்துவ ரீதியாக ஆய்வு செய்வதுடன் மார்பக சுய பரிசோதனை குறித்து கற்றுக்கொடுக்கின்றனர்.

ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலையாகும். மேலும் லோகோவில் காணப்படும் ‘O’ என்கிற இரண்டு எழுத்துக்கள் பெண்ணின் மார்பகங்களைக் குறிக்கிறது. இவை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. லோகோவில் மூக்குக்கண்ணாடியுடன் காணப்படும் இளம்பெண் எங்களது அடையாளமாகும். இளம் வயதில் ஏற்படும் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதை பிரச்சாரம் செய்யும் வகையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கும் இளம்பெண்ணாக இவரை சித்தரித்துள்ளோம்,” என ப்ரியஞ்சலி விவரித்தார்.

சுகாதார நிலையை ஆய்வுசெய்தல்

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவும் ஆரோக்கியாவின் செயல்முறையில் இந்தியாவின் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்களின் தற்போதைய சுகாதார நிலையை ஆய்வு செய்கின்றனர். இவர்களது கணக்கெடுப்பு மற்றும் கள நடவடிக்கைகளின் அடிப்படையில் 50 பக்க அறிக்கையை உருவாக்குகின்றனர். பின்னர் இந்த அறிக்கையை ஆய்வு செய்து கிராமங்களில் சிறப்பான வசதிகளை வழங்குவதற்காக கூட்டுப்பணியாளர்களுன் இணைந்து செயல்படுகின்றனர்.

சுகாதார விழிப்புணர்வு, மருத்துவர்களை சந்திக்கும் கால இடைவெளி ஆகியவை குறித்த கேள்விகள் கணக்கெடுப்பில் கேட்கப்படும். அத்துடன் அவர்களது அன்றாட உணவு வழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி, மன அழுத்தத்திற்கான காரணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை தொடர்பான கேள்விகளும் கணக்கெடுப்பில் இடம்பெற்றிருக்கும். 

நான்காம் நிலை பகுதிகளில் உள்ள பெண்களை அணுகுவதும் அவர்களுடன் உரையாடுவதும் ஆரோக்கியா குழுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏனெனில் இந்தப் பகுதிகளில் உள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவோ பள்ளிக்குச் செல்லவோ கூட அனுமதிக்கப்படுவதில்லை.

உத்திரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரோக்கியா ’Touching million lives till last mile’ என்கிற திட்டத்தைத் துவங்கியது. இவர்கள் ஏற்கெனவே 1.37 லட்சம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

”என்னுடைய நோக்கம் ஒன்றுதான். 2050-ம் ஆண்டில் இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகை உலகளவிலான கிராமப்புற மக்கள் தொகையில் பாதியாக இருக்கும். எனவே இந்தப் பகுதியில் ஆரோக்கியா செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்றார்.

டெலிமெடிசன்

ஆரோக்கியா மேற்குவங்கம், டெல்லி-என்சிடி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் தனது சேவைகளை விரிவடையச் செய்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்கம், உள்ளூர் நிர்வாகிகள், தனியார் ஆரம்ப சுகாதார சேவை வழங்குவோர் மற்றும் அவர்களது யூனிட்கள் (UNDP, WHO, UNICEF மற்றும் பிற லாப நோக்கமற்ற நிறுவனங்கள்) ஆகியவற்றுடன் இணைந்து இக்குழுவினர் அடுத்த 60 மாதங்களில் 600 நான்காம் நிலை கிராமப்புறங்களில் உள்ள 90,000 நலிந்த பெண்களைச் சென்றடைய விரும்புகின்றனர்.

இந்த லாப நோக்கமற்ற முயற்சிக்கு கிராமின் ஹெல்த்கேர், Abraxas லைஃப்ஸ்டைல், Eximious ஹெல்த் ஆகியவை ஆதரிக்கிறது.

கிராமங்களில் உள்ள நோயாளிகள் மெட்ரோ நகரங்களில் உள்ள மருத்துவர்களை அணுக டெலிமெடிசன் சரியான தேர்வு என நாங்கள் நம்புகிறோம். எனினும் இந்த கிராமங்களில் இணைய வசதியும் தேவையான வளங்களும் போதுமான அளவு இல்லாததும் வலுவான டெலிமெடிசன் சாதனத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாததும் மிகப்பெரிய தடையாக உள்ளது,” என்று ப்ரியஞ்சலி பகிர்ந்துகொண்டார்.

IoT-சார்ந்த சாதனத்தை இவரது குழு தற்போது உருவாக்கி வருகிறது. இந்தச் சாதனம் நோயாளியின் முக்கிய அறிகுறிகளைப் (vitals) பதிவு செய்யும். இது ஆஃப்லைனில் இயங்கக்கூடியதாகும்.

”இந்த கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கை கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகும். இவர்களது விலைமதிப்பில்லா புன்னகையும் இவர்களது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆரோக்கியா நிரந்தர தீர்வளிக்கும் என்கிற நம்பிக்கையுமே எங்களது குழுவிற்கு உந்து சக்தியாக விளங்குகிறது,” என்று கூறி நிறைவு செய்தார் ப்ரியாஞ்சலி.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL