115 ஆண்டு கால பாரம்பரியத்துடன் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ள 'மதர்ஸ் ரெசிபி'

0

1901-ம் ஆண்டு. குதிரை வண்டிகளும் மோட்டார் கார்களும் இந்திய சாலைகளில் பறந்து கொண்டிருந்த காலகட்டம். நாடு காலனி ஆட்சியை எதிர்த்துப் போராடி வந்த சமயத்தில், மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிலை பிரிவில் வணிக வாய்ப்பு இருப்பதை தேசாய் பிரதர்ஸ் லிமிடெட் கண்டனர்.

பிரிட்டிஷ்காரர்கள் புகை பிடிப்பதில் பரபரப்பாக இருந்தபோது ஹரிபாய் வி.தேசாய் சூழ்நிலையை எதிர்த்துப் போராடி சொந்த தொழிற்சாலையைத் துவங்கினர். அதுதான் தற்போது பிரபலமாக காணப்படும் தேசாய் பீடி. 115 ஆண்டுகளாக செயல்படும் தேசாய் பிரதர்ஸ் லிமிடெட் அனைத்து தடைகளையும் எதிர்த்து செயல்பட்டு லாஜிஸ்டிக்ஸ், உணவகங்கள், சிறப்பு ரசாயனங்கள், மருத்துவமனைகள், உணவு பதப்படுத்துதல் ஆகிய கூடுதல் வணிகங்களிலும் கவனம் செலுத்தினர்.

தேசாய் பிரதர்ஸ் இன்று 1,25,000 ஊழியர்களை பணியிலமர்த்தியுள்ளனர். இந்நிறுவனம் பிரபல ப்ராண்டான ’மதர்ஸ் ரெசிபி’யின் தாய் நிறுவனமாகும். வணிக பிரிவுகளை விரிவுப்படுத்தி வந்த இந்நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு முன்பு உணவுப் பிரிவு மிகவும் லாபகரமான பகுதி என்பதை உணர்ந்தனர்.

மதர்ஸ் ரெசிபி பயணத்தின் துவக்கம்

2002-ம் ஆண்டு தேசாய் பிரதர்ஸ் இந்த ப்ராண்டை வாங்கியபோதுதான் மதர்ஸ் ரெசிபியின் பயணம் துவங்கியது. தேசாய் பிரதர்ஸ் உணவு பிரிவின் வணிக மேம்பாடுகள் துறைத் தலைவர் சஞ்சனா தேசாய் குறிப்பிடுகையில்,

”அந்த சமயத்தில் மஹாராஷ்டிரா மற்றும் வேறு சில மாநிலங்களில் மட்டுமே ஊறுகாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எங்கள் குடும்பம் பல்வேறு வணிக பிரிவுகளில் கவனம் செலுத்த விரும்பியது. உணவுப் பிரிவு வளர்ச்சியடைந்து வரும் துறை என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். முதலில் என் அப்பா வணிகத்தை எடுத்துக்கொண்டார். அவர் காலை நான்கு மணிக்கு மண்டிக்குச் சென்று ஊறுகாய் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் மாங்காய்களை ஆய்வு செய்தார்,” என்றார்.

சஞ்சனா தற்செயலாகவே மதர்ஸ் ரெசிபி பகுதியில் செயல்படத் துவங்கினார். இளம் பருவமான 18 வயதில் அவருக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் செயல்படவே விரும்பினார். தனது கனவை நோக்கி அவர் பயணிக்க அவரது அப்பாவும் தடுக்கவில்லை. அவரது ஆர்வத்திற்கு அவர் அப்பா ஆதரவளித்த செயலே அவர் குடும்ப வணிகத்தில் ஈடுபட வழிவகுத்தது. வணிகத்தில் கணக்குகளை முறையாக நிர்வகிக்கக் கற்றுக்கொள்வதே முக்கிய அம்சம் என்று அவரது அப்பா வலியுறுத்தினார்.

”நான் அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நிதி மற்றும் பொருளாதாரத்தை முக்கிய பாடமாகவும் சர்வதேச வணிகத்தை துணை பாடமாகவும் எடுத்துக்கொண்டு அமெரிக்காவின் ரோட் தீவு பகுதியில் படித்தேன். பேஷன் பிரிவில் என்னுடைய திறனை மேம்படுத்திக் கொள்ளவும் நுணுக்கங்களைக் கற்றறியவும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஃபேஷன் பள்ளியிலும் சேர்ந்துகொண்டேன். 

”இந்தப் படிப்புகளை மேற்கொண்ட காலகட்டத்தில் வணிகம் குறித்த என்னுடைய புரிதல் மேலும் விரிவடைந்தது. நான் குடும்ப வணிகத்தில் இணைந்துகொண்டு அதன் வளர்ச்சிக்கு உதவி அதன் மரபை முன்னெடுத்துச்செல்லவேண்டும் என தீர்மானித்தேன்,” என்றார் சஞ்சனா.

உற்பத்தி உலகில் நுழைதல்

நான்கு தலைமுறைகளில் குடும்ப வணிகத்தில் இணைந்துகொண்ட முதல் பெண்மணி சஞ்சனாதான். பட்டப்படிப்பை முடித்த பிறகு 23 வயதில் வணிக நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு தகுதி அடிப்படையிலேயே மரியாதையையும் தனக்கான இடத்தையும் பிடிக்கவேண்டும் என்கிற உறுதியுடன் செயல்படத் துவங்கினார்.

”உயர்மட்ட நிர்வாகத்தில் இளம் நபராக இருப்பதால் சிறப்பாக பணிபுரிந்து என் திறனை வெளிப்படுத்தவேண்டும் என்பதை அறிந்திருந்தேன்,” என்றார்.

அதாவது வணிகத்தை அடிப்படையில் இருந்து புரிந்துகொள்ள விரும்பினேன். மூலப்பொருட்களைப் புரிந்துகொண்டு தரமான பொருட்களை சரியான அளவில் சரியான சமயத்தில் பெறவேண்டும் என்பதைக் கற்றறிய சில காலம் எடுத்துக்கொண்டது. சஞ்சனா அப்பாவின் ஆலோசனையைப் பின்பற்றி தினமும் தொழிற்சாலையைப் பார்வையிட்டு செயல்முறைகளைப் புரிந்துகொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

சஞ்சனா பங்கேற்ற ப்ராடக்ட் அறிமுகங்களில் ஒன்று 2004-ம் ஆண்டு தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிப் பைகளில் இருக்கும் கலவை மசாலா வகைகள்.

படிப்பினைகள்

அறிமுகம் மற்றும் விளம்பரங்களில் பணத்தை செலவிட்ட பிறகு சந்தையில் ஏற்கெனவே இந்த பொருளுக்கான தேவை குறைவாக இருப்பதால் யாரும் தயாரிப்பை வாங்க முன்வராததை இக்குழுவினர் உணர்ந்தனர். ஏற்கெனவே இருந்த பேக்கிங் முறையிலேயே மக்கள் திருப்தியடைந்துள்ளதையும் இந்தப் பகுதியில் புதுமைக்கான தேவை இல்லாததையும் தெரிந்துகொண்டனர்.

”நாங்கள் கற்ற முதல் பாடங்களில் இதுவும் ஒன்று. சரியான நேரத்தில் சரியான தயாரிப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ உங்களது திட்டம் சிறப்பாக இருப்பதும் அதே அளவு முக்கியமாகும். ஆனால் அந்த படிப்பினைக்குப் பிறகு நாங்கள் சந்தையில் இருந்து ஒரு தயாரிப்பையும் திரும்பப் பெறவில்லை,” என்றார்.

இன்று மதர்ஸ் ரெசிபி 50-க்கும் அதிகமான ஊறுகாய் வகைகளைக் கொண்டுள்ளது. பெயருக்கு உண்மையாக இருக்கும் வகையில் இக்குழுவினர் ரெசிபிக்களை ஆய்வு செய்து சோதித்த பிறகே உற்பத்தியைத் துவங்குகின்றனர். ”நமது பாட்டிகள் இவ்வாறுதான் தயாரிப்பார்கள் என்பதால் ரெசிபி மிகச்சரியாக இருப்பதை உறுதிசெய்வது முக்கியமாகும்,” என்றார் சஞ்சனா.

பாரம்பரியத்தை மீட்டெடுத்தல்

ஏடிஎஃப் உடனான ஒப்பந்த உற்பத்தியில் ஈடுபட்ட ஓராண்டிற்குப் பிறகு சொந்த உற்பத்தியைத் துவங்கினர். மூன்று மாதங்களில் சொந்த உணவு தொழிற்சாலை செயல்படத் துவங்கியது. ஆரம்பகட்டத்தில் மேற்கத்தியப் பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டனர். டெல்லி மற்றும் பெங்களூரு சந்தையில் சிறியளவில் செயல்பட்டனர். அதே போல் துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

ரெசிபிக்கள் அந்தந்த பகுதியில் தயாரிக்கப்படும் வகையிலேயே இருப்பதை உறுதிசெய்ய இக்குழுவினர் அதன் பிரதான இடத்திற்கே செல்கின்றனர். உதாரணத்திற்கு ஊறுகாய் மற்றும் தயார்நிலை உணவுப் பிரிவில் இவர்கள் கேரள உணவு வகைகளை அறிமுகப்படுத்தியதாகவும் அதற்காக ஆர் & டி குழு கேரளா சென்றாதாவும் சஞ்சனா தெரிவித்தார்.

”அங்கு ஒரு மாதம் அவர்களை தங்கவைத்தோம். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் மசாலாக்களையும் ஆராயச் செய்தோம். கைகளால் எழுதப்பட்டிருக்கும் பழைய ரெசிபிகளை படித்து ஆராய்ந்தோம். இதன் மூலம் அவர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்கள், சமையல் எண்ணெய், செயல்முறை, மசாலாக்களை எப்போது சேர்க்கவேண்டும், சேர்க்கக்கூடாது போன்ற தகவல்கள் என அனைத்தையும் அடிப்படையில் இருந்து ஆய்வு செய்தோம். ஏனெனில் இத்தகைய நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது அத்தியாவசியமானதாகும்,” என்றார்.

2003-ம் ஆண்டு இந்தியாவின் 20 மாநிலங்களில் விநியோக நெட்வொர்க்கை உருவாக்கி மதர்ஸ் ரெசிபி ப்ராண்டை தீவிரமாக விரிவுபடுத்தத் துவங்கினர். அத்துடன் உலகளவிலும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்தனர்.

இவர்களது தொழிற்சாலைக்குள்ளாகவே உற்பத்தி செய்யப்படுவதால் மூலப்பொருட்கள் அந்தந்த பருவகாலத்தில் அதிகளவில் வாங்கப்படுகிறது. இவை சுத்தம் செய்யப்பட்டு ரெசிபிக்கு ஏற்றவாறு நறுக்கப்படுகிறது. மாங்காய் ஊறுகாயின் ஒவ்வொரு வகைக்கும் அதற்கே உரிய பிரத்யேக நறுக்கும் செயல்முறைகள் உள்ளது என சஞ்சனா குறிப்பிட்டார்.

சிலவற்றை தானியங்கி முறையில் நறுக்கினாலும் சிலவற்றை கைகளாலேயே நறுக்கவேண்டும். சரியான எண்ணெயையும், தொழிற்சாலையிலேயே வறுக்கப்பட்ட மசாலாக்களையும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன் அந்தந்த பகுதியின் நடைமுறைக்கு ஏற்றவாறு ஊறுகாயை ஊறவைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஆர்டர் பெற்ற பிறகு பாட்டிலில் நிரப்பும் பணியையும் பேக் செய்யும் பணியையும் மேற்கொள்கின்றனர்.

”தரத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக முடிந்தவரை தானியங்கி முறையையே பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆனால் இது கடுமையான செயல்முறையாகும்,” என்றார் சஞ்சனா.

வருவாய் மற்றும் சந்தை பங்களிப்பு

சஞ்சனா தயாரிப்புகளை உருவாக்குவதுடன் மதர்ஸ் ரெசிபிக்கான முழுமையான மார்கெட்டிங் தகவல் தொடர்பு தளத்தையும் உருவாக்கியுள்ளார். “எங்களது பிரத்யேக இ-ஸ்டோர் விற்பனையைத் தவிர ஆன்லைன் பகுதியைப் பொருத்தவரை தற்சமயம் பிக்பாஸ்கெட், க்ரோஃபர்ஸ், அமேசான், ஆரம்ஷாப், ஃபார்ம்2கிச்சன், மைகிரஹக், கால்அண்ட்ஆர்டர், FreshnDaily ஆகிய தளங்கள் வாயிலாக எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம்,” என்றார்.

2014-2015 நிதியாண்டில் மதர்ஸ் ரெசிபி 200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. 2015-16 நிதியாண்டில் இது 250 கோடியாக உயர்ந்தது. இந்த ஆண்டு 25 சதவீத வளர்ச்சியை இந்த ப்ராண்ட் எதிர்பார்க்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் 500 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது.

400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஊறுகாய் சந்தையில் மதர்ஸ் ரெசிபி 25% பங்களிப்பதாகவும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் பேஸ்ட் சந்தையில் 20% பங்களிப்பதாகவும், 400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சமைக்க தயார்நிலையில் இருக்கும் பொருட்கள் சந்தையில் 10% பங்களிப்பதாகவும் யூரோமானிட்டர் தெரிவிக்கிறது.

தற்சமயம் இந்தியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, யூகே, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் இந்த ப்ராண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 42-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பாரம்பரிய மற்றும் நம்பகமான இந்திய உணவு பொருட்கள் வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஊறுகாய்கள், மசாலா பேஸ்ட், மாங்காய் சட்னி, தயார்நிலை உணவு, கலந்த மசாலாக்கள், பாரம்பரியத்திற்கேற்ற சட்னி வகைகள், பப்பட், தயார்நிலை மசாலா கலவைகள், இன்ஸ்டண்ட் மிக்ஸ் என பல்வேறு தயாரிப்புகள் இதன் தொகுப்புகளில் அடங்கும். பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தவிர்த்து இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப்படுவதாக சஞ்சனா குறிப்பிட்டார்.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதர்ஸ் ரெசிபி கொல்கத்தாவைச் சேர்ந்த Elmac Agro Manufacturing நிறுவனத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்கியது. Elmac ப்ராண்ட் இந்த நிறுவனத்துடையதாகும். இந்த விரிவாக்கத்தின் காரணமாக மதர்ஸ் ரெசிபி அதன் தயாரிப்பு தொகுப்பில் சாஸ் தயாரிப்பையும் இணைத்துக்கொண்டு கிழக்குப் பகுதிகளில் விநியோக நெட்வொர்க்கை 150-ல் இருந்து 350-ஆக உயர்த்தியது.

Elmac மொத்த வருவாயாக 40-50 கோடி ரூபாய் கொண்டிருந்தது. இதில் 10 கோடி ரூபாய் உள்ளூர் சந்தையில் இருந்து ஈட்டப்பட்டதாகும். தேசாய் பிரதர்ஸ் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகளில் 40-50 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 50-100 கோடி ரூபாய் கார்பஸ் இருப்பதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் வருவாயில் 40 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதி பங்களிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிறுவனம் Spreadon நிறுவனத்தையும் கையகப்படுத்தி ஸ்பிரெட் மற்றும் டிப் பிரிவிலும் (spreads and dip segment) செயல்படத் தொடங்கினார்கள். தெற்கு சந்தையில் எம்டிஆர், ப்ரியாஸ் பிக்கிள் போன்றவை மதர்ஸ் ரெசிபியின் போட்டியாளர்களாகும்.

மதர்ஸ் ரெசிபியின் பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது என நம்புவதாக தெரிவிக்கிறார் சஞ்சனா. அவர் கூறுகையில்,

”என் அப்பாவுடனும் தாத்தாவுடனும் அலுவலகத்திற்கு சென்ற நாட்கள் நினைவில் உள்ளது. அவர்கள் கடினமாக உழைப்பதையும், வணிகம் தொடர்பான கடுமையான முடிவுகள் எடுப்பதையும் கவனித்துள்ளேன். அத்துடன் என் கொள்ளு தாத்தா சிறியளவியில் தொடங்கி முன்னேறியது குறித்தும் அவர்களிடமிருந்து கேட்டறிந்தேன். நான் இன்னும் அதிக தூரம் பயணித்து சாதிக்கவேண்டியுள்ளது,” என்றார்.

கட்டுரை : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா