பில்லியன் டாலர் நிறுவனமான பாபா ராம்தேவின் 'பதஞ்சலி'

0

பாபா ராம்தேவ், ஹரித்வாரைச் சேர்ந்த யோகா குரு. முன்பெல்லாம் எப்போதாவது தான் ஊடகங்களில் இவரது பெயர் அடிபடும். ஆனால் 2011 ஜன்லோக்பால் போராட்டத்திற்குப்பிறகு பலரும் இவரை கவனித்தனர். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிக்கப் போவதாக தெரிவித்த இவர், தொலைக்காட்சிகளில் யோகா நிகழ்ச்சி நடத்தி பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவானார்கள். இதன்பிறகு 'பதஞ்சலி' என்ற தனது ஆயுர்வேத நிறுவனத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். இந்த நிறுவனம் 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது இது பில்லியன் டாலர் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.

வளர்ச்சி

ஆரம்பத்தில் மருத்துவம் சார்ந்த பொருட்களை மட்டுமே உருவாக்கி வந்த இந்நிறுவனம் 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான பொருட்களை விற்கத்துவங்கியது. நூடுல்ஸ், சலவை பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் என பலவற்றை விற்கத் துவங்கினர். பதஞ்சலி தனக்கென தனியே ஒரு இணையதள விற்பனை மையத்தை வைத்திருக்கிறது. மேலும் 5000 பிரான்சைஸ் ஸ்டோர்ஸையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் ஃப்யூச்சர் க்ரூப் மற்றும் பிக்பஜாரோடு இவர்கள் கைகோத்தார்கள். அதுமட்டுமல்லாமல் பிக்பேஸ்கட் என்ற இணைய வர்த்தக நிறுவனம் மூலமாக நெய், தேன் மற்றும் பற்பசை போன்ற நான்கைந்து பொருட்களை மட்டும் விற்கிறார்கள். திறமையான விநியோகச் சங்கிலி மற்றும் உள்ளூர் விற்பனையாளர்கள் தான் பதஞ்சலியின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம் என்கிறார் டெக்னோபாக் நிறுவனத்தின் ஆலோசனைத் தலைவர் அரவிந்த் சிங்கால். மற்ற பெருநிறுவனங்களைப் போல மார்கெட்டிங்கிற்கே அதிகம் செலவிடும் நிறுவனமல்ல பதஞ்சலி. பாரம்பரியமான விற்பனை வழிமுறைகளையே கையாண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு வளர்ச்சியை எட்டியிருப்பதாக 2015ம் ஆண்டு வெளியான சிஎல்எஸ்ஏ ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த நிதியாண்டில் 2,500 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியிருக்கிறார்கள். இந்த நிதியாண்டில் இது 5000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4500 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2016 -17 நிதியாண்டில் 7000 கோடி ரூபாய் வருவாய் என்ற இலக்கை எட்டிவிடுவார்கள் என்று இப்போதே கணிப்பு வெளியாகி இருக்கிறது.

போட்டி அதிகரித்திருக்கிறது

தற்போது இவர்களுக்கு கடுமையாக போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பெருநிறுவனங்களுக்கும் ஒரு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக புதிய திட்டம் ஒன்றை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். “ஒருவேளை இயற்கை பொருட்களை நோக்கி அவர்கள் நகர்ந்தாலும் இந்தியா முழுவதும் ஒரே ராத்திரியில் சென்று சேருவதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ப அவர்கள் மாற வேண்டிய தேவை இருக்கிறது” என்கிறார் அரவிந்த்.

நெஸ்லே, கோல்கேட், ஐடிசி போன்ற பல பெரிய நிறுவனங்களுக்கு பதஞ்சலியின் வளர்ச்சி அதிர்ச்சியளித்திருக்கிறது. அதேபோல டாபர் மற்றும் கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களும் தப்பவில்லை. பதஞ்சலியின் வளர்ச்சி ஓலா, உபர் போன்ற புதுமுக நிறுவனங்களுக்கு இணையான ஒன்றாக கவனிக்கப்படுகிறது. காரணம் இந்த இரு நிறுவனங்களும் பல மாநில அரசுகளோடு கைகோர்த்தன. பதஞ்சலி அதேபோல மகாராஷ்டிரா அரசோடு கைகோர்த்திருக்கிறது. காடுகளில் கிடைக்கும் பொருட்களில் எஞ்சியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளை மகாராஷ்டிரா அரசு வாங்க ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் ஐந்து உணவுப்பூங்காவை நிறுவப்போவதாக ராம்தேவ் தெரிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று மத்தியப் பிரதேசத்திலும் மற்றொன்று மஹாராஷ்டிராவிலும் உறுதியாகி இருக்கிறது. பதஞ்சலியின் பொருட்கள் உருவாக்கத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்தே எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பதஞ்சலிக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடைத்தரகர்கள் யாரும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது செயல்பாட்டு லாபத்தை 20 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. அதேபோல டாபர் போன்ற நிறுவனப் பொருட்களோடு ஒப்பிடும்போது பதஞ்சலி பொருட்களின் விலை 30 சதவீதம் விலை குறைவு. சில்லறை வணிகர்கள் 10லிருந்து 20 சதவீதம் லாபமும், விநியோகஸ்தர்கள் 4லிருந்து 5 சதவீத லாபமும் பெறுகிறார்கள்.

பெரிய ஆட்கள் யாருமில்லை

மற்ற எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களைப் போல மனித வளத்திற்கு அதிகமாக செலவிடுவதில்லை. பதஞ்சலியிடம் இருக்கும் மேலாண்மை குழுவிற்கு குறைவாகவே செலவிடுகிறார்கள். அந்த குழுவில் பெரிய ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் எல்லோரும் திறமையான இளைஞர்களாக இருக்கிறார்கள். ஆயுர்வேதா மற்றும் தொண்டு மூலமாக சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று நம்பும் இளைஞர்கள் அவர்கள். தற்போது ராம்தேவிடம் நிறுவனத்தின் எந்தவிதமான பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இணை நிறுவனரான ஆசார்யா பாலகிருஷ்ணா யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் நிபுணராக இருக்கிறார். இவரே இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இதற்கு முன்பு தலைமை செயல் அதிகாரியாக இருந்த எஸ்கே பத்ரா ஐஐடி-ஐஐஎம் அகமதாபாத்தில் பயின்றவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு இந்நிறுவனத்தைவிட்டு வெளியேறினார். காரணம் இந்நிறுவனம் ஆயுர்வேதத்தில் இருந்து எஃப்எம்சிஜி துறைக்குள் நுழைந்ததே.

மேலாண்மைக் கல்வி பயின்றிருப்பதால் மட்டுமே ஒருவர் சிறந்த தொழில் நிபுணராகிவிட முடிந்ததில்லை. பில்கேட்ஸ் மற்றும் மார்க் ஜக்கர்பெர்க் ஆகிய இருவரும் கல்லூரி இறுதி ஆண்டைக் கூட முழுமையாக முடிக்காதவர்கள் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். பதஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவு வளர்ச்சியை எட்டியிருக்கிறது. உதாரணமாக 80களில் இருந்த கார்டன் வரேலி சேலை நிறுவனத்தைப் போன்ற வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

சிறந்த எதிர்பார்ப்பு

ராம்தேவின் புகழும் அவரது ரசிகர்களுமே பதஞ்சலியின் வெற்றிக்குக் காரணம் என ஒருவர் நினைக்கலாம். ஆனால் அது ஒன்று மட்டுமே காரணம் இல்லை. “அவர் பணக்காரர்களுக்கு குருவாக இல்லை. ஆனால் அவரது பொருட்களை பணக்காரர்கள்கூட வாங்குகிறார்கள். ஆனால் இப்போது எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. மேக்கி படுதோல்வி அடைந்த பிறகு அதை யாரும் வாங்குவதில்லை” என்கிறார் அரவிந்த்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை மையமும் இதேபோன்ற தொழிலில் ஒப்பிடப்படுகிறது. இவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தானியங்கள், ஆரோக்கிய பானங்கள் மற்றும் தனிநபர்களுக்கான பொருட்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிடம் 600 ஃபிரான்சைஸ் ஸ்டோர்ஸ் மற்றும் ஒரு இணைய விற்பனை மையமும் இருக்கிறது. ஆனால் இவர்களால் பதஞ்சலியின் வெற்றியை காலி பண்ண முடியுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை பதஞ்சலியை எதேனும் ஒரு நிறுவனத்தோடு ஒப்பிட வேண்டும் என்றால் ஃப்ளிப்கார்ட்டோடு ஒப்பிடலாம். பதஞ்சலி துவங்கிய ஓராண்டுக்குப் பிறகு தான் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இவர்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பில்லியன் டாலர் விற்பனையை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி ராம்தேவின் வெற்றிக்கதை எம்பிஏ மாணவர்களுக்கு பாடமாக சொல்லித்தரப்படுமா என்பதே!

ஆங்கிலத்தில் : ஆதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்வரா வைத்தீ 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

700 மில்லியன் டாலர் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் முன்னிலை வகிக்கும் சைன் ஈஸி

இந்துலேகா'வுக்கு 330 கோடி..!

ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி பெற்ற 'ஹைபர்வெர்ஜ்'