மத்திய அரசின் தூய்மை விருதுகள்- தமிழகம் முதலிடம்!

0

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உயர் கல்வி நிறுவனங்களுக்கான 2017 ஆம் ஆண்டுக்கான தூய்மை விருதுகளை புதுதில்லியில் வழங்கினார்.

தமிழக கல்லூரிகளில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராமகிருஷ்ணா மிஷ்சன் விவேகானந்தா கல்லூரி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ். என், ஆர். சன்ஸ் கல்லூரி, கே. ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவ்விருதை பெற்றுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களில் அமிர்த்தா விஷ்வா வித்தியபீத்தம், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெண்களுக்கான விவேகானந்தா பொறியியல் கல்லூரி, ஆர். எம். டி. பொறியியல் கல்லூரி, ஆர். எம். கே. பொறியியல் கல்லூரி இவ்விருதை பெற்றுள்ளன. அரசு கல்வி நிறுவனங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இவ்விருதை பெற்றுள்ளன.

தூய்மை விருதுகள் பெற்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களை பாராட்டிய மத்திய அமைச்சர், தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் தூய்மைக்கான மிக முக்கிய இயக்கமாக உள்ளது என்று கூறினார். 

"இந்த இயக்கத்தின கீழ் அக்டோபர் 2, 2014 முதல் இந்தியாவில் 4 கோடி 8 லட்ச கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு லட்ச கிராமங்களில் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் மற்றம் நிறுவனங்களின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடியின் ’தூய்மை இந்தியா’ கனவுக்கு தூதுவர்களாக மாணவர்கள் உள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களை திறன் மிகு வளாகங்களாக மாற்றி, தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை மீது கவனம் செலுத்த வேண்டும். திறன்மிகு வளாகமாக நிறுவனத்தை மாற்ற நீர் மற்றும் மின்சாரத்தை சேமித்து தூய்மையை ஊக்குவித்து கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார். 

இந்தியாவை தூய்மையாக மாற்றுவதற்கும் தூய்மையான இந்தியா இயக்கத்திற்கும் பங்களிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த தமது அமைச்சகம் அலுவலர்களை அமைச்சர் பாராட்டினார். மற்றவர்களுக்கும் இந்த தூய்மைக்கான செய்தியை கொண்டு செல்ல நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

தூய்மை மற்றும் சுகாதார அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்வதற்கான முறை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிவறைகள் விகிதம், சமையலறை சுகாதாரம், நீர் வசதி, நவீன கழிப்பறைகள், சமையலறை கருவிகள், கல்வி வளாகத்தின் பசுமை அளவு, தங்கும் விடுதிகள் மற்றும் கல்வி கட்டிடங்களின் கழிவுகள் அகற்றம், கழிவுகள் அகற்றும் முறை, குடிநீர் விநியோக முறை, கல்வி நிறுவனம் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அருகில் உள்ள ஏதேனும் பகுதியையோ அல்லது கிராமத்தையோ தத்தெடுப்புது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக சுமார் 3,500 உயர்கல்வி நிறுவனங்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பித்தனர். தேர்தெடுக்கப்பட்ட முதல் 174 நிறுவனங்களை யு.ஜி.சி. மற்றும் எ.ஐ.சி.டி.இ அலுவலர்கள் வளாகங்களை மேற்குறிப்பிட்டுள்ள அடிப்படை தகுதிகளை மையமாக வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் ஆகிய பிரிவின் கீழ் 25 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.