விவசாயிகளும், விற்பனையாளர்களும் பரஸ்பர இலாபம் காண உதவும் 'சன்னிபீ'

3

ஒரு வருடத்தில் 10 மாதம் பயிர் செய்து தயாரான காய்கறிகள் மற்றும் பழங்களை, அவை கெட்டுப்போவதற்கு முன் விவசாயிகள் உடனடியாக விற்றாக வேண்டும் என்னும் காரணத்தினாலே அவர்கள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர். ஏனெனில், விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி, பழங்களை சந்தை விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுத்து, மிகக் குறைந்த விலைக்கு திரட்டிகளால் வாங்கப்பட்டு திரட்டப்படுகிறது, பின் விநியோகஸ்தர்களால் பகிரப்பட்டு, பின்பு அவை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு (Wholesale), கடைசியாக அதிக விலையில் விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது.

இதனால் முதலீடு செய்ததை கூட திரும்ப பெற முடியாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். வறுமையில் வாடுகின்றனர்; தற்கொலை செய்துகொள்கின்றனர்.

விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறந்தது போல, விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கப்பட்டு, அதை மக்களிடம் விற்று, இருதரப்பினரும் பரஸ்பர இலாபம் காண வழிசெய்துள்ளது "சன்னிபீ" (Sunnybee) எனும் காய்கறி விற்பனைக் கடை . சமூக அக்கறைக்காக தொழில்முனைந்து, தற்போது ஒரு வருடம் வெற்றிகண்டுள்ள சன்னிபீ-இன் முயற்சி, சேவை, சாதனை, சவால்கள் குறித்து அதன் நிறுவனர் 'சஞ்சய் தசரி' பகிர்ந்து கொண்ட விவரங்களின் தொகுப்பு இதோ!

நிறுவனம் மற்றும் நிறுவனர் பக்கம்:

18 வயதிலேயே தன் அம்மாவின் தொழில்முனைவான "விஜய் கங்கா ஸ்பெஷலிட்டி கேர்" நிறுவனத்திற்கு உதவி செய்து, பின் அமெரிக்காவில் பாஸ்டன் கல்லூரியில் பி.பி.ஏ படித்து முடித்தவர் இந்த இளம் தொழில்முனைவர் சஞ்சய் தசரி. இந்தியாவில் தொழில்முனைய வேண்டும் என்பது இவரது ஆசை. கல்லூரி படிப்பை முடித்தவுடன், 21 வயதில் இவரும், துணை நிறுவனர் கார்த்திக் ஜெயராமன் என்பவரும் சேர்ந்து கடந்த வருடம் ஜூலை 8-ஆம் தேதி "சன்னிபீ"-ஐ தொடங்கினர். கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. ரங்கநாதன், இவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து வருகிறார். மார்க்கெடிங், பிராண்டிங், சேல்ஸ் ஆகிய சேவைகளை சஞ்சய் நிர்வகிக்கிறார். சன்னிபீ-இன் துணை நிறுவனர் தொழில்நுட்ப வளர்ச்சியை, விவசாய அறிவு கொண்டு கையாளுகிறார்.

தற்போது சன்னிபீ-இல் மொத்தம் 175 ஊழியர்கள் பணி செய்கின்றனர். ஒன்பது ஏஞ்சல் முதலீட்டாளர்களை கொண்டுள்ள இவர்கள், சுற்றியுள்ள 2 கீ.மீ தூரளவில் பொருட்களை விநியோகிக்க ஐந்து சரக்குவண்டிகள் கொண்டுள்ளனர். காய்கறிகள், பழங்களை சேமிக்க இரண்டு கிடங்குகளும் வைத்துள்ளனர். இதுவரையில் துரைபாக்கம், அடையாறு, பெசன்ட் நகர், பாலவாக்கம், நங்கநல்லூர் மற்றும் செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டி ஆகிய இடத்தில் சன்னிபீ கடைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 6.30 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை இக்கடைகள் செயல்படுக்கின்றன.

சன்னிபீ இடம் தற்போது வழக்கமாக காய்கறிகள் வாங்கும் சுமார் 2000 வாடிக்கையாளர்கள் இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுடன் சன்னிபீ-இன் தொடர்பு

முதலில் விவசாயிகள் அவர்களது உழவு இடத்தில் சந்திக்கப்படுவர். பின் அவர்களது காய்கறிகளும் பழங்களும் சன்னிபீ கூட்டாளர்கள் ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்படும். ஈயம் அளவு (lead), மெர்குரி அளவு, இ.கோலி (E.coli), பயன்படுத்தும் பூச்சிமருந்து அளவு, பச்சையச்சு (chromatography) முதலியவை பரிசோதிக்கப்பட்டு பின் அவை தரமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளபடும். விவசாயிகளுக்கு, லாபம் காணும் வகையில் விளைச்சல் செய்ய யோசனைகளும் வழங்கப்படும்.

"அதேசமயம், விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் பற்றின சுவாரஸ்ய தகவல்களும் நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. எங்கள் சேவையால் விவசாயிகளுக்கு அவர்கள் முதலீட்டை விட 20% அதிக இலாபம் காண முடிகிறது," என்கிறார் சஞ்சய்.

எங்களிடம் இருப்பவை யாவும் இயற்கைவழி வேளாண்மை காய்கறிகள் அல்ல. ஆனால், இயற்கைவழி வந்த காய்கறிகளும் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. விற்கப்படும் காய்கறிகள் யாவும் கேடு அற்றதாய் வழங்கிறோம் என்று நம்பிக்கையுடன் கூறினார் சஞ்சய்.

வாடிக்கையாளர் சேவை

மற்ற நகரங்களுக்கும் சென்னை-க்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் எல்லாம் ஒரு சூப்பர் மார்கெட்டின் ஒரு பிரிவாகத் தான் காய்கறி, பழங்கள் இருக்கும். ஆனால், சென்னையில் காய்கறி, பழங்களுக்கென தனி கடைகளும் அதற்கு தனி மரியாதையும் உண்டு.

சன்னிபீ-இன் ஊழியர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு, அதை வாடிக்கையாளர்களிடம் பகிரந்து கொள்கின்றனர். அதனால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாதி நேரம் காய்கறிகள் வாங்கினால், பாதி நேரம் அவற்றை பற்றி வினாவி பின்னணியை தெரிந்து கொள்ள செலவழிக்கின்றனர். இது வாடிக்கையாளர்-விற்பனையாளர் உறவை மேம்படுத்தி, தொழில் முன்னேற்றத்திற்கு வழி செய்கிறது. 

"தள்ளுபடி, சலுகைகள் வழங்குவதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இது தொண்டு நிறுவனம் அல்ல; நிலையான நிறுவனமாகும். நாள்தோறும் கடைகள் செயல்பட வேண்டும்; விவசாயிகளும் பயனடைய வேண்டும்; காய்கறிகளின் விலையும் மக்கள் வாங்கதக்கதாய் அமைய வேண்டும்."

வீணாகாமல் வெற்றி காணும் வியூகம்

விவசாய நிலத்தில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உழவர் சந்தைக்கு வந்து சேர்வதற்குள், அவற்றுள் 40% வீணாகிவிடுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ளவதே எங்கள் முக்கிய நோக்காகும்.

சிறந்த எஸ்.ஏ.பி. தொழில்நுட்பம் மற்றும் எங்களது ஒரு வருட சேவை விற்பனை தகவலைக் கொண்டு, எங்களிடம் இருக்கும் இருப்பை (stock) எவ்வளவு நாட்களுக்குள் எத்தனை மணிக்குள் விற்க முடியும் என்று எங்களால் கணிக்க முடியும். மேலும், "எங்களால் நேரத்திற்குள் விற்க முடிந்த அளவையே, நாங்கள் விவசாயிகளிடம் குறிப்பிட்ட காலத்திற்கு வாங்குகிறோம்", என்கிறார் சஞ்சய் தெளிவாக.

"சில காய்கறிகள் அழுகாமல் அடிமட்டும் பட்டிருக்கும். ஆனால் அவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கமாட்டார்கள். அதனால் அவற்றை அனாதை விடுதி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இலவசமாய் வழங்கிவிடுகிறோம்."

தோல் சுறுங்கிய பழைய காய்கறி, பழங்களை, எங்கள் கிடங்குகளில் உள்ள உரமாக்கல் இயந்திரத்தைக் கொண்டு 20 நாட்களில் உரமாக்கி விட்டு, அவற்றை எங்கள் கடைகளில் விற்போம் அல்லது எங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக அளித்து விடுவோம், என்று விவரித்தார்.

நோக்கமும் எதிர்காணும் சமூக மாற்றமும்!

ஒரு நாளில் மூன்று வேளை உணவின் தேவை இருப்பதால், இத்தொழில் நிலையானதாய் அதிக விற்பனை சந்தையுடன் செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளில் நாளுக்குநாள் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை மாற வேண்டும். அதற்காக சமூகத்திலும், விவசாய நிலைமை பற்றி பயில்விக்க வேண்டும்.

காய்கறி, பழங்களின் சுவை, வானிலை மாற்றம், பூச்சிகள் உட்புகுதல் இவையாவும் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. இப்பிரச்சனைகளை எதிர்த்து விவசாயம் செய்து, தரமான காய்கறி, பழங்கள் உருவாக்குவது கடினமாகும்.

மக்கள், காய்கறி ஏன் இவ்வளவு விலை அதிகமாய் இருக்கிறது? என்று கேட்பது மட்டுமல்லாமல், அவை எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, அதன் விளைச்சல் காலம், எதிர்கொண்ட சவால், தரம், கிடைக்கும் வசதி, வானிலை ஒத்துழைப்பு, சூழல் என அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஒரே காய்கறி, பழ வகைகள் உலகில் இருக்கின்றன. அனைத்தும் எளிதில் விளையப்படுபவையல்ல.

காய்கறி, பழங்களின் நிறத்தையும், தரத்தையும் மட்டும் பார்க்கும் வாடிக்கையாளர்கள், அதன் விளைச்சல் பற்றியும் விவசாயி நிலை பற்றியும் தெரிந்து கொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். சன்னிபீ அதன் வாடிக்கையாளர்கள் விவசாய அறிவு பெற வழி செய்து வருகிறது என்று விவசாயத்துறை பற்றி நன்கு ஆய்வு செய்து பேசுகிறார் சஞ்சய்.

ஒரு வருட வெற்றி பயணம்

ஒரு நாளைக்கு பத்து டன் காய்கறி மற்றும் பழங்களை சன்னிபீ விற்கிறது. தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களான அமடோரா ஐஸ்கிரீம், ரெலிஷ் ஜூஸ், சிகே'ஸ் பேக்கரி என இவர்களுக்கு 25 நிலையான விற்பனை வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

சன்னிபீ-இன் வளர்ச்சி, கடைகள் விரிவடைவதில் இல்லை; மக்களின் நம்பிக்கை சார்ந்தே உள்ளது. அந்த நம்பிக்கையை மேற்கொள்வதே எங்களுக்கு வெற்றி தரும்.

சென்னையின் வெளிப்புற ஊர்கள் மற்றும் ஆந்திரா, பெங்களூர், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

எந்த காய்கறிகள், பழங்கள் வாடிக்கையாளர் கேட்டாலும், 48 மணிநேரத்தில் அவை அவர்களை சேர்ந்துவிடும். சென்னையில் இன்னும் 20 முதல் 40 வரை சன்னிபீ கடைகள் நிறுவ உள்ளனர். ஆன்லைனில் இந்த சேவையை கொண்டு வருவதில் அவ்வளவு நாட்டம் இல்லை. ஏனென்றால், காய்கறிகளை நேரில் பார்த்து, அதனைப் பற்றி தெரிந்து கொள்ளும் இணைப்பானது ஆன்லைன் சேவையில் துண்டிக்கபட்டுவிடும். ஆனால், மக்கள் தேவைக்காக ஆன்லைன் சேவை இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் கொண்டுவர இருக்கிறோம் என்றார் சன்னிபீ-இன் ஒரு வருட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சஞ்சய். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்