செல்வத்தையும், நல்வாழ்வையும் ஒருங்கிணைத்து வாழும் மிமி பார்த்தசாரதி!

0

ஜப்பானியக் கலையில், ‘சின்ஹசி’ என்ற வார்த்தைக்கு, தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் கவசம் என்று அர்த்தம். மிமி பார்த்தசாரதி ‘சின்ஹசி கன்சல்டன்ட்ஸ்’ என்கிற தனது முதலீடு தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்தை 2005-ம் ஆண்டு தொடங்கினார். தனது நிறுவனத்தின் பெயர் தமது வாடிக்கையாளரின் முதலீட்டுக்கு கிடைக்க இருக்கும் பாதுகாப்பைப் பற்றி சிறப்பாக எடுத்து உரைப்பதாக எண்ணினார். இதற்கு முன்னர் ஐல் & எஃப்எஸ் நிறுவனத்தில் முதலீடு தொடர்பான பணியிலிருந்த மிமிக்கு முழுமையான அணுகுமுறைகளுடன் முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்க ஆசை இருந்துவந்தது.

ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தமது பணத்தை முதலீடு செய்யும் முன் இரு விஷயங்களை விளக்க வேண்டும். முதலில், பணத்தை ஏன் மற்றும் எத்தனை காலத்துக்கு முதலீடு செய்கின்றோம்? என்பதில் புரிதல் வேண்டும். அடுத்தது, அவர்களுக்கு எத்தகைய அளவிலான பணம் திரும்பப் கிடைக்கும் என்பதை கூற வேண்டியதும் அவசியம். இதுவே அவர்களது ஏற்றத்தின்போதும், இறக்கத்தின்போதும் சமநிலையைத் தரும். இதுதான், நல்வாழ்வுக்கான சாவி.”

பொறாமை தருமளவுக்கு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட நபர்கள் வரை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ள சின்ஹஸி கன்சல்டண்ட்ஸ், பெங்களூர் நகரில் இயங்கி வருகின்றது. பதினோறு பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்துக்கு, கிரண் மஜும்தார் ஷா, கெளரவ் காந்தி மற்றும் சுனில் அலக் உட்பட பெரிய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த மிமிக்கு, யோகா மற்றும் பாரம்பரிய நடனம் மீது பேரார்வம் உள்ளது. மிமியின் இளமைக்கால பெங்களூர் தற்போதைய நிலையை விட பசுமை நிறைந்ததாக இருந்தது. இயற்கை மற்றும் வனவிலங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களாக விளங்கி, பெற்றொர்களால் அவ்வப்போது இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு பயணப்பட்டார். இவர்களுக்கு உரிமையான அழகான காபித் தோட்டம் சிக்மங்களூர் பகுதியில் உள்ளது. மிமியின் தாயாருக்கு இசை, நடனம் மற்றும் யோகா மீதான ஆர்வம்தான் மிமிக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

மிமி பார்த்தசாரதி
மிமி பார்த்தசாரதி

எட்டு வயது முதல் பரதநாட்டியம் பயிலத் தொடங்கிய மிமி, இன்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி மேற்கொள்கின்றார். குழந்தைப் பருவத்தில் தனது அம்மாவின் யோகா குருவிடம் பயிற்சி பெற்றுவந்தாலும், கடந்த 2011-ம் ஆண்டு அக்‌ஷர் பவர் யோகாவின் மூலம் இந்தக் கலையை கற்பித்துவரும் அக்‌ஷர்ஜியால் மீண்டும் இதன்மீது ஆர்வம் வந்ததாக அவர் தெரிவித்தார். தன்னை அரவணைத்து வந்த பெற்றோர்களின் உடல்நிலை படுமோசமாகிப் போனபோது, இந்த யோகா அவருக்கு மன தைரியம் தந்ததாகவும், மன அமைதியைத் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

யோகா என் வாழ்வைக் கையாளும் விதத்தையே புரட்டிப்போட்டது. என்னை மேம்படுத்திக்கொண்டு, அதன்மூலம் என்னைச் சேர்ந்த யோகா, நடனம் மற்றும் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சி என அத்தனைத் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க வாய்ப்பளித்தது. 

சின்ஹஸி கன்சல்டண்ட்ஸ் தொடங்கி, சில ஆண்டுகளில் முதலீட்டு ஆலோசனையோடு நின்றுவிடாமல், தனக்கு பேரார்வமுள்ள யோகா, நடனம் போன்றவற்றையும் புகுத்த முயற்சித்தார். இந்தக் கனவு கடந்த 2014-ம் ஆண்டு ‘கிருஷ்ணா நலவாழ்வு மையத்தின்’ மூலம் உண்மையாகிப்போனது. இந்த இரு அலுவலகங்களுமே, பெங்களூரின் மல்லேஷ்வரம் பகுதியில் அமைந்துள்ள மிமியின் பரந்த விரிந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

1960-ம் ஆண்டு வாக்கில் பசுமை நிறைந்த இவரது வீடு உருவாக்கப்பட்டது. பெங்களூர் போன்ற நகரத்தில் அரிதாகிப்போன, இதுபோன்ற வீடுகளைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருந்த மிமி, தனது வீட்டையே நலவாழ்வு மையமாக்கிக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணா நலவாழ்வு மையம் மற்றும் அக்‌ஷர் பவர் யோகா ஒருங்கிணைந்து தினந்தோறும் வகுப்புக்களை நடத்தி வருகின்றன. தற்போது இவற்றின் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் நூற்று ஐம்பது. இத்துடன் பரதநாட்டியத்துக்கான வகுப்புக்களும் பரதகலை வல்லுநர் பத்மினி ரவியால் நடத்தப்படுகின்றன.

அவ்வப்போது மிமி, இந்த மையத்தில் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரைகள்:

மனீஷா ரைசிங்கானி: தொழில்நுட்பத்தின் வெற்றிப் பாதையில்!

________________________________________________________________________

யோகா மற்றும் நடனத்துக்கான கூடம்
யோகா மற்றும் நடனத்துக்கான கூடம்

கிருஷ்ணா நலவாழ்வு மையத்தின் அழகிய கூடம்

நிதி மேலாண்மை, முதலீட்டுக்கான வாய்ப்புகள், உடல்நலம் மற்றும் காப்பீடு, பண்ணை அமைக்கும் முறை, யோகாவின் பலன்கள், கட்டுப்பாடான உணவு மற்றும் நல்வாழ்வு என பல துறைகளிலும் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றது. நிதிநிலையில் வெற்றியடைய யோகாவின் அடித்தளம் பக்கபலமாக இருக்கும் என அவர் ஆழமாக நம்புகின்றார்.

இளம்பருவம் முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், உலகின் பல்வேறு மூலைகளுக்கும் மறைந்துபோன தந்தையுடன் கைகோர்த்து பயணித்துள்ளார் மிமி. தன்னை தனது தந்தையின் மிகுதியான மூட்டை என அடையாளப்படுத்திக்கொண்டார். சுவிட்சர்லாந்திலிருந்து இயங்கும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் இயக்குனராக விளங்கியதால், இயற்கையை அழிக்காத மேம்பாடு தொடர்பான கருத்தரங்கங்களுக்கு செல்லும் போதெல்லாம் மிமியும் அவருடன் பயணித்தார். இந்தப் பயணங்கள் சுவிட்சர்லாந்தின் நகரங்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தின. ஆகவே, ஜெனீவாவில் உள்ள வெப்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயில முடிவெடுத்தார்.

தனது இளமைக்காலத்தை பெற்றோருடன் பயணம் செய்து மகிழ்ச்சியாக கழித்ததைப் போல, தன்னுடைய மகளுடன் பயணித்து வருகின்றார் மிமி. மிமியின் மகள் சிட்னியில், தற்போது சுற்றுச்சூழல் உயிரியல் மற்றும் பாதுகாப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை படித்து வருகின்றார். தென் ஆப்பிரிக்கா, கென்யா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, நியூஸிலாந்து மற்றும் அலாஸ்கா போன்றவை இந்த அம்மா மகள் கூட்டணிக்கு பிடித்த பகுதிகளில் சில. இவர்கள் இந்தியாவின் பெருமையை எடுத்துரைக்கும் பல்வேறு கோயில்களுக்கும், வனவிலங்குகளின் வாழ்விடத்துக்கும் பயணித்துள்ளனர்.

மிமி தனது வேலையும், வாழ்க்கையும் வேறு வேறல்ல என எண்ணுகின்றார். தனது தாயும், மகளும் தன்னுடைய வேலையின் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதும் குடும்பம், வேலை இரண்டுக்குமான சமநிலையைத்தேடும் நிலைக்கு தன்னைத் தள்ளவில்லை என்கின்றார். தனது வாழ்வின் அத்தனை காலகட்டங்களிலும் அம்மாவின் உறுதுணையோடு அவர் கடந்துள்ளார். இறுதியாக, “என்னுடைய வேலை எனக்கு பிடித்த அனைத்தினாலும் உள்ளதால் நான் பாக்கியசாலி” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஆக்கம்: ஷரிகா நாயர் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பெண் தொழில்முனைவோர் தொடர்பு கட்டுரைகள்:

ஆடை வடிவமைப்பில் சிகரம் தொட்ட ஜ்யோதி சச்தேவ் ஐயர்!

சீமா மேஹ்தாவின் பன்முக திறன்!