ரூ.9 கோடி ஓராண்டு வரியாகக் கட்டிய ஹைதராபாத் பெண்! அப்ப சம்பளம் எவ்வளவு?

ஹைதராபாத்திலுள்ள தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஓராண்டு வரியாக ரூ.9 கோடியை கட்டியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் அதிக வரி கட்டுபவர்களில் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

0

திரைப்படத்துறையை சார்ந்த நட்சத்திரங்களே அதிக அளவில் வருமான வரி செலுத்துகின்றனர் என்று பெருமைபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதனை முறியடித்துள்ளார் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வரும் பெண் டெக்கி.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 2017-18 நிதியாண்டில் அதிக வரி செலுத்திய நபர் இவர் தான் என ஆந்திரபிரதேசம் மற்றும் தெலங்கானா வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் எஸ்பி. சௌத்ரி தெரிவித்துள்ளார். 

ஆண்டு வருமானமாக ரூபாய் 30 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ள இவர், அந்த ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அதாவது 9 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளதாக சௌத்ரி கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் அதிக சம்பளம் வாங்கும் பெண் ஊழியர் என்பதோடு அதிக வரி கட்டும் நபராக இவர் திகழ்கிறார். எனினும் தேசிய அளவில் ஒப்பிட்டு பார்த்தால் இவரை விடவும் அதிக வரி கட்டுவோர் நாட்டின் பிற பகுதிகளில் இருப்பதாக சௌத்ரி கூறியுள்ளார்.

சில லட்சங்களில் வரி கட்டினாலே நாட்டின் வளர்ச்சிக்காக நான் இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அந்தப் பெண் ஊழியர் விரும்பவில்லை. வருமான வரித்துறையினரும் அந்தப் பெண் டெக்கி பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

ஐடி துறையை சேர்ந்தவர் ஒரே ஆண்டில் 30 கோடி ரூபாய் சம்பளம் பெற முடியுமா என்ற ஆச்சரியமான கேள்விக்கு இதே துறையைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். 

“குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்றுவதற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் ஊழியர்களுக்கு இது போன்று அதிக ஊதியம் தர வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று நிறுவனம் அந்த ஊழியருக்கு அளித்துள்ள சலுகை, ஊக்கத்தொகைள் இவற்றையும் சேர்த்து ஊதியம் கணக்கிடப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் அந்தப் பெண் டெக்கிக்கு நிறுவனத்தின் பங்குச்சந்தையில் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் வரி கட்டும் போது ஊதியம் என்றே கணக்கிட்டு காட்டப்பட்டிருக்கலாம்,” என்றும் அவர் கூறுகிறார்.

பெண் டெக்கியைப் போன்றே திருப்பதியை சேர்ந்த அமரராஜா பேட்டரி நிறுவனத்தின் உரிமையாளரும் தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்லா ஜெயதேவ் மற்றும் அவரது தந்தை கல்லா ராமச்சந்திர நாயுடு இருவரும் விஜயவாடா மண்டல அளவில் வருமான வரி செலுத்துபவர்களில் முதல் இடத்தில் உள்ளனர்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆந்திராவில் அதிக வரி செலுத்துவோரில் முதல் இடத்தில் இருக்கிறது அமரராஜா. எனவே அதன் உரிமையாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள வருமான வரி தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கல்லா ராமச்சந்திர நாயுடு அழைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ஆந்திரா வங்கியும், ஆந்திராவில் செயல்பட்டு வரும் தேசிய தாதுக்கள் வளர்ச்சி கழகமும் (NMDC) அதிக வரி செலுத்தும் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் இடங்களைப் பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் கிராமினா வங்கியும் அதிக வரி செலுத்துவோரின் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஆண்டில் ஜூலை 31 (ஆகஸ்ட் 5 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது) வரை சுமார் 7.41 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டிலும் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆணையர் சௌத்ரி, கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். 2019 ஜனவரியில் இந்த அபராதத் தொகையானது ரூ.10,000 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.