தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் 80 வயது மருத்துவர்!

0

உத்தர்காண்ட்டின் தலைநகரான தெஹ்ராதூனில் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் பகுதி மால்சி டீர் பார்க். இயற்கை அழகாலும் வன விலங்குகளாலும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. எனினும் இந்தப் பகுதி இது போன்ற விஷயங்களுக்கு மட்டுமல்லாமல் 80 வயதான ஒரு மருத்துவருக்கும் பெயர் போனது. அவர் பெயர் யோகி ஏரோன். தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார் இவர். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்கிறார். ஒவ்வொரு வருடமும் சராசரியாக 500 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார். 

முசோரி செல்லும் வழியில் நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா வளாகத்தில் பெரும்பாலும் தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கும் வன விலங்குகளால் காயம் ஏற்பட்டவர்களுக்கும் சிகிச்சையளித்து வருகிறார்.

அந்தப் பகுதியில் பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளபோதும் தீவிர தீக்காயத்தால் அவதிப்படுவோருக்கு உடனடியாக டாக்டர் யோகியை தான் பரிந்துரைக்கப்படுகிறார். தற்சமயம் கிட்டத்தட்ட 10,000 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஹிமாலயா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அதிகம் பேர் காத்திருப்பதால் யோகி இரண்டு வார கால மருத்துவ முகாமை நடத்துகிறார். இதில் அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்களும் பங்கேற்பார்கள். 15 முதல் 16 மருத்துவர்கள் அடங்கிய இந்தக் குழு தினமும் கிட்டத்தட்ட 12 அறுவை சிகிச்சைகள் செய்கின்றனர். இந்த முகாம்களை கடந்த 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் யோகி.

உத்திரப்பிரதேசத்தின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தார் யோகி. ஐந்து முறை முயற்சித்த பின் லக்னவிலுள்ள பிரபலமான கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்காண்டு டிகிரியை ஏழாண்டுகளில் நிறைவு செய்த பின்னர் 1971-ம் ஆண்டு பாட்னாவின் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பாடமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி எடுத்துக்கொண்டார். அப்போது திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது. அந்த காலகட்டத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கான தேவை அதிகம் இல்லாததால் அவருக்குப் பணி கிடைப்பது கடினமாக இருந்தது.

எனினும் 1973-ம் ஆண்டு தெஹ்ராதூனில் ஒரு மருத்துவமனையில் ப்ளாஸ்டிக் சர்ஜனாக பணி கிடைத்தது. அவர் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் அந்த சமயத்தில் பிச்சைக்காரரைப் போன்ற வாழ்க்கையே வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். அவரது சகோதரியின் உதவியுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். 1982-ம் ஆண்டு அனுபவமிக்க மருத்துவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தியா திரும்பியதும் அவரது அப்பாவிடமிருந்து ஒரு சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு தெஹராதூனில் ஒரு நிலத்தில் முதலீடு செய்தார். அங்குதான் அறிவியல் பூங்கா கட்டப்பட்டது.

மனைவியுடனும் நான்கு குழந்தைகளுடனும் வாடகை வீட்டில் வசித்தார். அவரது வீட்டின் வெளியே ஒரு சிறு பகுதியை டிஸ்பென்சரியாக மாற்றினார். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவரை அணுகிய பெரும்பாலான நோயாளிகள் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சையளித்தார்.

அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆதரவற்றோருக்காக அர்ப்பணித்தபோதும் யோகிக்குப் பணமோ அல்லது புகழோ கிடைக்கவில்லை. எனினும் அவரது பணியும் அவரிடமிருந்து உதவி பெற்றுக்கொள்வோர் அளிக்கும் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது.

கட்டுரை : Think Change India