பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை விளக்கிய ஒரு நிமிட குறும்படங்கள்!

0

மனித உரிமை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (human rights advocacy and research foundation) ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், மற்றுத்திறனாளிகள் என இவர்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம் 1993-ம் ஆண்டு ஆர்சி பெர்னாண்டஸ் என்பவரால் நிறுவப்பட்டது.

இந்திய சுகந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த 70 ஆண்டுகளில் பெண்கள் தமக்கான உரிமைகளை முழுமையாக பெற்று உள்ளனரா? என்று கேட்டால் அதற்கான பதில் கேள்விக் குறியே...

பெண்கள் உரிமையும் மனித உரிமையே என்பதை மக்களுக்கு தெரியவைப்பதற்கு, Human rights advocacy and research foundation (HRF) அமைப்பு சார்பாக தற்போதைய சமூகத்தில் பெண்களில் நிலைக் குறித்து விவரிக்கும் ஒரு நிமிடக் குறும்படம் போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டது. மேலும் சில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சிறந்த குறும்படம் பரிசு வென்றவர்
சிறந்த குறும்படம் பரிசு வென்றவர்

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆவணப்பட இயக்குனர் ஸ்வப்னா, நாவலரும் திருநங்கை சமூக போராளியான ரேவதி, ஆவணப்பட இயக்குனர் சாரதா போன்றோர் கலந்து கொண்டனர்.

1. இந்த சமூகம் பெண்களை உரிய இடத்தில் வைத்து இருக்கிறதா?

2. பெண்களின் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமைகள்.

3. ஆண் அதிக்கம் தொடர்கிறதா? போன்ற விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.

ஜூரி உறுப்பினர் ஸ்வப்னா
ஜூரி உறுப்பினர் ஸ்வப்னா

ஜூரி உறுப்பினர் ஸ்வப்னா பேசிய போது,

“பெண்களுக்கு எதிராக குற்றங்களும் நடக்கிறது, ஆண் ஆதிக்கமும் நடக்கிறது. அவை அனைத்தும் ஆண்களாலே நடப்பது இல்லை. அந்த பெண்ணின் பெற்றோர்களாலும் அவள் பாதிக்கப்படுகிறாள். தற்போது வரை இந்தியாவில் பெறும்பாலான பெண்களுக்கு தங்களின் உரியவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடம் இல்லை. அதை மீறினால் தண்டிக்கப் படுகிறாள்.”

இப்படி சமூகத்தினர்களுக்குள்ளே (சாதி, குடும்பம்) பெண் என்பவள் மாட்டிக்கொள்கிறாள். அப்படி அதை உடைத்து வெளியேறும் பெண்கள் வேறு ஒரு சமூகத்தினரிடம் மாட்டிக்கொள்ளவதும் மிக வருந்தத்தக்க விஷயம். பெண்களின் நிலைமை இந்த சமூகத்தில் மிக கொடிய வகையில் தான் உள்ளது, என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜூரி உறுப்பினர் ரேவதி பேசிய போது,

“நான் ஒரு திருநங்கை. என்னைப் போல் உள்ளவர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன். இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய இடம் கிடைக்கும் வரை என் போராட்டம் ஓயாது,”

என்று கூறி இந்த சமூகத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் மீதான பார்வை எப்படி இருக்கிறது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். திருநங்கை சமூகத்தைப் பற்றியும் வாழ்வாதாரத்தைப் பற்றியும் தான் எழுதிய கவிதையை வாசித்தார் ரேவதி. 

திருநங்கை ரேவதி
திருநங்கை ரேவதி

“போர்க்களத்தில் குதித்துருக்கோம் நாங்க, புரிஞ்சிகோங்க எங்க உணர்வுகளை நீங்க

பரிதாபப் படவேண்டும் நீங்க, எங்க உரிமைகளை கொடுத்தா போதுங்க

அம்மா ஒத்துகல..., ஐயா அப்பா ஒத்துகல... ஊர் ஒத்துகளல... ஐயா உலகம் ஒத்துகல...

சொத்தும் கிடைக்கல, ஐயா சுகமும் கிடைக்கல, வீடு கிடக்கல, ஐயா வேலையும் கிடைக்கல..

ரவுடியோட மிரட்டலு, போலிஸ் ஒட லாட்டியடி, சட்டத்தால பொய் கேசு, ஜனங்களால கேலி பேச்சு 

பிச்சை கேட்குறோம், செக்ஸ் வொர்க்கும் பண்ணுறோம்... தினம் தினம் கொடுமைகள அனுபவிக்கிறோம்...”

என்று சொல்லி முடிக்கையில் அரங்கமே கைத்தட்டியது. மேலும், போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துகளையும், அறிவுரைகளையும் கூறி விடைப் பெற்றார்.

பிறகு போட்டிகளில் பங்குபெற்ற குறும்படங்கள் திரையிடப்பட்டது. அதில் ’களவு’ எனும் குறும்படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த குறும்படத்தில் இஸ்லாமிய பெண்களின் வாழ்வியலை 1 நிமிடத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர்.

அடுத்து விருந்தினர்களுக்கு பிடித்த இரண்டு குறும்படங்கள் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்பட்டது. அதில், இந்திய சூப்பர் உமன் (India super women) படம் பாலியல் வன்கொடுமையில் ஆளாக்கப்படும் பெண்ணின் மறுவாழ்வை பற்றி மிக அழுத்தமாக கூறப்பட்டிருந்தது. 

’அகம்’ என்னும் 1 நிமிட ஆவணப்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிசிவிசி அமைப்பை சார்ந்த ஸ்வேதா என்பவர் இயக்கிய இந்த ஆவணப்படம் கணவர்களாலும் பெற்றோர்களாலும் துன்புறத்தப்பட்டு தற்கொலை முயற்சி செய்த பெண்களை பற்றியது. மேலும் நிறைய படங்கள் பெண்களுக்கு நடைபெறும் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் பற்றி எடுத்து இருந்தனர்.

மேலும் இந்த திரைப்பட விழா வருடா வருடம் நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் HRF உறுப்பினர் பொற்கோடி கூறினார்.

கட்டுரையாளர்: தீபக் குமார்


Related Stories

Stories by YS TEAM TAMIL