அழகில் மிளிரும் ரம்யா: புறக்கணிப்பை புறம்தள்ளிய தன்னம்பிக்கை தேவதை!

நிற வேற்றுமையால் புறக்கணிக்கப்பட்ட சென்னைப் பெண் ரம்யா அவமானங்களை புறந்தள்ளி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு சுயமுன்னேற்றப் பேச்சாளராக மாறிய கதை.

0

அழகு என்பது தோற்றத்தில் காண்பதல்ல; ஒவ்வொருவர் சிந்தனையிலும், மனதிலும் தோன்றுவதுதான். மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் முகமோ, தோலின் நிறமோ ஒருவரின் அழகு என சொல்லிவிடமுடியது. ஆனால், சமுதாயத்தில் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து தன்னை ஏளனமாக பார்த்தும், ஒதுங்கியும் சென்ற சமூகத்திற்கே தைரியம் ஊட்டும் வகையில் தன்தைத்தானே செதுக்கிக் கொண்டிருக்கிறார் ரம்யா ஜே கிரிஸ்டினா.

படஉதவி : முகநூல்
படஉதவி : முகநூல்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யாவைக் கண்டு அனைவரும் ஒதுங்கிச் சென்றதற்கு முக்கியக் காரணம் அவருடைய உடலின் நிறம் ஒரே சீராக இல்லாமல் இருப்பதே. விடில்கோ என்று மருத்துவ ரீதியில் சொல்லப்படும் இந்த நிற வேற்றுமை ரம்யாவின் பிறப்பில் வந்த பிரச்னை அல்ல இது ஒரு மருத்துவர் செய்த தவறான சிகிச்சை தந்த பரிசு. 

“எனக்கு சிறு வயதில் அசைவ உணவு ஒவ்வாமை இருந்தது, ஒரு முட்டை சாப்பிட்டால் கூட உடலில் கொப்பளங்கள் வந்துவிடும். இதனால் நான் கஷ்டப்படுவதைப் பார்த்து 3 வயதில் என்னுடைய அம்மா பிரபலமான மூத்த மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போதே அந்த மருத்துவருக்கு 94 வயது இருக்கும் அவர் கொடுத்த சிகிச்சையால் கொப்பங்கள் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு தான் வினையே ஆரம்பித்தது, கொப்பளங்கள் அழுந்தி முதலில் கண்ணைச் சுற்றி வெண் திட்டுகள் வரத் தொடங்கியது. மருத்துவரின் ஓவர் டோசேஜ் காரணமாக மெலனின் பாதித்து நிறத்தில் வேற்றுமையை காட்டத் தொடங்கிவிட்டது என்பதே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே மருத்துவரின் மாணவர் ஒருவர் ஆய்வு செய்து கண்டறிந்தார். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை நிற வேற்றுமை என் உடல் முழுவதும் பரவி விட்டது,” என்கிறார் ரம்யா.

”கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைத்து விடவில்லை ஆனால் குறை இந்த சமூகத்திடம் தான் இருக்கிறது. என்னுடைய மழலைப் பருவம், குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம் என எதுவுமே இனிமையானதாக அமையவில்லை. அயனாவரம் பகுதியில் இருந்த பள்ளியிலேயே படித்தேன், பள்ளி, கல்லூரி என என் வாழ்வில் இதுவரை ஒரு தோழியோ, நண்பர்களோ கிடையாது,” என்றார். 

பள்ளியில் என் அருகில் யாரும் உட்காரவே மாட்டார்கள் சக மாணவர்களிடம் அவர்களின் பெற்றோர் என்னைத் தொடக் கூடாது பேசக் கூடாது என்றே சொல்லி அனுப்புவார்கள். அதை அவர்கள் வந்து என்னிடம் கூறும் போது அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. மாணவர்களும் பெற்றோரும் தான் அப்படி என்றால் ஆசிரியர்களும் கூட என் மனதை நோகடித்துள்ளனர். படிப்பு தவிர கலை நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதற்கு எந்த ஊக்கத்தையும் அளிக்கவில்லை. நானாக மாறுவேடப்போட்டி என்று எதிலாவது சேர்ந்தாலும் என்னை ஊக்குவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை. சொல்லப்போனால் என் மனதை பாதித்த ஒரு விஷயம் ஆசிரியர் ஒருவர் என் கையால் தண்ணீர் வாங்கிக் கொடுத்தால் கூட பாவம் என்று திட்டியுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார் ரம்யா.

பள்ளியில் நடக்கும் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு கதறி அழுதாலும் அதை வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று கூட அறியாத சிறுமியாக இருந்த ரம்யாவிற்கு இந்த சமூகம் தந்த பரிசு தனிமை மட்டுமே. 

ரம்யாவின் வாழ்வில் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருபவர் அவரின் தாயார். ஒற்றைத் தாயாக இருந்து ரம்யா உள்ளிட்ட 3 குழந்தைகளை வளர்த்துள்ளார். நான் சிறுவயதாக இருந்த போதே அப்பா எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார், அம்மா தனியாளாக இருந்து தான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு வெகுளி இந்த சமுதாயத்தின் கழுகுப் பார்வையில் இருந்து என்னை தப்பிக்கச் செய்ய அவர் எனக்கு செய்யாத வைத்தியமே இல்லை. அலோபதி, சித்தவைத்தியம் என அவர் செய்தவை அனைத்தும் எனக்கு சித்ரவதையாக தோன்றினாலும் அது அவரின் கடமை மற்றும் நம்பிக்கை என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன் என கூறுகிறார் ரம்யா.

20 வயது இருக்கும் போது அம்மாவிடம் சண்டை போட்டு முதலில் எனக்கு அளிக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டும் என்று அடம் பிடித்தேன். இதற்கு முக்கியக் காரணம் சிறு வயது முதலே பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டதால் எண்ணிலடங்கா மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டிருக்கேன், இதே போன்று உடலில் பூசிக் கொள்ள விதவிதமான களிம்புகள் என்று தினந்தோறும் ஒரு அரிதாரம் தான். இதில் என்னால் மறக்கவே முடியாத விஷயம் நாட்டு மருந்து என்று சொல்லி பார்க்கவே அறுவறுப்பாக இருக்கும் ஒன்றை என் உடல் முழுவதும் பூசுவார் அம்மா. 

”கொடுமை என்னவென்றால் அக்கிள் பகுதியிலும் நிற வேற்றுமை இருந்ததால் அங்கும் பூசி விட்டுவிட்டு கையை தூக்கிக் கொண்டே மணிக்கணக்கில் நிற்கச் சொல்வதோடு, அப்படியே தூங்கவும் சொல்வார், என்னால் அதை பொருத்துக் கொள்ளவே முடியாமல் எல்லோரும் தூங்கிய பின்னர் குளித்துவிட்டு வந்து தான் தூங்குவேன்,”

என தன் வேதனையின் பக்கங்களில் அம்மாவின் விடாமுயற்சியை பற்றி கூறுகிறார் ரம்யா.

படஉதவி : முகநூல்
படஉதவி : முகநூல்

இத்தனை மருத்துவ சிகிச்சைகளாலும் எந்தப் பயனும் இல்லை, நிற வேற்றுமை சரியானபாடும் இல்லை. நான் சாப்பிட்ட மருத்துகள் எனக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. உடல் ரீதியில் மிகவும் பலவீனமடைந்தேன், தென்இந்திய உணவில் ஸ்பைசியான சாப்பாடு சாப்பிட்டால் அதை ஜீரணிக்கும் சக்தி என்னுடைய உடலுக்கு இல்லை. ஆசைப்பட்டு எந்த உணவையாவது சாப்பிட்டுவிட்டால் அந்த உணவு நாவில் இருக்கும் வரையே அமிர்தம் தொண்டைக்குழி வழியாக மலக்குடலை சென்றடைந்து வெளியேறும் வரை நரக வேதனை தான் என்கிறார் ரம்யா.

எனக்காக அம்மா செய்தது எதையும் நான் குற்றம் சொல்லவில்லை, ஏனெனில் இந்த சமூகம் கொடுத்த நெருக்கடி தான் அவர் என் மீது திணித்த சிகிச்சைகள். நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணை வரன் பார்க்க மணமகன் வீட்டார் வருவதால் என்னை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மணிக்கணக்கில் என் தோளில் சாய்ந்து அம்மா கண்ணீர் விட்டார். 

பேருந்தில் பயணிக்கும் போது என்னை அறுவறுப்பாக பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன், என் அருகில் உட்கார்ந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என நினைத்து ஆடைகளை முழுவதும் போர்த்திக் கொள்பவர்களையும் பார்த்திருக்கிறேன். பலர் கொடுக்கும் இலவச ஆலோசனைகளும் உண்டு, அப்போதெல்லாம் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். 

பல நேரங்களில் நான் உயிர் வாழ வேண்டுமா என்றெல்லாம் கூட யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னை உதாசினப்படுத்தும் இந்த சமுதாயத்தை கண்டு ஏன் அஞ்ச வேண்டும் என நினைத்தேன். அனைத்தையும் தூக்கி எறிய முடிவு செய்தேன். என்னை ஏளனமாகப் பார்த்தவர்களை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது, கெஞ்சிப் பார்த்து அமு முடியாமல் போனதால் அம்மாவிடம் சண்டை போட்டு நான் இப்படித் தான் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் இனி எந்த சிகிச்சையும் வேண்டாம் என்று ஆணித் தரமாக முடிவு செய்தேன்.

எனக்கு இருப்பது நிற வேற்றுமை தான் என நான் நம்புகிறேன், எனக்குள்ளாகவே தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டேன். அவமானங்களில் இருந்து கற்றவற்றை அனுபவப் பாடங்களாக்கி எனக்கு நானே ஒரு பாதையை வகுத்துக் கொண்டேன். 

நான் இப்படித் தான் பிறந்தேன், இப்படியே இருக்க ஆசைப்படுகிறேன். நான் தைரியமாக வெளியில் வந்து பேசத் தொடங்கியதற்கு பிறகு என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பலருக்கு உந்தசக்தியாக மாறி இருக்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சிய பெண் ஒருவர் கல்லூரிப் படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

நான் பல மேடைகளில் சுய முன்னேற்ற பேச்சாளராக பேசி வருகிறேன், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய அம்மாவும் உன்னுடைய வாழ்க்கையை ஆண்டவன் கையில் விட்டுவிட்டேன் அவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டுள்ளார். என்னுடைய நிற வேற்றுமையை நான் கொண்டாடுகிறேன், இது ஒரு பிரச்னையே இல்லை. நான் அழகாக இருப்பதாகவே உணர்கிறேன். 

மேக் அப் போட்டு மிகுந்த சிரத்தைகள் செய்து பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டியதில்லை என்பது எனக்கு இருக்கும் பிளஸ் பாயின்ட் என்றே நினைக்கிறேன். 

படஉதவி : முகநூல்
படஉதவி : முகநூல்
என்னை யார் வேண்டுமானாலும் தொடலாம் நிச்சயம் என்னுடைய அழகை உங்களுக்கு கொடுக்க மாட்டேன், இது எனக்கே எனக்கான அழகு அது தான் என் அடையாளமும் கூட என்று நம்பிக்கையோடு புன்முறுவலிடுகிறார் ரம்யா.

இளநிலை விஷூவல் கம்யூனிகேஷன் முடித்துள்ள ரம்யா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இயக்குனராவதே தன்னுடைய எதிர்கால லட்சியம் என்று பயணித்து வரும் ரம்யா, மாடலிங் செய்யவும் விரும்புகிறார். இந்த சமூகம் எவ்வளவு வெறுக்கிறதோ அந்தளவுக்கு அதை நேசிக்கிறேன். அதைவிட என் சுயத்தை நேசிக்கிறேன் என பெறுமிதப்படுகிறார். 

ரம்யா அழகில் மிளிருகிறாள். வாழ்க்கை என்பது உன்னை தேடுவதல்ல, உன்னை நீயே உருவாக்குவது என்ற பெர்னாட்ஷா வரிகளைப் பின்பற்றி வெற்றி நடை போடுகிறார் ரம்யா. 

Related Stories

Stories by Priyadarshini