விலங்குகள் பராமரிப்பிற்காக 3 கால்நடை மருத்துவமனைகள் கட்டியுள்ள மருத்துவர்!

0

பவன்குமார் ஹரியானாவில் உள்ள மருத்துவப் பள்ளியில் இருந்த காலகட்டத்திலேயே ப்ளூக்ராஸ் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். காலம் செல்லச் செல்ல விலங்குகளின் மீதான பச்சாதாப உணர்வு அவருள் அதிகரிக்கத் துவங்கியது. எனவே பவன் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலைப் படிப்பு மேற்கொள்வதற்கு பதிலாக பெங்களூருவில் 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை கால்நடை மருத்துவத்தில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தார்.

தற்போது 41 வயதாகும் பவனுக்கு அவரது பட்டப்படிப்பு குருகிராமில் அரசு பணி கிடைக்க உதவியது. ஆனால் அவருக்கு பணி புரிவதில் விருப்பம் இல்லை. ஆறு மாதங்களில் பணியை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூரு திரும்பினார். நகரில் காயம்பட்ட மற்றும் நோய்வாய்பட்ட விலங்குகளுக்கு பராமரிப்பு அளித்துவரும் கம்பாஷன் அன்லிமிடெட் ப்ளஸ் ஆக்‌ஷன் (CUPA) உடன் இணைந்து தன்னார்வலப் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். 2004-ம் ஆண்டு கால்நடை அறுவை சிகிச்சையில் புதிய நுட்பங்களைக் கற்றறிய சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா ஆகிய பகுதிகளுக்குப் பயணித்தார்.

டாக்டர் பவன்குமார் பெங்களூரு திரும்பியபோது விலங்குகளுக்கான கிளினிக்கை திறக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். கால்நடை மருத்துவ பயிற்சியாக இந்திரா நகரில் 120 சதுர அடி கொண்ட வாடகை அறையில் துவங்கப்பட்ட முயற்சி மூன்று கிளைகளைக் கொண்ட மருத்துவமனையாக உருவானது. இந்த மூன்று கிளைகளில் இரண்டு பெங்களூருவிலும் ஒன்று குருகிராமிலும் உள்ளது. செஸ்னா லைஃப்லைன் மருத்துவமனைகளின் (Cessna Lifeline Hospitals) கால்நடை மருத்துவ சர்ஜன் மற்றும் முதன்மை மருத்துவ அதிகாரியான டாக்டர் பவன் தற்போது மிகவும் பிரபலமான மருத்துவராக உள்ளார்.

பணி அழுத்தமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்தபோதும் தனது பயிற்சியையும் CUPA உடனான தன்னார்வலப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இது எளிதாக இருக்கவில்லை. ஓராண்டு கடந்த நிலையிலும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை.

2007-ம் ஆண்டு தனது கிளினிக்கை இந்திரா நகரில் உள்ள 2,500 சதுர அடி கொண்ட மூன்று படுக்கை அறை வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாற்றினார். மூன்றாண்டுகள் கழித்து அவரது சிறு வயது நண்பரான டாக்டர் ரமேஷ் அவருடன் இணைந்து கொண்டார். அதன் பிறகு கிளினிக் சிறப்பாக செயல்பட்டது. விரைவில் இதைவிட பெரிய வளாகத்தை இருவரும் தேடினர்.

“ஒரே நேரத்தில் 65-70 நோயாளிகள் வந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக எங்களது நோய் கண்டறியும் சேவை சிறப்பாக இல்லை. அத்துடன் எங்களது கிளினிக்கிற்குள் ஆய்வக வசதியும் இல்லை. இவற்றை அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு அதிக இடவசதி தேவைப்பட்டது,” 

என்று ’தி நியூஸ் மினிட்’-க்கு டாக்டர் ரமேஷ் தெரிவித்தார். இவ்விருவரும் இணைந்து பணத்தை திரட்டினர். கடன் வாங்கினர். 2011-ம் ஆண்டு தொம்மலூரு பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார்கள். செஸ்னா லைஃப்லைன் மருத்துவமனை 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் உடனடியாக மருத்துவமனை சிறப்பாக செயல்படவில்லை.

”குழந்தைகள், பெண்கள், பொது சிகிச்சை போன்றவற்றிற்கான மருத்துவ பயிற்சியாளர்களுக்கான தரமான பாடதிட்டங்கள் உள்ளன. ஆனால் கால்நடை மருத்துவமனைகளுக்கான பயிற்சி ஊழியர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்களுக்கென தரமான பாடதிட்டங்கள் அந்த நாட்களில் இல்லை. எனவே நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். வளர்ந்த நாடுகளில் உள்ள பாடதிட்டங்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வுகளுடன் எங்களது அனுபவத்தையும் ஒன்றிணைத்து ஒரு பாடதிட்டத்தை வடிவமைத்தோம்,” என டாக்டர் பவன் பகிர்ந்துகொண்டார்.

செஸ்னா பல காலகட்டங்களைக் கடந்து புதிய கிளைகளுடனும் குறைந்தபட்சமாக தினமும் 10 மணி நேரம் பணியாற்றக்கூடிய 13 மருத்துவர்களுடனும் செயல்படுகிறது. எனினும் இந்தியாவில் கால்நடை மருத்துவ பராமரிப்பு அதிகம் கவனம் செலுத்தப்படவேண்டிய பகுதியாகவே இருப்பதாக டாக்டர் பவன் கருதுகிறார். 

”இங்கு அத்தனை விதிமுறைகளும் தரநிலைகளும் இல்லை. உதாரணத்திற்கு கால்நடை மருத்துவ தேவைகளுக்கான ரத்த வங்கிகள் அமைப்பதற்கான நெறிமுறை இல்லை. இது அடிப்படை அல்லவா?” என கேள்வி எழுப்புகிறார் பவன்.

விலங்குகளிடையே கிளினிக்கில் இருக்கையில் இவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். 

”மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு அளிக்கும் அறுவை சிகிச்சை நிபுணராக கௌரவமான பதவி கிடைத்தாலும் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். நீங்கள் ஒரு விலங்கிற்கு ஏற்படும் வலியில் இருந்து அதை மீட்டெடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. விலங்குகள் பேசுவதில்லை. ஆனால் அவற்றின் கண்களில் தென்படும் அன்பும் அவை நன்றியுடன் வாலாட்டுவதையும் பார்க்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் இருக்கும்,” என்றார் டாக்டர் பவன்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL