மும்பைவாசிகளை காலையில் தட்டி எழுப்பும் 'ஜூசிஃபிக்ஸ்'

0

நம்மில் பலர் வெள்ளிக்கிழமை இரவு ஒரு அற்புதமான தொழில் யோசனையைக் கண்டு பிடிப்போம். ஆனால் அடுத்து வரும் திங்கட்கிழமையில் அதை மறந்து விட்டு, மீண்டும் நமது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். ஆனால் தெஜோமே ரஸ்தோகியின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. 35 வயது ஆரோக்கிய விரும்பியான இவர், அம்மா பாணியில் ஜூஸ் தயாரித்து மும்பை ஆரோக்கிய விரும்பிகளுக்கு அதை விற்பனை செய்ய விரும்பினார். 2014 ஏப்ரலில் ஒரு வெள்ளிக் கிழமைதான் அவருக்கு இந்த யோசனை வந்தது. திங்கட்கிழமை திட்டத்தை தயாரித்தார். ‘ஜூசிபிக்ஸ்’ (Juicifix) பிறந்தது.

தெஜோமேயின் இந்த துணிச்சலான முடிவால், பரபரப்பான பெருநகரவாசிகள் பலர் வண்ணமயமான, தரமான, குளிர்ந்த, ருசிகரமான குளிர்பான பாட்டிலில்தான் கண் விழிக்கின்றனர். அந்த பாட்டில்கள் அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து விடுகின்றன.

“இதில் உள்ள சத்துப் பொருட்கள் குறித்து எல்லோருக்குமே தெரியும். நெல்லிக்காய், சருமம் மற்றும் கேசத்திற்கு நல்லது என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லி ஊறிய தண்ணீர் வாயுத் தொந்தரவுக்கு நல்லது. இத்தகைய பொருளை வீட்டில் தயாரித்து யாராவது தரமாட்டார்களா என்று பலர் ஏங்குகின்றனர். அவர்களது ஏக்கத்தைப் போக்கும் நபராக நான் மாறினேன். அம்மாவின் ரகசியமான கண்டுபிடிப்புகளும் அன்பைக் காட்டும் வழியும் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகளில் செயல்பட்டதுதான் அத்தனையும்” என்கிறார் தெஜோமே.

தெஜோமேயின் 'ஜூசிஃபிக்ஸ்' மும்பை வாசிகளுக்கு சந்தா அடிப்படையில் கிடைக்கிறது. இவர்கள் பெருவாரியாக உற்பத்தி செய்து இருப்பு வைத்துக் கொண்டு விற்பனை செய்வதில்லை. ஆர்டர் செய்பவர்களுக்கு சந்தாதாரர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த ஜூஸ் அதன் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் குறையாமல் வைத்திருக்கிறது. காலையில் மிக நீண்ட ஜாகிங் சென்று பின் ஓய்வாக அமர்ந்து எதையாவது சாப்பிட வேண்டும் என்ற தேடலில் இருப்பவர்களுக்கு பொருத்தமானது. சந்தர்ப்பவசமாக தெஜோமே இப்படித்தான் அதை ஆரம்பித்தார்.

முதன் முதலில் பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் சாலையில் தனது காரில் வைத்து ப்ரஷ் ஜூஸ் விற்பனையைத் தொடங்கினார் தெஜோமே. வேலை பார்த்துக் களைத்துப் போயிருக்கும் மும்பைவாசிகளுக்கு இது போன்ற ஹெல்த்தி பொருள் விற்பனை வேன்களை ஆங்காங்கே காண முடியும்.

ஒரு வருட காலம் தெஜோமே இதைத்தான் விடாப்பிடியாக செய்து கொண்டிருந்தார். ஏனெனில் அவரின் இந்த முடிவு அவருடைய இயல்போடு ஒட்டியது. “நான் எப்போதுமே சவாலை விரும்புவேன். எனக்காக வாழக்கூடியவள் நான். எனது இலக்கு எதுவாக இருந்தது? பரபரப்பான வாழ்க்கையில் உள்ளவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெற உதவுவதுதான். அது ஒரு நல்ல நோக்கம். எனது யோசனைக்குப் பின்னால் ஆரோக்கியத்திற்கான உதவி இருந்ததாக நினைத்தேன். இதுவே தொடங்குவதற்கு சரியான நேரம் என உணர்ந்தேன். அதற்கான வாய்ப்பு பற்றிக் கவலைப்படவில்லை” என்கிறார் தெஜோமே.

வர்த்தகம் உடனடியாக களை கட்டத் தொடங்கியது. திருமணம், பார்ட்டி மற்றும் டயட் பிளான் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. மும்பை முழுக்கச் சுற்றி வரும் ஜூஸ் வாகனமாக ஜூசிஃபிக்சை ஆக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். ஆனால் விஞ்ஞானமும் சாத்தியமும் அவரது விருப்பத்தோடு பொருந்திப் போகவில்லை. ஜூசின் சிறப்பே அதன் ப்ரஷ்னஸ்சில்தான் இருக்கிறது. கிழக்கில் இருந்து மேற்கே பரபரப்பான புறநகர்ப் பகுதிக்கு அதை கொண்டு செல்லும் நேரத்தில் அந்த ப்ரஷ்னஸ் போய்விடும். இந்தப் பிரச்சனை ஒருபுறமிருக்க மறுபுறம் தேவையும் அதிகரிக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் தீர்வு காணும் விதத்தில் தனது விநியோக நடைமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தார் தெஜோமே.

இதற்கு அழுந்தச் சாறு பிழிந்து ஜூஸ் தயாரிக்கும் முறைதான் உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். இது வழக்கத்திற்கு மாறானது. இந்த முறையில் பிழியப்படும் சாற்றில் 90லிருந்து 95 சதவீதம் வரையில் ஊட்டச்சத்து இருக்கும். பழங்களும் காய்கறிகளும் முதலில் நன்கு அரைக்கப்பட்டு, அந்தக் கூழில் இருந்து துளித்துளியாக ஜூஸ் பிழிந்தெடுக்கப்படும். இந்த ஜூஸில் என்சைம்ஸ் அல்லது புரோட்டின்கள் உயிரிப்புடன் இருக்கும். இது ஜூஸை மூன்று நாட்கள் வரையில் ப்ரஷ் ஆக வைத்திருக்க உதவுகிறது.

தெஜோமேயின் நோக்கத்தையும் ஆர்வத்தையும் பூர்த்தி செய்ய பக்கபலமாக இருந்தார் அவரது நண்பர் அப்ரியோ ரெபெல்லோ. தங்களது வேலைகளுக்கான உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார்கள். சந்தா அடிப்படையில் ஜூஸ் விற்பனை மாடலை 2014 நவம்பரில் இருந்து தொடங்கினார்கள். இந்தப் புத்தம் புதிய முறையால் கவரப்பட்டவர்கள் முதலில் ஆர்டர் செய்தனர். அதன்பிறகு அவர்கள் தொடர்ந்து ஜூசிஃபிக்ஸ்சின் நம்பகமான வாடிக்கையாளர்களாயினர். சோனம் கபூரின் அம்மா சுனிதா கபூர் தெஜோமே தயாரிப்புகளில் ஒன்றான ‘கிரீன் ஜூசி’ன் விசிறி.

“ஜூசிஃபிக்ஸ்-ன் கோ கிரீன் ஒரு கச்சிதமான காலை ஜூஸ். அனைத்து கீரை வகைகளையும் சரியான முறையில் சேர்த்து தரப்படும் கோ கிரீன், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் ஆன்ட்டிஆக்சிடென்ட் (anti-oxidants)ஐ உங்களுக்கு தினமும் மருந்து போலத் தருகிறது. ஒரு வருடமாக நான் கோ கிரீன் அருந்துகிறேன். அது எனது காதலுக்குரிய பானம்” என்கிறார் சுனிதா.

ஐந்து, பதினைந்து, முப்பது மற்றும் 90 நாட்கள் என வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த சந்தா திட்டத்தை தேர்வு செய்யலாம். கைப்பக்குவத்துடன் செய்யப்பட்ட அந்தக் குளிர்ச்சியான ஜூஸ் காலை 6 மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. நீங்கள் தேர்வு செய்துள்ள சந்தா திட்டத்தைப் பொருத்து 275 மில்லி பாட்டிலின் விலை 110ல் இருந்து 150 வரை.

ஜூசிஃபிக்ஸ்சின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்று ‘கிளின்ஸ்’ (Cleanse) பேக்கேஜ். பலர் ஐந்தில் இருந்து ஏழு நாள் வரையிலான திட்டத்தைத் தேர்வு செய்கின்றனர். இந்த வகை ஜூஸ்கள் உணவுக்கு மாற்றாகவோ அல்லது கூடுதல் உணவாகவோ செயல்படுகிறது. உடலில் உள்ள நச்சுத் தன்மையை சுத்தப்படுத்துவதைக் குறிக்கும் விதத்தில் இதற்கு கிளின்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூசிஃபிக்ஸ்சுக்கு ஆரம்பத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஏழுதான். கடந்த ஒரு வருடத்தில் அது 350 ஆக உயர்ந்துள்ளது. வருமானம் மாதம் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை.

தெஜோமேயின் பாதையில் ஒரு சில குறுக்கு வழிகள் இருந்தன. ஆனால் அவர் ஒரு போதும் அவற்றைத் தேர்வு செய்யவில்லை. அவரது தயாரிப்புக்கென வைத்திருக்கும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் அவர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுகிறார். முடிந்த வரையில் எவ்வளவு ஜூஸ் தயாரிக்க முடியுமோ தானே தயாரிக்கிறார். இது குறைந்த உற்பத்திச் செலவில் அதிக உற்பத்தி என்ற நிலையை அடைவதற்கான காத்திருப்பாக இருக்கலாம். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களைத்தான் பயன்படுத்துகிறார். தனது வாடிக்கையாளர்களை மறு சுழற்சி செய்வதில் ஊக்கப்படுத்துகிறார். அழுந்தச் சாறு பிழியும் முறையில் அவர் உறுதியாக இருந்தார். இது மேற்கத்திய வழிமுறைகள் மீது வீசிய புயலாக இருந்தது. அவரது தயாரிப்பு மூன்று நாட்களைத் தாண்டினாலும் தாங்கக் கூடியது என்ற கருத்து நிலவியது. மேலும் தனது தயாரிப்புக்கும் உடல் எடைக்குறைப்புக்கும் தொடர்பில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார் தெஜோமே. வாடிக்கையாளர்களை அவர் தவறாக வழிநடத்தவில்லை.

இந்த ஜூஸ்க்கான சந்தையின் மதிப்பு 2010ல் 9 ஆயிரம் கோடி. இதுவே 2015ல் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 20 சதவீதம் அதிகரித்து 22 ஆயிரத்து 500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னோபார்க்கின் சில்லறை விற்பனை ஆலோசனை அமைப்பின் கணக்கீடு இது. ஜூசிஃபிக்ஸ்சின் போட்டியாளர்களான ரா பிரஸ்ஸரி, ஜூஸ் டிவைன் மற்றும் ஜூஸ் ப்ரஸ்ஸுடு போன்ற நிறுவனங்கள் நேச்சர்ஸ் பாஸ்கெட் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் நீண்ட விநியோகச் சங்கிலித் தொடரைக் கொண்டிருக்கின்றன. ஆனால் தெஜோமே தனக்கென்று நடுத்தரமான ஒரு விநியோகத் தொடர்பை வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் தனது தனித்தன்மையை நிலைநாட்டுகிறார். மேலும் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பின் மூலம் தனது தயாரிப்பை தொடர்ந்து மேம்படுத்துவதை உறுதி செய்கிறார்.

“எங்களின் இலக்கு எண்ணிக்கையில் இல்லை. நம்பகத்தன்மையைப் பெறுவதில் இருக்கிறது. சுவை சரியில்லை என்று சொல்லி எங்கள் சந்தாவை ரத்து செய்வது மிகவும் அரிது. எங்கள் தயாரிப்புகளான பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் அல்லது கிரீன் ஜூசைப் பற்றி வாடிக்கையாளர்கள் அது தங்களின் கனவு என்று சொல்கின்றனர். இதுதான் எங்களின் மைல்கல்” என்கிறார் தெஜோமே பெருமை பொங்க.

பூனா, பெங்களூரு, சென்னை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர பிராந்தியங்களுக்கு தனது தயாரிப்பை கொண்டு செல்வதற்கு முன் மும்பையில் அழுந்தக் காலூன்றி விட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

“இப்போதைக்கு வீட்டு விநியோகம், கார்ப்பரேட் மற்றும் உணவகங்களுக்கு சந்தா திட்டத்தில் விநியோகம் என்பதோடு நிற்கிறோம். அடுத்து சில்லறை விற்பனையில் இறங்குவோம்” என்கிறார் தெஜோமே

ஆக்கம் : பிஞ்சால் ஷா | தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா