இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தன் மகளுக்கு எழுதிய கடிதம்!

0

குழந்தை வளர்ப்பைப் பொருத்தவரை குழந்தைகளின் மனதில் நல்ல பண்புகளை விதைப்பதில் அம்மாவின் பங்கு அதிகமாக இருப்பதால் அப்பாவின் அன்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. எப்படி அவரது மனைவி குழந்தைவளர்ப்பில் பங்கெடுத்தார் என்றும் முறையான குழந்தை வளர்ப்பு இந்த உலகத்தையே மாற்றும் என்றும் நாரயணமூர்த்தி இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சுதா மேனனின் லெகசியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கடிதம் : பிரசித்திபெற்ற பெற்றோர் தங்கள் மகள்களுக்கு எழுதிய கடிதங்கள், இது ஒவ்வொரு அப்பாவிற்கும் மகளுக்குமான தகவலாகும். அவரது மகளின் வருகை எப்படி அவரது வாழ்க்கையை மாற்றியது என்று விவரிக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.

அன்புள்ள அக்‌ஷதா!

நான் அப்பாவாக ஆனதும் என்னுள் நம்ப முடியாத அளவிலான பல மாற்றங்கள் உருவாகியது. நான் முன்பிருந்தது போல் என்னால் திரும்ப மாறவே முடியாத அளவில் என்னுள் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. உன்னுடைய வருகை அளவுகடந்த மகிழ்ச்சியையும் அதிக பொறுப்பையும் கொண்டுவந்தது. இப்போது நான் வெறும் கணவனோ, மகனோ அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் நிறுவனத்தின் ஊழியரோ மாத்திரம் அல்ல, என்னுடனே இருக்குப்போகும் என் மகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஒரு தந்தை.

நீ பிறந்ததும்தான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியின் அளவுகோலும் மாறியது. பணியிடத்தில் மிகவும் யோசித்தும் அளந்தும் மக்களுடன் உரையாடத்தொடங்கினேன். வெளி உலகுடனான உரையாடல்கள் அதிக பரிவுடனும், கண்ணியத்துடனும் முதிர்ச்சியுடனும் மாறியது. மனிதர்களை உணர்ச்சிப்பூர்வமாகவும் மரியாதையுடனும் அணுகும் அவசியத்தை உணர்ந்தேன். ஒரு நாள் நீ வளர்ந்து பெரியவளாவாய். உன்னைச் சுற்றியுள்ள உலகத்தை புரிந்துகொள்வாய். என்னை அறியாமல் ஒரு சின்ன தவறுகூட நான் இழைத்துவிட்டதாக நீ நினைக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினேன்.

நீ பிறந்த புதிதில் நடந்த விஷயங்களை நான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பதுண்டு. உன் அம்மாவும் நானும் எங்களது வாழ்க்கைப்பாதையில் காலூன்ற போராடிக்கொண்டிருந்த சமயம் அது. நீ ஹூப்ளியில் பிறந்து இரண்டு மாதங்கள் இருக்கும். உன்னை மும்பைக்கு அழைத்துவந்தோம். ஆனால் குழந்தையையும் பார்த்துக்கொண்டு வேலையிலும் கவனம் செலுத்த முடியாது என்பதை வெகு சீக்கிரமே தெரிந்துகொண்டோம். உன்னை தாத்தா பாட்டியின் கண்காணிப்பில் சில நாட்கள் ஹூப்ளியில் வளர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். இது உடனே எடுத்த முடிவல்ல. நிறைய நேரம் செலவழித்து நிறைய யோசித்து இந்த கஷ்டமான முடிவெடுத்தோம். ஒவ்வொரு வார இறுதியிலும் பெல்காம் வரை ப்ளைட்டில் பயணித்து அங்கிருந்து ஹூப்ளிக்கு காரில் பயணம் செய்வேன். நிறைய செலவாகும். இருந்தாலும் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

ஹூப்ளி. அதில் உன்னைச் சுற்றி ஒரு அழகான உலகம். தாத்தா, பாட்டி, அத்தை, உறவினர் என்று உன்னை சூழ்ந்திருந்தனர். ஆனாலும் நாங்களில்லாத ஒரு உலகத்தை எப்படி உன்னால் உருவாக்க முடிந்தது என்று வியந்தேன்.

என் குழந்தைகளுக்கு நான் எந்த மாதிரியான பண்புகளை கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வியை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடன் உன் அம்மாதான் அந்த பொறுப்புகளை சுமந்தார் என்றும் இப்படிப்பட்ட சிறந்த குழந்தைகளாக வளர்த்ததற்காக நான் எப்போதும் உன் அம்மாவிற்கு நன்றிபாராட்டுவேன் என்றும் அவர்களிடம் கூறினேன். பல நற்பண்புகளை அவர் வார்த்தையால் விவரிக்காமல் செய்கையால் செய்துகாட்டுவார். எளிமை மற்றும் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை ரோஹனுக்கும் உனக்கும் கற்றுக்கொடுத்தார். பெங்களூருவில் ஒரு முறை உன் பள்ளி நாடகத்திற்காக உன்னை தேர்வு செய்திருந்தனர். அதற்காக நீ ஸ்பெஷல் டிரஸ் அணியவேண்டியிருந்தது. எண்பதுகளில் இன்ஃபோஸிஸ் அதன் ஆபரேஷன்ஸை தொடங்கிய நேரம் அது. இதுபோன்ற செலவுகளை எதிர்கொள்ள முடியாத சந்தர்ப்பம். எங்களால் செலவு செய்யமுடியாத நிலையையும் நீ நாடகத்தில் பங்கேற்கமுடியாத நிலையையும் உன் அம்மா உனக்கு விவரித்தார். அன்றைய சம்பவத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்று நீ பல நாட்களுக்கு பின் என்னிடம் தெரிவித்தாய். பள்ளியின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஒரு குழந்தை தாங்கிக்கொள்வது கடினமான விஷயம்தான் என்பதை நாங்களும் உணர்ந்தோம். இருப்பினும் வாழ்க்கையின் ஒரு முக்கிய விஷயமான சிக்கனத்தின் அவசியத்தை நீ கற்றிருப்பாய்.

அதன் பிறகு வாழ்க்கை மாறியது. போதுமான பணம் சம்பாதித்தோம். ஆனாலும் நாம் எளிய வாழ்க்கைமுறையைதான் பின்பற்றினோம். ஓரளவு வசதி வந்ததும் உங்களை காரில் பள்ளிக்கு அனுப்பலாமா என்று உன் அம்மாவிடம் கேட்டேன். ஆனால் உன் அம்மா சம்மதிக்கவில்லை. வழக்கமான ஆட்டோவில் உங்கள் நண்பர்களுடந்தான் நீயும் ரோஹனும் செல்லவேண்டும் என்றார். நீங்கள் ஆட்டோ அங்கிளுடன் நணபர்களாக இருந்தீர்கள். ஆட்டோவில் உடன்வரும் மற்ற குழந்தைகளுடன் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தீர்கள். பல எளிய விஷயங்கள்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியளிக்கும்.மேலும் அந்த மகிழ்ச்சிக்கு விலையில்லை.

உன் நண்பர்கள் டிவியில் பார்த்த நிகழ்ச்சிகள் குறித்து பேசுவார்கள். நம் வீட்டில் ஏன் டிவி இல்லை என்று நீ கேட்பாய். நம் வீட்டில் டிவி வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தது உன் அம்மாதான். ஏனென்றால் வீட்டில் டிவி இல்லையென்றால்தான் பாடங்கள் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, விவாதிப்பது, நண்பர்களை சந்திப்பது போன்ற மற்ற விஷயங்களுக்கு நேரம் செலவிட முடியும் என்பார். வீட்டில் படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் இரவு 8 முதல் 10 மணி வரை குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிவெடுத்தோம்.

ஒரு பெண்ணிற்கு திருமணம் நடக்கும்போது அவளது அப்பாவிற்கு அதுகுறித்த பல குழப்பமான எண்ணங்கள் தோன்றும். அதுவரை அவரது மகள் அவருடன் மட்டும்தான் இருப்பாள். அவருடன்தான் நேரம் செலவிடுவாள். அன்பை பகிர்ந்துகொள்வாள். ஆனால் திருமணத்திற்குப்பின் அந்த மொத்த அன்பையும் ஒரு இளமையான, அழகான தன்னம்பிக்கை மிகுந்த ஒருவருடன் பகிர்ந்துகொள்ளப்போகிறாள். இந்த உண்மையை நினைக்கும்போதே எல்லா அப்பாவிற்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். உன்னுடைய வாழ்க்கைத்துணையை கண்டுபிடித்துவிட்டாய் என்று நீ சொன்னதும் எனக்கும் சற்று கவலையாகவும் பொறாமையாகவும் இருந்தது. 

ஆனால் அழகும் அறிவும் முக்கியமாக நேர்மையும் நிறைந்த ரிஷியைப் பார்த்ததும் நீ சொன்னதை உணர்ந்தேன். நீ ஏன் உன் இதயத்தை பறிகொடுத்தாய் என்று தெரிந்தது. நானும் உன்னுடன் சேர்ந்து என் அன்பை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். சில மாதங்களுக்கு முன் நீ எனக்கு தாத்தா என்ற பட்டத்தை பெற்றுத்தந்தாய். முதன் முதலில் உன்னை என் கைகளில் சுமந்தபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். உன்னுடைய அன்பு மகள், கிருஷ்ணாவை முதன் முதலில் சாண்டா மோனிகாவில் சந்தித்தபோது முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஒரு புத்திசாலி தாத்தாவாக நடந்துகொள்ள வேண்டுமோ என்று வியந்தேன். வயதாவதற்கும் தாத்தாவாக இருப்பதற்கும் கிடைக்கும் அதிக மகிழ்ச்சியை உணர்ந்தேன். குழந்தையை கொஞ்சும்போது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு தெரியுமல்லவா தாத்தா-பாட்டிக்கும் பேரன்-பேத்திக்கும் இருக்கும் பொதுவான எதிரி குழந்தையின் பெற்றோர்தான் என்று. நானும் கிருஷ்ணாவும் அதுபோல் தான் உன்னைப்பற்றி பல விஷயங்களை விமர்சிப்போம்

உன்னுடைய லட்சியத்தை அடைந்து ஒரு திருப்தியான வாழ்க்கையை வாழ உனக்கு ஒரே ஒரு கிரகம்தான் உள்ளது. அதுவும் அழிவுநிலையில் உள்ளது. இந்த கிரகத்தை எங்களிடம் பெற்றதைவிட சிறந்த முறையில் நீ கிருஷ்ணாவிற்கு அளிக்கவேண்டியது உன்னுடைய கடமை.

கவனமாக பார்த்துக்கொள்!

உன் அன்பு, அப்பா!

தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

சந்தா கோச்சார் தன் மகளுக்கு எழுதிய கடிதம் மூலம் ஒவ்வொரு தாய்மாரும் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்!