பழைய நிகழ்வுகளின் நினைவுகளை   மீண்டும் அனுபவிக்க உதவும் VR தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் ’Teleport360’

0

”உங்க கல்யாண ஆல்பத்தில் நான் ஏன் இல்லப்பா...? அம்மாவும் நீங்களும் மட்டும் இருக்கீங்க... நான் எங்க???” 

இப்படிக் கேட்கும் பிள்ளைகளின் கேள்வியை நாம் எல்லாரும் சிரித்துவிட்டு கடந்திருப்போம். ஆனால் அதில் வேடிக்கை ஒன்றும் இல்லை, 

“உங்கள் பெற்றோரின் திருமண நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு, கல்யாண போட்டோ, வீடியோ ஆல்பம் மூலம் அதில் பங்கேற்க வேண்டுமா??” 

என்று ஒரு புதிய அனுபவதிற்கு உங்களுக்கு அழப்புவிடுகின்றனர் மூன்று சென்னை நண்பர்கள்.  

Teleport360 நிறுவனர்கள்
Teleport360 நிறுவனர்கள்

மக்கள் சாதரண வீடியோ, போட்டோக்களை பார்த்து போர் அடித்துப் போன சமயம். ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று நினைக்க, 360 டிகிரி வீடியோக்கள் பிரபலாமாகி வருவதை கண்டனர் தரணி, மனோ மற்றும் நந்தகுமார். யூட்யூப், ஃபேஸ்புக் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருப்பதால், விஆர் (Virtual Reality) தொழில்நுட்பத்தை எல்லாவித மக்களுக்கும் கொண்டுசெல்ல முடிவெடுத்தனர் இவர்கள். 

”நம் வீட்டு விசேஷங்கள், பிறந்தநாள், திருமணம் இவற்றை போட்டோ, வீடியோவில் பதிவு செய்வதே பல காலங்களாக வழக்கமாக இருந்தது. அதை டிவி, லாப்டாப் அல்லது போனில் அவ்வப்போது பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இதையே நாம் உணரும் வகையில் சுய அனுபவத்தை ஒருவருக்கு கொடுத்து நினைவுகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல யோசித்தோம்,” 

என்கிறார் நந்த குமார், டெலிபோர்ட் 360 என்ற VR ஸ்டார்ட்-அப்பின் இணை நிறுவனர். 

டெலொபோர்ட்360 (Teleport360) தொடக்கமும் பயணமும்

Teleport’ என்ற சொல் மாபெரும் நினைவுகளை, தொழில்நுட்பத்தைக் கொண்டு உணர்த்தும் வகையில் பழைய நினைவுகளை மீண்டும் பெற உதவக்கூடியது என்று விளக்கினார் நந்தகுமார். இவரது இரண்டாவது ஸ்டார்ட்-அப் Teleport360, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்டது. ஐடியா திட்டமிடலுக்கு 5 மாதம் எடுத்துக்கொண்ட பின்னர் இந்நிறுவனத்தை நண்பர்களுடன் நிறுவியுள்ளார்.  

விஆர் அதாவது வெர்ச்சுவல் ரியாலிட்டியை மக்களுக்கு எளிமையாக கொண்டு செல்வதே Teleport360 நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு. இவர்கள் தங்கள் சேவையை இரு பிரிவாக கொண்டுள்ளனர்:

1. சேவை (நடைமுறையில் உள்ளது): திருமணம், பிறந்தநாள் பார்ட்டி, பேஷன் ஷோ என விசேஷங்கள் மற்றும் விழாக்களின் வீடியோக்களை, தங்களின் அன்புக்குரியவர்களை சுய அனுபவத்துடன் பார்க்க உதவும் சேவையை அளிப்பது. 

2. ப்ராடக்ட் (ஆராய்ச்சியில் உள்ளது): கல்வி மற்றும் சுற்றுலா தொடர்பு விஆர் வீடியோக்களை தயாரித்தல். வரலாற்று சிறப்பு இடங்களின் வீடியோக்களை படமெடுத்து, மாணவர்களுக்கு அனுபவத்தை அளிக்கும் வகையில் பள்ளிகளில் அறிமுகப்படுத்துதல். மாணவர்கள் VR தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை பார்க்கும்போது அங்கே நேரடியாக செல்லும் அனுபவத்தை தருவதோடு நல்ல புரிதலையும் அளிக்கும். அவர்களின் ஆர்வத்தையும், ஆற்றலையும் இது பெருக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். 

பழைய நிகழ்வுகளை சிறப்பாக ஆக்குவது எப்படி? 

Teleport360 முன்னாடி நடந்த நிகழ்வுகளை மீண்டும் தற்போது நடப்பது போல திரும்பக் கொண்டுவர முயற்சிக்கின்றது. 360 டிகிரி கேமராக்களான கோடாக் SP360 மற்றும் GoPro Omni கொண்டு நிகழ்வுகளை 360 வடிவில் படம் எடுத்துவிட்டு, சிறப்பு மென்பொருள்கள் கொண்டு அதை எடிட் செய்து அற்புதமான வீடியோ வடிவாக அளிப்பதே இவர்களது சிறப்பு. ஒரு சீனை எடுக்க ஆறு கேமராக்கள் வைத்து ஷூட் செய்து அதை பின்னர் எடிட் செய்கின்றனர். 

“உங்கள் திருமணத்தை வெர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துடன் இனி நீங்கள் காணமுடியும்” என்கிறார் நந்தா. 

Teleport360 குழு மற்றும் அனுபவம்

ஜிடி.தரணீதரன் மற்றும் பி.மனோபாரதி இருவரும் நந்தகுமாருடன் இணைந்து தொடங்கிய நிறுவனம் Teleport360. தரணி, நேச்சுரல்ஸ் சலூனில் மார்க்கெடிங் தலைவராக பணிபுரிந்த அனுபவமிக்கவர். ஐடி மற்றும் மார்க்கெடிங் துறையில் சுமார் 11 வருட அனுபவம் கொண்டவர் என்பதால் டிஜிட்டல் மார்க்கெடிங் மற்றும் ஏடிஎல், பிடிஎல் சேவைகளை இங்கே மேற்கொள்கிறார். 

மனோ, ஒரு எழுத்தாளர். இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் தனது மூன்றாவது புத்தகத்தை அண்மையில் வெளியிட்டுள்ளார். இவர் கிரியேடிவ் ஹெட்டாக டெலிபோர்டில் இருக்கிறார். வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். 

நந்தகுமார், யூகேவில் பிஐ கன்சல்டண்டாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். பின்னர். சீனியர் சாப்ட்வேர் டெவலப்பராக இருந்துள்ளார். பெங்களூரில் காபி ஷாப் ஒன்றை நடத்திய அனுபவமும் கொண்டவர் இவர். மூன்று நிறுவனர்களை தவிர, டெலிபோர்டில் ஒரு வடிவமைப்பாளர், எடிட்டர் மற்றும் ஒரு இண்டெர்ன் உள்ளனர். 

சுயமுதலீடான 5 லட்சத்தில் தொடங்கப்பட்ட டெலிபோர்ட் கடந்த சில மாதங்களாக பல வீடியோக்களை 360 வடிவில் எடுத்து, விஆர் துறையில் மெல்ல வளர்ச்சி கண்டு வருகின்றனர். தங்களது முதல் வாடிக்கையாளர் பற்றி கூறுகையில்,

“விகடன் எங்களது முதல் க்ளையண்ட். அவர்களின் 90 ஆண்டுகால விருது வழங்கும் விழாவை ஷூட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களை VR தொழில்நுட்பத்தில் ஷூட் செய்தது மறக்கமுடியாத அனுபவம்,” என்கிறார் தரணி. 

இருப்பினும் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு வீடியோவும் மறக்கமுடியாத ஒன்று என்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் முகத்தில் தங்களின் வீடியோவை பார்க்கும்போது ஏற்படும் பூரிப்பு ஊக்கத்தை அளிப்பதாக கூறினார். 

முதலீடு மற்றும் வருங்கால திட்டங்கள் 

சுய முதலீட்டில் இயங்கும் இவர்கள், சந்தையில் தங்களுக்கான தனி இடத்தை பிடிக்க முனைப்புடன் செயல்படுகின்றனர். குறிப்பாக கல்வி மற்றும் சுற்றுலாத்துறையில் கால்பதிக்க தீவிரமாக உழைத்துவருகின்றனர்.

“2017-ல் நூறு விழாக்களில் (திருமணம், கார்ப்பரேட் நிகழ்ச்சி, பேஷன் ஷோ) பணியாற்ற இலக்கு வைத்திருக்கிறோம்,” என்கின்றனர். 

இந்த தொழில்நுட்பத்திற்கு நல்ல வருங்காலம் இருப்பதால் வளர்ச்சி நன்கு இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வீடியோ எடுக்கும் நேரம், விழாவின் தன்மை, பயன்படுத்தும் கேமராக்களை பொருத்து கட்டணங்களை நிர்ணயிக்கின்றனர். ரூ.35000-த்தில் தொடங்கி ரூ.1,35000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக நிறுவனர் தரணி கூறினார். 

தொடக்கத்தில் சிலர் இதற்கு தயங்கினாலும் பின்னர் விஆர் தரும் அனுபவத்தை கண்டு இது போன்ற வீடியோக்களுக்கு ஆர்வம் காட்டுவதாக சொல்கின்றனர். VR headset அணிந்து மட்டுமே இந்த வீடியோக்களை பார்க்கமுடியும் என்பதால் அதை வாங்கி தங்களின் திருமணம், மற்றும் வீட்டு விசேஷங்களை காண தயாராக பலரும் இருக்கின்றனர் என்கிறார்.  

தற்போதைக்கு சென்னையில் மட்டும் இயங்கும் டெலிபோர்ட் 360, தேவையான முதலீடு கிடைத்தால் தங்களின் செயல்பாடுகளை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய தயாராக உள்ளனர்.