நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை விபத்தில் இருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்!

1

பீஹாரின் மங்கள்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பீம் யாதவ். இவர் அங்குள்ள பழத்தோட்டத்தை நோக்கிச் செல்லும்போது உடைந்த ரயில் தண்டவாளத்தைக் கண்டார்.

தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்துவதற்காக வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பீம் துரிதமாக செயல்பட்டார். தனது சிகப்பு டி-ஷர்டை அகற்றினார். எதிரே வந்துகொண்டிருந்த ரயிலை நோக்கி ஓடி என்ஜின் டிரைவருக்கு எச்சரிக்கை விடுத்து ரயிலை நிறுத்தச் சொன்னார்.

இந்தச் சிறுவனின் சமயோசித புத்தியும் தைரியமும் ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றியது. மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் இருந்த அந்த ரயில் தண்டாவளத்தில் இருக்கும் விரிசல் குறித்து சற்றும் அறியாத ஓட்டுநர் சிறுவனின் எச்சரிக்கையைக் கண்டு ரயிலை நிறுத்தினார்.

ரயில் கோரக்பூர் – நர்கதியாகஞ் இடையே சென்றுகொண்டிருந்தது. சாம்பரன் மாவட்டத்தின் மாவட்ட கல்வி அதிகாரியான ஹரேந்திர ஜா ’கல்ஃப் நியூஸ்’ பேட்டியில் தெரிவிக்கையில்,

இது ஒரு வீரச் செயலாகும். நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய அவரது தீரமிகு செயலுக்கு பரிசளிக்க உள்ளோம். இந்த பரிசு ரொக்கமாகவோ அல்லது பதக்கமாகவோ அளிக்கப்படும். இதை இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் அவர் நிச்சயம் கௌரவிக்கப்படுவார்.

பீம் மங்கள்பூரிலுள்ள அரசுப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர். இவரது பகுதிக்கு அருகாமையிலுள்ள குழந்தைகளின் வீரச் செயல்களை அறிந்துள்ளார். அதுவே எதிரே வந்துகொண்டிருந்த ரயிலுக்கு முன் ஓடி நிறுத்த முயற்சிக்க இவருக்கு உந்துதலளித்தது. உள்ளூர் ஊடகங்களுடனான அவர் உரையாடலை இந்தியா டுடே வெளியிடுகையில்,

ஒரு முறை அருகாமையிலுள்ள கிராமத்திற்குச் சென்றிருந்தேன். இங்குள்ளவர்கள் ஒரு சிறுவனின் வீரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். சமூகம் என்னைக் குறித்து பேசும் வகையில் நானும் அத்தகைய செயலைச் செய்ய விரும்பினேன். நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்ற முடிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கட்டுரை : Think Change India