முதல் விமானியான ஸ்ரீநகரைச் சேர்ந்த 30 வயது பெண்மணி!

0

இராம் ஹபீப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது விமானத் துறையில் இணைய ஆர்வம் இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் சம்மதம் தெரிவிக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. தெஹ்ராதூனில் வனவியல் துறையில் இளநிலை பட்டம் படித்தார். முதுநிலைப் படிப்பை ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

அமெரிக்காவின் மியாமியில் உள்ள விமானப் பள்ளியில் இணைந்து தனது கனவை நோக்கி பயணிப்பதற்காக பெற்றோர்களை சம்மதிக்க வைக்க ஆறாண்டுகள் ஆனது. இவரது பெற்றோர் விமானம் ஓட்டுவது காஷ்மீர் போன்ற பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு உகந்ததல்ல என நினைத்ததால் விமானத் துறையில் தங்களது பெண் இணைவது குறித்து தயக்கம் காட்டினர். ஆனால் இராமின் அதீத ஆர்வத்தைக் கண்டு தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.

தற்போது இராமின் வயது 30. இவரது அப்பா வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு பயிற்சியை முடித்து அங்கே வர்த்தக ரீதியான விமானத்தை ஓட்டும் விமானி ஆனார். ’ட்ரிப்யூன்’ உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

நான் தேர்வுகளில் வெற்றிபெற தீவிரமாக படிக்கவேண்டியிருந்தது. அமெரிக்காவில் 260 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றேன். இது உரிமம் பெற அவசியமானதாகும். நான் விமானம் ஓட்டிய மணிக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் வர்த்தக ரீதியான விமானம் ஓட்ட உரிமம் கிடைத்தது. ஆனான் நான் இந்தியாவில் பணிபுரியவே விரும்புகிறேன்.

இன்று இண்டிகோ, கோஏர் ஆகிய நிறுவனங்களின் பணிவாய்ப்புகளுடன் காஷ்மீர், ஸ்ரீநகரின் முதல் இளம் வர்த்தக விமானியானார். இத்தகைய சாதனை புரிந்திருந்தும் இவரது உறவினர்கள் இவரது பணி வாழ்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். இராம் கூறுகையில்,

"இந்தத் தொழிலை நான் தேர்வு செய்துள்ளேன் என்றும் எனக்கு பணி கிடைத்துள்ளது என்றும் இன்னமும் அவர்களால் நம்பமுடியவில்லை."

பஹரின் மற்றும் துபாயில் ஏர்பஸ் 320-ல் இராம் பயிற்சி பெற்றுள்ளார் என ’ஜீ நியூஸ்’ தெரிவிக்கிறது. இராம் படித்த ஷெரி காஷ்மீர் வேணான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

”ஹபிபுல்லா சர்கார் மகளான இராம் ஹபீப் எங்களது பல்கலைக்கழகத்தில் வனவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் விமானத் துறையில் முதன் முறையாக தேர்வாகியிருப்பது SKUAST-K-ன் வனவியல் துறை ஆசிரியர்களுக்கு பெருமையளிக்கிறது,” என குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டுரை : THINK CHANGE INDIA