காஷ்மீரில் இருந்து புறப்பட்டுள்ள பெண் கிரிக்கெட் பயிற்சியாளர் சகீனா அக்தர்!

0

சகீனா அக்தர், இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் விளையாடவேண்டும் என்ற கனவுகளை சுமந்து வாழ்ந்தவர். ஆனால் அவரது அந்த கனவை அவரின் பெற்றோர் புரிந்து கொள்ளாமல் சிதைத்துவிட்டனர். தன்னுடைய கனவை பாதியில் விட மனசில்லாத சகீனா, பல சோதனைகளை தாண்டி கடந்த எட்டு ஆண்டுகளாக காஷ்மீரில் ஒரு கிரிக்கெட் கோச்சாக இருந்து வருகிறார். காஷ்மீர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் சகீனா, பல இளம் வீரர்களை கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வகையில் வழிகாட்டி வருகிறார். 

ஸ்ரீநகரில் உள்ள முனார்வராபாத்தை சேர்ந்த சகீனா, கிரிகெட்டில் தனக்கு ஒரு பணி வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. காஷ்மீரில் இன்று இவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் கோச்சாக இருந்து, 19 வயதுக்கு கீழ் உள்ள மகளிர் அணியை வழிநடத்தி வருகிறார். 

“நான் குழந்தையாக இருந்தபோது என் வீட்டு அருகில் இருந்த பையன்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். அப்போதே கிரிக்கெட் விளையாட்டு பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டேன்,” என்கிறார் சகீனா.

ஆனால் சகீனா உயர்நிலை பள்ளியில் சேர்ந்த போது கிரிக்கெட் விளையாடுவதை விடவேண்டி இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் கிரிக்கெட் ஒரு ஆண்மகனின் விளையாட்டாகவே பார்க்கப்பட்டதாக அவர் நினைவுக்கூர்ந்தார். பின்னர், எப்படியோ பள்ளி கிரிக்கெட் டீமில் இணைந்து பள்ளிகளிடையே, மாவட்ட அளவில், மாநில அளவில் விளையாட்டுகளில் பங்கெடுக்கத் தொடங்கினார் சகீனா. 1998 இல் சகீனா முதன்முதலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் மேட்சில் விளையாடி, ‘வுமன் ஆப் தி சீரீஸ்’ அதாவது சிறந்த பெண் நட்சத்திரமாக சிறந்த பந்து வீச்சாளார் மற்றும் அதிக ரன்களை குவித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஸ்ரீநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் சேர்ந்த அவர், பெரும்பாலும் வகுப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிலேயே இருப்பாராம். 

“என் குடும்பம் ஆதரவு அளிக்க தொடங்கினார்கள்,  இருப்பினும் படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கச் சொன்னார்கள்,” என்றார். 

பட்டம் பெற்றபின் காஷ்மீர் பல்கலைகழகத்தில் மேற்படிப்பில் சேர்ந்தார் சகீனா. தனக்கு இது சரிவராது என புரிந்துகொண்ட அவர், அதை பாதியில் விட்டுவிட்டு, விளையாட்டில் டிப்ளமா படிப்பில் சேர டெல்லிக்கு சென்றார். பின் காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் பணிபுரியத் தொடங்கினார் சகீனா. அங்கே அவர் பெண்களுக்கான விளையாட்டு கேம்ப்களை ஏற்பாடு செய்தார். 

“எங்களது முதல் கேம்ப் போலோ மைதானத்தில் இருந்தது. அங்கே காஷ்மீரை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.”

பின்னர் 2007 இல் காஷ்மீர் பல்கலையில் பணிக்கு விண்ணப்பம் செய்து, காண்ட்ராக்ட் அடிப்படையில் விளையாட்டு பயிற்சியாளராக சேர்ந்தார். தற்போது அவர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

வருங்கால திட்டத்தை பற்றி கூறும் சகீனா, “நான் மூன்று வித லெவல் பயிற்சியையும் செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது தான் தேசிய அளவில் கிரிக்கெட் பயிற்சியாளராக என்னால் ஆக முடியும். நாடு முழுதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கமுடியும்,” என்கிறார்.

கட்டுரை: Think Change India