கோயில்களில் சேகரிக்கப்படும் பூக்களை ஆர்கானிக் உரமாக்கும் பொறியாளர்கள்!

0

வழக்கமாக பக்தர்கள் கோயில்களுக்குச் செல்லும்போது பூக்களை கொடுத்து இறைவனை வழிபடுவார்கள். கோயிலில் வழிபாடு முடிந்ததும் பூக்கள் சேகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் கொட்டப்படும் அல்லது குப்பைகளாக வீசப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் பூக்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்படுவதை மாற்றும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சில்வர் ஓக் பொறியியல் கல்லூரி மாணவர்களான யஷ் பட், அர்ஜுன் தக்கர் இருவரும் கோயில்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆர்கானிக் பொருட்களை 15 நாட்களில் ஆர்கானிக் உரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு இயந்திரங்களை முயற்சி செய்து பார்த்த பிறகு இவ்விருவரும் தங்களது சொந்த இயந்திரத்தை உருவாக்க தீர்மானித்தனர்.

யாஷும் அர்ஜுனின் குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழக புதுமை கவுன்சிலில் நடைபெற்ற விரிவுரையில் பங்கேற்றபோதுதான் இத்தகைய முயற்சிக்கான எண்ணம் தோன்றியது. அதிகரித்து வரும் சமூக பிரச்சனைகளுக்கு பொறியாளர்களால் தீர்வுகாணமுடியும் என்பதை உணர்ந்தனர்.

பக்தர்கள் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் பொருட்கள் நீர்நிலைகளில் அப்புறப்படுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்ததால் ஆர்கானிக் கழிவுகள் உரமாக மாற்றப்படும் திட்டத்தை விரைவிலேயே உருவாக்கினர்.

இந்த திட்டத்திற்கு குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழக புதுமை கவுன்சில் 95,000 ரூபாய் உதவித்தொகை வழங்கி ஆதரித்தது. பல்வேறு கோயில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்பதால் யாஷும் அர்ஜுனும் அகமதாபாத் நகராட்சி கழகத்திற்கு திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.

அகமதாபாத்தின் பல்வேறு வார்டுகளில் உள்ள கோயில்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. மேயர் பிரிஜ் படேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தினமும் பூக்கள், பழங்கள் அடங்கிய 300 கிலோ ஆர்கானிக் கழிவுகளை 100 கிலோ ஆர்கானிக் உரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ’டெய்லி ஹண்ட்’ தெரிவிக்கிறது.

யாஷும் அர்ஜுனும் தற்போது பொடக்தேவ், தட்லெஜ், கத்லோடியா, நரன்புரா, நவ்ரங்கபுரா ஆகிய வார்டுகளில் சோதனை முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் 22 கோயில்களுடன் இணைந்துள்ளனர். இந்தக் கோயில்களுக்கு பூக்கள், தேங்காய் ஓடுகள், இலைகள் ஆகியவற்றை சேகரிக்க தனிப்பட்ட கூடைகளை வழங்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கும் உரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும்.

வருங்காலத்தில் யாஷும் அர்ஜுனும் ஊதுபர்த்தி, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை தயாரிக்கவும் தேங்காய் கழிவுகளை கோகோபித்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களது தயாரிப்புகள் பதிவுசெய்யப்பட்ட ப்ராண்ட் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவித்துள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA