80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  உலகின் மிகப்பெரிய நீர்பாசனத் திட்டம்! 

தெலுங்கானாவின் காலேஷ்வரம் கிராமத்தில் துவங்கப்படும் இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய நீர்பாசன திட்டமாகும். 

0

’காலேஷ்வரம் லிஃப்ட் நீர்பாசன திட்டம்’ தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி அரசாங்கத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். தெலுங்கானாவின் காலேஷ்வரம் கிராமத்தில் துவங்கப்படும் இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய நீர்பாசன திட்டமாகும். 

விவசாயிகள் தற்கொலை மஹாராஷ்டிர மாநிலத்திற்குப் பிறகு இங்குதான் அதிகளவில் நிகழ்கிறது. பருவமழை பொய்த்துப் போவதும் நீர்பாசன வசதிகள் இல்லாத நிலையுமே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டமானது இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 80,000 கோடி ரூபாயுடன் மேற்கொள்ளப்படும் மிகவும் விலையுயர்ந்த நீர்பாசன திட்டமாகும்.

மெடிகட்டா மற்றும் மத்திய மானேர் நீர்தேக்கம் இடையே 120 கிலோமீட்டர் தூரம் சுரங்கப்பாதைகள், கால்வாய்கள், பம்புகள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுடன் நிறைவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நீர்பாசனத் துறை அமைச்சர் டி ஹரீஷ் ராவ் கூறுகையில்,

“இந்தப் பணி முடிவடைந்தால் காலேஷ்வரம் திட்டத்தின் 50 சதவீத பணி ஐந்தாண்டுகளுக்குள்ளாகவே நிறைவடைந்ததாக கருதப்படும். தண்ணீர் தெலுங்கானாவின் பொருளாதார சக்தியாக மாறிவிடும். ஏனெனில் விவசாயிகளால் இருவகை பயிர்களை விதைக்க முடியும்,” என்றார். 

மேலும் இந்தத் திட்டம் சுற்றுலா மற்றும் நீர் விளையாட்டுகள் பிரிவில் பலனளிப்பதுடன் பல ஆயிரம் கோடி மதிப்புடைய மீன்பிடித் துறை வளமடையவும் உதவும் என்றார்.

மெடிகட்டா மத்திய மானேர் நீர்தேக்கத்துடன் இணைப்பட்ட பிறகு சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மிகப்பெரிய திட்டம்

ஹைதராபாத்தில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் ’காலேஷ்வரம் லிஃப்ட் நீர்பாசன திட்டம்’ நீர்பாசனத்தை ஊக்குவிப்பதற்காக தெலுங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் அவர்களால் துவங்கப்பட்டது.

காலேஷ்வரம் திட்டம் தெலுங்கானாவின் 13 மாவட்டங்களில் உள்ள 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்பாசனம் செய்வதையும் மேலும் 17 லட்சம் ஏக்கரை நிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தால் ஹைதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவைக்கு இந்த திட்டம் பயன்படுத்தப்படுவதுடன் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

நீர்வரத்தைக் கட்டுப்படுத்த மெடிகட்டாவில் ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் கோதாவரி நதியின் குறுக்கே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் தடுப்பணை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இங்கிருந்து தண்ணீர் கோதாவரி நதிக்கு திரும்ப பம்ப் செய்யப்பட்டு நீர்தேக்கம், தண்ணீர் சுரங்கங்கள், பைப்லைன்கள், கால்வாய்கள் போன்ற அமைப்புகளுக்கு திசை திருப்பப்படும்.

தடுப்பணைகள் கட்டப்படுவதால் நேர்மறையான விளைவுகளும் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படக்கூடும். எனினும் எதிர்மறை விளைவுகள் தற்காலிமானதாக இருக்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தாது,” 

என தெலுங்கானா அரசாங்கத்தின் நீர்பாசனம் மற்றும் சிஏடி துறை அறிக்கை தெரிவிக்கிறது.

13 மாவட்டங்களில் 20 நீர்த்தேக்கங்கள் முழுவதும் பரந்துள்ள 145 டிஎம்சி தண்ணீருடன் இந்த திட்டம் ஏழு இணைப்புகளாகவும் 28 பேக்கேஜ்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கங்கள் அனைத்தும் 330 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்படும். இதில் 21 கிலோமீட்டர் நீண்ட சுரங்கமே நீளமானதாகும். இது எல்லம்பள்ளி மற்றும் மேடாராம் நீர்தேக்கங்களை இணைக்கும். இந்த திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் கால்வாய்கள் 1,832 கிலோமீட்டர் வரை பரவி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 500 கிலோமீட்டர் வரை தண்ணீரை எடுத்துச்செல்லும்.

கோதாவரியில் இருந்து திசைதிருப்பப்படும் தண்ணீரைப் பயன்படுத்தவும் செல்லும் வழியில் அவற்றை சேமிக்கவும் 17 ஆன்லைன் சேமிப்பு பகுதிகள் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஒட்டுமொத்த திட்டத்தில் 7,38,851 ஹெக்டர் பரப்பளவிற்கு நீர்பாசனம் வழங்கப்படும். கோதாவரி கடல் மட்டத்திற்கு மேல் 100 மீட்டர் அளவில் பாய்வதாலும் தெலுங்கானா பகுதி கடல் மட்டத்திற்கு மேல் 300 முதல் 650 மீட்டர் அளவில் அமைந்திருப்பதாலும் இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

139 MW மெகா பம்புகள் கொண்டு தினமும் 2 டிஎம்சி அடி தண்ணீர் உயர்த்தப்பட்டு இந்த திட்டம் உலக சாதனை படைத்துள்ளது. இந்த 2 டிஎம்சி அடி தண்ணீர் அன்னாரம், சண்டில்லா ஆகிய இரண்டு தடுப்பணைகளுக்கு பம்ப் செய்யப்படும். இங்கிருந்து தண்ணீர் எல்லம்பள்ளி நீர்தேக்கத்திற்கு செல்லும். இந்த நீர்தேக்கத்திலிருந்து கால்வாய்கள் மற்றும் பைப்லைன்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக மெடிகட்டா தடுப்பணையில் அரசாங்கம் உலகிலேயே நீளமான நீர்பாசன சுரங்கத்தை (14.09 கிலோமீட்டர்) கட்டுமானம் செய்ய உள்ளது. பம்ப் இயங்கப்படும் குகை போன்ற பகுதியானது 2 கோடி லிட்டர் தண்ணீர் கொள்ளளவைக் கொண்டது, இது உலகச் சாதனை படைத்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL