சோகம் தரும் ஃபேஸ்புக்; பதின்பருவத்தினரை பாகுபாடின்றி இணைக்கும் வாட்ஸப்: ஆய்வு முடிவு!

0

அதிகப்படியாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் நாம் ஆரோக்கியத்தை இழக்கிறோம். அதே சமயம் மாணவர்கள் பள்ளியிலுள்ள படிநிலைப் பிரிவுகளுக்கு அப்பால் வெளிப்படையாக இருக்க வாட்ஸ் அப்'தான் பொருத்தமான தொடர்பாக பார்க்கப்படுகிறது. இரண்டு வெவ்வேறு ஆய்வுகள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

எப்போதாவது ஃபேஸ்புக் ப்ரொஃபைலை பார்ப்பவர்களை விட எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் அதிக சோகமாகவும் ஆரோக்கியமற்றவர்களாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், சேன் டியாகோ (UCSD)-வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2013-ம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட நேரத்தில் 5,208 தன்னார்வலர்களிடம் ஃபேஸ்புக் பயன்பாடு மற்றும் மன நலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஃபேஸ்புக்கின் அதிகமாக பயன்பாடு, 

”சமூக, உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை சமரசம் செய்துகொள்வதுடன்’ நெருங்கிய தொடர்புடையதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக Metro.co.uk தகவலளிக்கிறது.

பயனாளிகள் தங்களது சுயவிவரங்களை சராசரிக்கும் அதிகமான முறை புதுப்பித்துக்கொண்டாலோ அல்லது சராசரிக்கும் அதிகமாக பதிவுகளை லைக் செய்தாலோ அவர்களுக்கு மன நலம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் இந்த ஆய்வு இடம்பெற்றது. UCSD-ன் பொது சுகாதாரத்தின் உதவி பேராசிரியரான ஹாலி சாக்யா மற்றும் பல்கலைக்கழகத்தின் மனித இயற்கை ஆய்வகத்தின் இயக்குனரான யேல்-ன் நிகோலஸ் க்ருஸ்டாகிஸ் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாட்ஸ் அப்பின் நேர்மறைத் தாக்கம் குறித்த ஆய்வு

பதின்பருவத்தினர் வகுப்பறையைக் காட்டிலும் சக வயதினரிடம் சிறப்பாக தொடர்புகொள்ளவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் மொபைல் செய்தி சேவை வழங்கும் வாட்ஸ் அப் உதவுகிறது என்கிறது அறிக்கை.

பதின்பருவத்தினர் பள்ளியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இயலாத விதத்தில் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள வாட்ஸ் அப் குழுக்கள் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வகுப்பில் உடன் பயில்வோருடன் நெருக்கமாக இருக்கவும் வெளிப்படையாக தொடர்புகொள்ளவும் உதவுகிறது.

”குழுக்களில் பரிமாறப்படும் தகவல்கள் குரூப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இருக்கும் நம்பிக்கை சார்ந்ததாகும். இதனால் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பை மேம்படுத்துகிறது,” 

என்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த ஹைஃபா பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஏரி கிசெல். இஸ்ரேலின் புதுமை செய்தி வலைதளமான nocamels.com-க்கு இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார் இவர்.

”வாட்ஸ் அப்பில் விவாதிப்பதன் மூலம் இரக்க குணமும் மனிதநேயமும் நிறைந்த சூழலைக் கொண்ட சமூகத்தை உருவாக்க உதவும்.” என்கிறார் கிசெல்.

இந்த மெய்நிகர் பகுதி குறித்த பதின்பருவத்தினரின் அனுபவத்தை ஆய்வு செய்வதற்காக இளம் பருவத்தினர் அடங்கிய இரு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு குழுவில் 16-17 வயதுடையவர்களும் மற்றொரு குழுவில் 14-15 வயதுடையவர்களும் இருந்தனர்.

”பள்ளியில் உருவாக்கப்பட்ட படிநிலைப் பிரிவுகளைத் தகர்க்கும் தொடர்பாகவே வாட்ஸ் அப் குழுவை பதின்பருவத்தினர் பார்க்கின்றனர். இந்தப் பகுதியில் மொழிக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பொதுவான விருப்பங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்,” என்று வாட்ஸ் அப்பை ஒரு மாணவர் விவரித்தார். 

”இதில் நேருக்கு நேர் சந்திப்போ உடல் ஸ்பரிசமோ இன்றி வார்த்தைகளும் குறியீடுகளும் மட்டுமே இருப்பதால் பொதுவாக வாட்ஸ் அப்பில் நான் மற்றவர்களால் மதிப்பிடப்படுவதில்லை. இதனால் அதிக நெருக்கத்தையும் பாதுகாப்பையும் என்னால் உணரமுடிகிறது.” என்று விவரித்தார் ஒரு பங்கேற்பாளர்.

சமூக பொருளாதார அந்தஸ்து, பொதுவான நடவடிக்கைகள் அல்லது படிக்கும் விதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே பள்ளிச் சூழலில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். எனினும் வாட்ஸ் அப் குழு இதுபோன்ற பிரிவினைகளை தகர்த்து ஒரே விதமான குழுவாக இணைக்கிறது.

”வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொருவரும் மற்ற அனைவருடனும் பேசலாம். வகுப்பறையில் எங்களுக்கிடையே உருவாக்கப்படும் சுவற்றை வாட்ஸ் அப் தகர்த்துவிடுகிறது. வாட்ஸ் அப் குழு என்பது வகுப்பறையின் குழு உருவாக்கும் நாளைப் போன்றதாகும்.” என்று ஒரு பங்கேற்பாளர் விவரித்தார்.