15 லட்சம் பேர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜெய்ப்பூர் கால்கள்!

0

இது நடந்தது 1969 ஆம் ஆண்டு. ஜெய்சல்மர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த தேவேந்திர ராஜ் மேத்தா போக்ரானில் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது தொடை எலும்பு 43 துண்டுகளாக உடைந்து போனது. அவர் உயிர்பிழைப்பாரா என்பதே மருத்துவர்களுக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் கடவுளின் எண்ணம் வேறாகத்தான் இருந்தது. ஐந்து மாதங்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற போது, டாக்டர்கள் அவரது காலையே முற்றிலும் எடுத்துவிடுவது பற்றி சிந்தித்தார்கள். ஆனால் மெது மெதுவாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவுக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். "சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல முடியாதவர்களின் நிலை என்ன? "இது அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்வி. இப்படித்தான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், தங்களது ஊனத்தை எதிர்கொள்ள உதவும் நோக்கத்துடன் தோன்றிய அமைப்பு தான் "பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி".

பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதியின் தொடக்கம்

பிஎம்விஎஸ்எஸ் (BMVSS) கடந்த 1975ம் ஆண்டு ஒரு உயர்ந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. "ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெறுவதை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, அவர்களது சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தும் பேணிக்காக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்" என்று கூறிய அவர், "அவர்கள் நடமாட வேண்டும் என்பது முக்கியமானது, அதே நேரத்தில் அவர்களது சுய மரியாதையை மீண்டும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்பதும் அதே அளவு முக்கியமாகும்" என்கிறார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான ஊனமுற்றோருக்கு, செயற்கை கால்கள் பொருத்தப்படுவது மற்றும் இதர உடல் ரீதியான உதவிகள் அளிக்கப்படுவதை தனது நோக்கமாகக் கொள்ள இந்த அமைப்பு முடிவு செய்தது.

"வலியை உணர்ந்த நாம் அனைவரும் கைகோத்திருப்போம்* என்று கூறிய நோபல் பரிசு பெற்றவரான டாக்டர் ஆல்பர்ட் ஸ்வீட்சரால் ஊக்கம் பெற்றவர் தேவேந்திரா. அது என் உள்மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "நான் ஏதாவது செய்ய வேண்டும்" என சிந்திக்க வைத்தது.

ஜெயப்பூர் கால்கள்

ஜெய்ப்பூர் கால்கள் என்பது பிஎம்விஎஸ்எஸ் தொடங்கப்படுவதற்கு ஏழு ஆண்டுகள் முன்னதாகவே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் தோன்றியது. முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடிய ரப்பரால் செய்யப்பட்ட செயற்கைக் கால் அது. ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்ட அது பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதியில் இலவசமாக பொருத்தப்பட்டது. "செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டவர்களால் மேற்கொள்ள முடியாத சில அசைவுகளை ஜெய்ப்பூர் கால்கள் அளித்தன என்று கூறுகிறார் தேவேந்திரா. இதனால் கால்கள் அகற்றப்பட்டவர்கள் நடக்க முடிந்தது, ஏற முடிந்தது, கால்களை மடித்து உட்கார முடிந்தது, மற்றும் அன்றாட பணிகளை துல்லியமாகவும், எளிதாகவும், வசதியாகவும் செய்ய முடிந்தது. ஜெய்ப்பூர் கால்களின் செயல்பாடு ஆச்சரியமூட்டுவதாக அமைந்திருந்ததால் அது பூகோள எல்லைகளைக் கடந்து உலகி்ல் அதிகம் பயன்படுத்தப்படும் செயற்கைக் கால்கள் ஆனது.

மனிதநேய முயற்சிகள்

இன்றைய தினம் பிஎம்விஎஸ் எஸ் அமைப்பு ஒருவரது சாதி, மதம், நிறம் அல்லது வசிப்பிடம் ஆகியவற்றில் எந்த வேறுபாடும் இன்றி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் நோயாளிகளுக்கு இலவசமாக உடலுதவிகளை அளித்து வருகிறது. அவர்களது அணுகுமுறை நோயாளிகளை மையப்படுத்தி மட்டுமே உள்ளது. இலவசமாக உடலுதவிகளை அளிப்பது மட்டுமின்றி இந்த அமைப்பு கால்கள் அகற்றப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும் அளிகிறது. இதன் மூலம் அவர்கள் சுய வேலைவாய்ப்பு பெறுவதுடன் தங்களது கண்ணியத்தையும் மீண்டும் பெறுகின்றனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களையும் சென்றடையும் வகையில் இந்த அமைப்பு முகாம்களையும் நடத்துகிறது. ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இது 22 கிளைகளை நாடு முழுவதும் கொண்டுள்ளது. டெல்லி, புனே, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் இதன் செயற்கை கால்கள் பொருத்தும் மையங்கள் உள்ளன.

அறிவியல் கலந்த சேவை

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக இரக்கம் கொண்டு சேவை அளிப்பதுடன் இந்த செயற்கைக் கால்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளிலும் பிஎம்விஎஸ்எஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்கைக் கால்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு அதே நேரத்தில் அதன் செலவுகளை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக ஒரு உள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவையும் இது அமைத்துள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், மசாஷுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், விர்ஜினியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டவ் இந்தியா, ஐஐடிக்கள் மற்றும் இஸ்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் பிஎம்விஎஸ்எஸ் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இவர்கள் அளிக்கும் நன்கொடைகள் தான் எங்களை செயல்பட வைக்கிறது.

வெற்றிக்கதைகள் உண்டா என்ற கேள்விக்கு, உடல் வசதியின்மை நீக்கப்படுவது, தனிப்பட்ட கண்ணியம் மீட்கப்படுவது மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவைகளை வெற்றி என உயர்த்திக் காட்டுகிறார் அவர். "இவை அனைத்தும் உண்மையான வெற்றிக் கதைகள்" என்கிறார். ஒரு விபத்தில் தன் காலை இழந்த நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் ஜெய்ப்பூர் கால் பொருத்தப்பட்டு தொடர்ந்து நாட்டியக் கலைஞராகவும் நடிகையாகவும் இருப்பது ஓர் சிறந்த உதாரணம் என்கிறார் தேவேந்திரா.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

இந்த நிறுவனத்துக்கும் அதன் நிறுவனருக்கும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசு 2008ம் ஆண்டு தேவேந்திர மேத்தாவுக்கு, பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. பிஎம்விஎஸ்எஸ் அமைப்புக்கு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக பாடுபடும் சிறந்த நிறுவனத்திற்கான தேசிய விருது கடந்த 1998ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஊனமுற்றவர்களுக்காக செயல்படும் சிறந்த நிறுவனத்திற்கான தேசிய விருது 1982ம் ஆண்டு வழங்கப்பட்டது.

தற்போது

பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி ஊனமுற்றோருக்காக செயல்படும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், கால்கள் அகற்றப்பட்ட மற்றும் போலியோவால் பாதிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.

மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தேவேந்திர மேத்தா கூறுகையில், "அவதிப்படுவோருக்கு நீங்களே அவதிப்படுவதாக நினைத்து கொண்டு உதவி அளியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி ஈடு செய்ய முடியாததாகவும் முழுமையளிப்பதாகவும் இருக்கும்".