பட்டய கணக்காளர் தேர்வில் வென்று அரசுத் தூதுவரான டீ கடைக்காரர்..!

0

வாழ்க்கையில் வெற்றி என்பதுதான் நம் அனைவரின் இலக்கு. ஆனால், அதனை எட்டிப் பிடிக்க பலருக்கு வழி தெரிவதில்லை. சிலர் தங்களுடைய குறைகளை நினைத்து அழுகிறார்கள். இன்னும் சிலர் தங்களின் குறைகளை மறைத்து புலம்புகிறார்கள். இவர்களின் முயற்ச்சியில் எங்கோ, ஏதோ ஒரு குறை இருப்பதால்தான் சறுக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. முன்னேற்றத்தில் தடை ஏற்ப்படுகிறது.

வெற்றிக்கு முதல் படி நம்பிக்கைதான். நம்பிக்கையை இழக்காமல் முழு முயற்ச்சியுடன் முயற்சித்தால் இலக்கை அடையலாம் என்பதை இந்தக் கதையை படித்த பிறகு நாம் புரிந்து கொள்ளலாம்.

சோம்நாத் ஹிராம், 28 வயதான இவரை ஒரு டீ கடை காரராகத்தான் பூனே வாசிகளுக்குத் தெரியும். அதெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பு வரை. இன்று அவருடைய கடைக்கு செல்பவர்கள் டீ குடிக்க மட்டுமல்ல அவருக்கு வாழ்த்து சொல்வதற்காகவும் செல்கிறார்கள்.

இந்த டீ கடைக்காரர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று பட்டயக் கணக்காளர் தேர்வில் (Chartered Accountancy) வெற்றி பெற்றுள்ளது தான் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம்.!

சிலருக்கு வெற்றி வாசல் வழியாக வரும், இன்னும் சிலருக்கு கூரையை பிய்த்துக்கொண்டு வரும். சோம் நாத்துக்கு இரண்டும் சேர்ந்தே நடந்துள்ளது. சி.ஏ தேர்வில் இவர் வெற்றி பெற்ற செய்திகள் பரவ, மகாராஷ்டிர அரசு இவரை, அரசின் வேலை பார்த்துகொண்டே படிக்கும் (Earn & Learn Scheme) திட்டத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளது.

அரசின் இந்த அங்கீகாரம் குறித்து யுவர் ஸ்டோரியிடம் பேசினார், மராட்டிய மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே,

"டீ விற்பவர்களுக்கு இது நல்ல காலம் போலும். டீ விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய மோடி பிரதமர் ஆகி இருக்கிறார். இந்த டீ கடைகாரரோ சி.ஏ. எழுதி வெற்றி பெற்றிருக்கிறார். அவரை பாராட்டினால் மட்டும் போதாது என்பதால் கூடுதல் கெளரவிப்பாக சம்பாதித்துக் கொண்டே படிக்கும் திட்டத்தின் தூதுவராக நியமித்துள்ளோம். இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கம் தருவதாக அமையும்." என்றார்.

சோலாப்பூர் மாவட்டம், சாங்க்வி கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத் வறுமைக் காரணமாக தமது சகோதரர், சகோதரி போன்று படிப்பைத் தொடர முடியாமல் கைவிட நினைத்தார். பின்னர் கிராமத்தில் வேலை செய்துகொண்டே கிடைத்த வருவாயில் பள்ளி இறுதி தேர்வை எழுதி முடித்தார். ஆனாலும் தொடர் வறுமை உயர் கல்விக்கு தடை போட்டது. வறுமையை விட பசி கொடுமை அவரைத் துரத்தியது.

2006 ஆம் ஆண்டு வேலை தேடி கிராமத்தை விட்டு வெளியேற முயன்றவரை சில ஆசிரியர்கள் அறிவுறுத்தி பூனா சென்று பி.காம் படிப்பில் சேர வைத்தார்கள். 2009 -ல் பி.காம்., 2012 -ல் எம்.காம் என்று வறுமையை சமாளித்து படித்து முடித்தார்.

அதோடு நிற்கவில்லை, அடுத்த கட்டமாக சி.ஏ. படிப்பிலும் சேர்ந்தார். ஆனால், தாங்க முடியாத கட்டணம், அதிக விலை கொண்ட புத்தகங்கள் என்று சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சி.ஏ படிப்பை கைவிட நினைத்தார். ஆனால் சோம்நாத்தின் மன உறுதி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி அடங்கவில்லை. உடனே, பூனாவின் பெருகேட் பகுதியில் ஒரு டீ கடையை தொடங்கினார் சோம்நாத்.

அதில் கிடைத்த வருமானத்தில் மீண்டும் சி.ஏ படிப்பை தொடர்ந்தார். பகல் பொழுதில் டீ வியாபாரம், இரவில் படிப்பு என்று உழைத்தது வீண் போகவில்லை.

"எப்படியாவது சி.ஏ படிப்பில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியோடு படித்தேன். ஆனால் சார்டட் அக்கவுன்டண்டு ஆக வேண்டுமானால் நல்ல ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கோ இந்தியும் , மராத்தியும் மட்டுமேதான் தெரியும். பி.ஏ கூட மராத்தியில் தான் படித்தேன். முயற்சியையும், நம்பிக்கையையும் நான் கைவிடவில்லை. எனவே தான் இன்று எனது கனவு நனவாகி இருக்கிறது." என்றார் சோம்நாத்.

சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சோம்நாத் பள்ளிப் படிப்பின் போதே தனது குடும்பத்தை நல்ல பொருளாதார சூழலுக்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டவர். அந்த கனவும் நிறைவேறி இருக்கிறது.

"இந்த வெற்றியை என் குடும்பத்துக்கே சமர்பிக்கிறேன். அவர்கள்தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள்." என்று கூறும் சோம்நாத், தனது நீண்ட வெற்றிப் பயணத்தில் உடன் இருந்த வறுமையையும் அவர் மறக்கவில்லை. ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே தமது நோக்கம் என்கிறார், இந்த அரசுத் தூதுவர்.

சோம்நாத்துக்கு யுவர் ஸ்டோரியின் பாராட்டுக்கள்!

இந்தியில்: நீரஜ் சிங் | தமிழில்: ஜெனிட்டா.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சாதரண நிலையில் இருந்து வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் தொடர்பு கட்டுரை:

தலித் உறுதுணை நாயகன் 'ராஜா' அன்று நடைபாதை கடை.. இன்று ரூ.60 கோடி பிசினஸ்!

நெல்லை கிராமத்தில் புளியங்காய் விளையாடிய அஷ்விதா கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியாளரான கதை!