பன்னாட்டில் கால் பதிக்கும் சென்னை நிறுவனம் ’கொலப்பசி’

வீட்டிற்கு உணவை டெலிவரி செய்யும் சென்னை தொழில்முனைவு நிறுவனத்தின் நான்காண்டு வளர்ச்சி!

2

பெயரிலேயே தனித்தன்மை; நம் அனைவரின் அன்றாட சொல்லாடல் என்பதால் அதிகமாக நினைவுக்கூறக்கூடிய பெயர் என்ற முதல் படியிலேயே கொலப்பசி" வெற்றி கண்டுள்ளது என்றே கூறவேண்டும். 

கொலபசி (Kolapasi) ஆரம்பித்து நான்காண்டில் ஸ்திரமான வளர்ச்சி கண்டதுடன், விரைவில் கடல் கடந்து கால் பதிக்கவும் போகிறது. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வருங்கால திட்டங்கள் பற்றி நிறுவனர் சந்தோஷ் மற்றும் துணை நிறுவனர் ஆதித்யா ராஜு நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

தொழில் பயணம்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆதித்யாவிற்கு, தன்னுடன் படித்த சஞ்சிதாவின் கணவர் சந்தோஷ்ஷின் அறிமுகம் கிடைத்தது. எண்ணங்கள் ஒத்துப் போக, இருவருமே தொழில்முனைவராகும் முனைப்பில் இருந்தனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு ஐடியாவை அலசி இருபத்தியைந்து ஐடியாக்கள் வரை தெரிவு செய்து வைத்திருந்தனர். 

பல தடவை, இவர்களின் உரையாடல் இரவு வரை நீடிக்கும், அப்பொழுதெல்லாம் தரமான சாப்பாடு கிடைப்பதில் சிரமம் இருந்தததாம். இதுவே அவர்களின் யுரேக்கா தருணம்.  ஒரு வருட உழைப்பிற்கு பிறகு சந்தோஷ், அவரின் பள்ளிப்பருவ நண்பர் பத்மநாபன் மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து கொலப்பசி  நிறுவனத்தை தொடங்கினர்.

 நிறுவனர்கள் சந்தோஷ், பத்மநாபன் மற்றும் ஆதித்யா
 நிறுவனர்கள் சந்தோஷ், பத்மநாபன் மற்றும் ஆதித்யா
"மற்ற உணவகம் போல் அல்லாமல், வீட்டுச்சுவையில் உணவை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதே சமயம் செஃப் கொண்டு அவர்களை நம்பி உணவகம் நடத்துவதில் உடன்பாடில்லை,"

என்று கூறும் ஆதித்யா நாங்கள் தயாரித்து சுவை பார்த்து பின்பே இதில் முழு முனைப்பில் இறங்கினோம் என்கிறார்.

சந்தித்த சவாலும், வளர்ச்சியும்

2013 ஆம் ஆண்டு நாங்கள் தொடங்கிய போது டெலிவரி மூலம் மட்டுமே உணவு வழங்கும் முறை புதிது.  

"ஹோட்டல் மேனேஜ்மன்ட் பின்னணி இல்லாமால், புதுமையான அணுகுமுறையில் ஒரு உணவு நிறுவனத்தை நடத்துவது சவாலாக இருந்தது. எந்த டிஷ் வாங்க நினைக்கிறார்களோ, அதை சுவை பார்க்கக் கூடிய அனுபவத்தை அறிமுகப்படுத்தினோம். எங்களிடம் வேலை செய்பவர்களை இதில் உடன்படச்செய்வதே பெரிய சவாலாக இருந்தது," 

என்று ஆரம்ப கால சவால்களை விவரித்தார் சந்தோஷ். இதன் பிறகு ஸ்திரமான வளர்சியே கண்டுள்ளது கொலப்பசி நிறுவனம்.  2014 ஆம் ஆண்டு ஏஞ்சல் முதலீட்டு வாய்ப்பும் பெற்றது இந்நிறுவனம். மீண்டும் மீண்டும் கொலப்பசி நோக்கி வரும் எழுபது சதவிகித வாடிக்கையாளர்கள் கொண்ட இந்நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் 25 இடங்களில் தங்களது சேவையை வழங்கவுள்ளது. 

சமூக  நோக்கம்

சென்னை நகரத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், இவர்களை சமூக நலம் மீதும் பார்வையை செலுத்த தூண்டுதலாக அமைந்தது. அச்சமயத்தில் இவர்கள் ஆற்றிய பணி, திரட்டிய நிதி அனைவரும் அறிந்ததே. 

"வெள்ள நிவாரணம் வழங்கும் பொழுது பொன்னேரியில் சுகாதாரமான நீர் கிடைப்பதில் சிரமத்தை கண்டோம். திரட்டிய நிதி மிச்சமிருக்க, அதை கொண்டு பொன்னேரியில் இரண்டு தண்ணீர் சுத்திகரிப்பு வசதியை அமைத்துக் கொடுத்தோம்" என்று ஆதித்யா பகிர "தண்ணீர் ஒரு கமாடிட்டியாக விற்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை," என்கிறார் சந்தோஷ்.  

இந்த எண்ணமே ஒரு அழகிய கொலப்பசி பெயர் பதியப்பட்ட தண்ணீர் பாட்டில் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளது. எல்லா நிறுவனமும் தங்களின் ப்ராண்டை பிரபலப்படுத்த ஏதோவொரு யுக்தியை கையாளும். அதனுடன் கொஞ்சம் சமூக நலமும் சேர்ந்தால் கிடைக்கும் வரவேற்பை சொல்லவா வேண்டும்.  

ஒரு முறை கொலப்பசி பாட்டிலை வாங்கி விட்டால், அவர்களின் எந்த கிளையிலும் இதில் இலவசமாக தண்ணீரை நிரப்பிக்கொள்ளலாம். தண்ணீரை சேமியுங்கள் என்பதிலிருந்து தண்ணீரை ஷேர் செய்யுங்கள் என்ற இந்த அணுகுமுறை வித்தியாசமாகவே உள்ளது. இதைத் தவிர திருநங்கைகளையும் பணியில் அமர்த்தி தங்களின் சமூக பொறுப்பை காட்டியுள்ளனர்.

சர்வதேச விரிவாக்கம்

சென்னையை தவிர பிற நகரம், மாநிலத்திலிருந்தும்  கொலப்பசி கிளைகளை நிறுவ அழைப்புகள் வருவதுடன், பிற நாடுகளிலிருந்தும் கோரிக்கைகள் வருவதாக கூறுகிறார் சந்தோஷ். 

"எங்களின் மீதான இந்த நம்பிக்கை நெகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியுசிலாந்து, சிங்கப்பூர் என்று பல நாடுகளில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கான அணுகுமுறையை தற்போது வகுத்துக் கொண்டிருக்கிறோம். இதன் முதல் கட்டமாக ப்ராண்டை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துச் செல்ல துறை சார்ந்த வல்லுநர்களை நியமித்துள்ளதாக கூறுகிறார் சந்தோஷ்.

பணம் என்பது வளர்ச்சியில் கடைசி நிலை என்று கூறும் இவர்கள், ப்ராண்டை உருவாக்கி முன்னெடுத்து செல்லுதல், வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவையே பிரதானம் என்கிறார்கள். 

பெயர், வர்த்தக யுக்தி, வாடிக்கையாளர்களின் மனதிருப்தி  என்று எல்லா விதத்திலும் தேர்ந்த இந்த சென்னை தொழில்முனை நிறுவனம் அந்நிய மண்ணில் இந்திய உணவை பரிமாறும் நாள் மிக தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.