உடுமலைபேட்டையில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வரை - மணி குமாரின் கால்பந்து ஆர்வம்

0

கிராமத்து இளைஞனின் தன்னம்பிக்கைக் கதை!

"காலடியில் உள்ள கால்பந்து உங்கள் கவலைகளை மறக்கச் செய்யும்" - இது மணி குமாரின் வாட்ஸ் அப்பில் வைத்திருக்கும் ப்ரொஃபைல் வாசகம். மணியிடம் பேசும் எவருக்கும் கால்பந்து மீது அவருக்கிருக்கும் ஈடுபாடு புரியும். இதுவே அவரை ஆம்ஸ்டர்டாம் வரை கொண்டு சென்றுள்ளது.

தமிழ் யுவர்ஸ்டோரி அவரிடம் ப்ரேத்யேக தொலைபேசி உரையாடல் நடத்தியது.

பிறந்து வளர்ந்தது

உடுமலைபேட்டையிலிருந்து பதினேழு கிலோமீட்டரில் உள்ள ஜோதம்பட்டி என்ற ஊரில் தான் மணி வளர்ந்தார். கைத்தறி நெசவாளர்களின் மகனான மணி குமார், அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணியூரில் வெங்கடகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கு தான் கால்பந்து கனவு மணிக்கு கைக் கூடியது.

கால்பந்து ஆர்வம்

"கிரிக்கெட் விளையாட்டை விட கால்பந்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. பத்தாவது படிக்கும் போது தான் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பிதேன்" என்று கூறும் மணி "கோல்கீபர்" நிலையில் விளையாடுபவர்.

பதினோறாம் வகுப்பின் போது மண்டல அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று அவரின் பள்ளி அணி, கோப்பையை வென்றது. "எனக்குத் தேவையான உபகரணங்களை பி.டி. மாஸ்டர் முகில் அவர்கள் தான் வாங்க உதவினார்".

"நான் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போது தான் 'ஸ்லம் சாக்கர்' குழு எங்கள் ஊருக்கு வந்தனர். என்னுடைய பள்ளி பி.டி. மாஸ்டர் இந்த வாய்ப்பை பற்றிக் கூறினார். அவர் மூலமாக உடுமலைபேட்டை ஸ்லம் சாக்கர் பயிற்சியாளர் அருண் வேலுசாமி அவர்களை சந்திக்க நேரிட்டது. அருண் சார் எனக்கு வாய்ப்பு வழங்கி, எனக்கு இரண்டு மாதம் பயிற்சியும் அளித்தார்". 

என்று தனது கால்பந்து பயணம் பற்றி மணி விவரித்தார். பத்தொன்பது வயது கீழ் உள்ள பிரிவில் விளையாட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன்னம்பிக்கை வளர்ந்தது

தனது ஊரை விட்டு எங்குமே சென்றிராத மணி, மே 2014 இல் முதல் முறையாக 'ஸ்லம் சாக்கர் லீக்' விளையாட சென்னை வந்தார். "சென்னையில் இருந்த ஏழு நாட்களும் மிகுந்த பதட்டம் அச்சம் நிலவியது" என்று கூறும் மணி தனது பயிற்சியாளர் அருண் மிகுந்த தன்னம்பிக்கை கொடுத்ததாகவும் கூறுகிறார். "எனது விளையாட்டை மேம்படுத்த அருண் சார் நிறைய குறிப்புகள் சொல்லிக் கொடுத்தார். எங்கள் உடுமலைபேட்டை ஸ்லம் சாக்கர் அணி இரண்டாவது இடத்தை பெற்றது".

இது முடிந்த பின்னர் உடுமலைப்பேட்டை திரும்பிய மணிக்கு வரப்போகும் செய்தி இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. உலகக் கோப்பைக்கு இந்தியா சார்பில் பங்கு பெற பதினோரு சிறந்த வீரர்களில் ஒருவராக இடம் பெற்றார். செப்டம்பர் மாதம் நடந்த இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்லம் சாக்கர் மேற்கொண்டது.

நவம்பர் 2014 ஆம் ஆண்டு பதினைந்து நாட்கள் நாக்பூரில் இதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதுவே மணியின் முதல் வட இந்திய பயணம். "மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. என்னுடைய பயிற்சியாளர்கள் கைலாஷ் சார், ப்ரித்வி சார், தாமஸ் சார் ஆகியோர் உதவினர்."

இந்த அனுபவத்தை பற்றி மணி மேலும் கூறுகையில் 

"சர்வதேச பயிற்சியாளர் ஆன்டி ஹூக் எங்கள் அணிக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். இவர் ஸ்காட்லான்ட் நாட்டை சேர்ந்தவர். மிகவும் பொறுமையுடன் பல்வேறு நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். சக வீரர்களும் உதிவயாக இருந்தனர்".

வெளிநாடு செல்லும் முன்பாக மறுபடியும் நாக்பூரில் ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அங்குள்ள உணவு முறை, கலாச்சாரம், பழகும் முறை என பல்வேறு விஷயங்களை பற்றி சொல்லித் தரப்பட்டது.

குடும்பத்தினரின் ஆதரவு

மணியின் பெற்றோர்களுக்கு அவரின் விளையாட்டு ஆர்வத்தில் உடன்பாடில்லை. படிப்பின் மீது கவனம் செலுத்தவே அறிவுறுத்தினர். சென்னை செல்லும் வாய்ப்பு வந்த பொழுது அவர் வீட்டில் அனுமதிக்க மறுத்து விட்டனர். "என்னுடைய பீ.டி சார் மற்றும் பயிற்சியாளர் அருண் சார் வீட்டிற்கே வந்து என் பெற்றோரிடம் பேசினார், இந்த வாய்ப்பை பற்றியும் எதிர்காலம் பற்றியும் எடுத்து சொல்லி அனுமதி வாங்கிக் கொடுத்தார்". இப்போது எனது வெற்றியை காணும் அவர்கள் மிகுந்த சந்தோஷத்தை அடைங்கின்றனர்.

எதிர்காலம்

ஸ்பெயின் நாட்டின் கோல்கீப்பர் காசில்லாசை முன்மாதிரியாக நினைக்கும் மணி குமாருக்கு அவரின் தாவும் ஸ்டைலும் தன்னம்பிக்கையும் பிடிக்குமாம். போர்துகீஸ் வீரர் ரொனால்டோவின் ஸ்டைலும் வேகமும் பிடிக்கும் எனவும் கூறும் மணிக்கு, தான் நிறைய சர்வதேச விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. பயிற்சியாளராக உருவாகி திறமையான வீரர்களை முன்னுக்குக்கொண்டு வர வேண்டும் என்றும் எண்ணுகிறார்.

"ஸ்லம் சாக்கர் போன்ற அமைப்புகள் என்னை போன்ற வசதி குறைவான ஆர்வமுள்ள இளைஞர்களை கண்டெடுக்க பெரிதும் உதவுகிறது. அதேப் போல் ISL போன்ற போட்டிகள் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் மக்கள் மத்தியில் அதிகமாக்குகிறது." என்கிறார் மணி. இந்திய அளவில் கொல்கத்தா அணியும் சர்வதேச அளவில் போர்துகீஸ் அணியும் தனக்கு பிடித்தமான அணி என்கிறார்.

டிசம்பர் மாதம் நடக்கவுள்ள மாநிலங்கள் இடையேயான போட்டிக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

"வாழ்கை நிறையவே மாறியுள்ளது. வீணாக விளையாட்டில் நேரம் கடத்துவதாக கூறியவர்கள் எல்லாம் இப்பொழுது என்னை உற்சாகப் படுத்துகின்றனர். என்னுடைய பெற்றோரும் நிறைய பயிற்சி எடுக்க வலியுறுத்துகின்றனர். என்னுடைய தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது". 

என்று கூறும் மணியின் குரலில் சாதிக்கும் ஆர்வத்தை உணர முடிகின்றது.

வெற்றி பெற திடமான நம்பிக்கையும், அத்தோடு நாம் நம்புவதில் பேரார்வம் கொண்டு செயல்பட்டால் அதுவே சாத்தியமாகும் எனும் மேற்கோளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மணிகுமார் என்றால் அது மிகையல்ல .