பாரம்பரியமும், கவர்ச்சியும் இணைந்த ஓர் அற்புதக் கலவை 'ப்ரயோக்'

0

வணிகத் தளத்தில் இந்தியாவின் பெயரைச் சொல்லும் பிராண்ட் எதுவும் இல்லை என்ற பக்கத்தைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது 'ப்ரயோக்' எனும் யோகா ஆடை விற்பனை நிறுவனம்.

’அது 2001 ஆம் ஆண்டு. மான்ஹாட்டன் நகரத்துப் பரந்த வணிக வளாகத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். நைக்கி, ரீபோக், கொக்கோ கோலா, பெப்ஸி, பிஎம்டபிள்யூ, வோல்வோ போன்ற முத்திரை பெற்ற அமெரிக்க, ஐரோப்பிய வணிகப் பொருட்கள் என்னைக் கவர்ந்து ஈர்த்தன. ஜப்பானியப் பெயர்களான நிக்கான், கென்னான், டொயோட்டோ, ஹோண்டா, சோனி போன்றவற்றிற்கும் அங்கு குறைவில்லை. ஏன், கொரியன் பெயர்களாகிய ஹூண்டாய், சாம்சங், எல்ஜி, கியா போன்றவை கூட அங்கே றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. அவ்வளவாகப் பிரபலமடையாத ஃபிஜி தண்ணீர் அடுக்கில் இடம் பெற்றிருப்பதைச் சட்டென்று கவனித்தேன். அந்தப் பெயர் ஏனோ என் நெற்றிப் பொட்டில் ஆயிரம் பவுண்டு சம்மட்டியால் தாக்கியதைப் போன்ற அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது’’ என்கிறார் தேவா பேனர்ஜி. இவர் ப்ரயோக் நிறுவனத்தின் இணை அமைப்பாளர் மற்றும் வணிகத் தலைவராக இருக்கிறார்.

கவர்ச்சியும் புதிய சிந்தனையும்

தேவா, அடிப்படையில் ஓர் விளம்பரதாரர். வணிகப் பொருட்களின் பெயர்களை கவனித்துப் பார்ப்பது வழக்கம். இந்தியாவில் ஒரு விளம்பர நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்று அங்கு ஒரு விளம்பர முகமையைத் துவக்கினார். அடுத்த இன்னொன்றைத் துவக்கினார். ஒரு பொருளின் வணிகப் பெயரைக் கவனிப்பது, அதைப்பற்றியே பேசுவது, அதன் அடிப்படை மதிப்பு குறித்து ஆராய்வது என்பது அவரின் இரண்டாம் இயல்பாக இருந்தது. ஃபிஜி தண்ணீர் குறித்து அவர் அறிந்து கொண்ட கதை அவருள்ளேயே நிலைத்து விட்டது. தென் பசிபிக் கடலில் ஒரு புள்ளியாக இருக்கும் ஒரு நாடு அடைந்த பெயரை, ஏன் தனது இந்தியா அடைய முடியாது என்ற கேள்வி அவருள் முளை விட்டது. அப்படிக் கேள்வி எழுவது மிக இயல்பானதே. உலக அளவில் முதல் பெயரை உருவாக்க முயலும் குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பேன் என்று கருதியதாகக் கூறுகிறார் தேவா.

தேவா பானர்ஜி
தேவா பானர்ஜி

'ப்ரயோக்'கின் (Proyog) இணை அமைப்பாளரான மல்லிகா புரூவா லேவிஸ் இந்தியா பெயர் உருவாக்கத்தின் வடிவமைப்பு குழுவிற்குத் தலைமை ஏற்றிருந்தார். அவர் சில்லறை விற்பனை ஆடை வடிவமைப்பில் இருபதாண்டு கால அனுபவம் பெற்றவர். அவருக்கு 2001 இல் யோகா மீது நாட்டம் ஏற்பட்டது. இன்றும் தொடர்ந்து யோகா பயின்று வருகிறார். அவருக்குப் பயிற்சியளித்த பயிற்றுனர் அணிந்திருந்த உடை மல்லிகாவிற்கு அதிருப்தி அளித்தது. அது சில இடங்களில் அங்கங்களைத் துறுத்திக் காட்டும் அளவிற்கு இறுக்கமாகவும், கால்சட்டைக் கவர்ச்சியூட்டுவதாகவும், விளையாட்டு வீராங்கனைகள் அணிவதைப் போன்ற ட்ராக் சூட்டும், மேலுக்கு டி சர்ட்டும் அணிந்து சற்றும் அழகியல் அம்சம் இன்றி இருந்தார் யோகா பயிற்றுனர். உடலியல், மனவியல் ஆன்மீகப் பண்பைக் கற்றுத் தருகிற யோகா பயிற்றுனர் மிகவும் கண்ணியமான உடை அணிந்திருக்க வேண்டும் என்று கருதினார். "உலகின் தலைசிறந்த யோகா உடை ஒன்றை வடிவமைக்க வேண்டும். அது உலகின் மெய்யான யோகா உடையின் முத்திரையாக விளங்க வேண்டும் என்று விரும்பினோம். யோகா பயிற்றுனர்கள் செயற்கை இழை ஆடை அணிவது குறித்த எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவோம்’’ என்கிறார் மல்லிகா.

பாரம்பரியம்

வேத காலத்திற்கு முன்பிருந்தே யோகா இந்தியாவில் நிலைத்து வந்துள்ளது. ஆனால் அது எப்போது தோன்றியது என்பது யாராலும் குறிப்பிட்டுக் கூற முடிவதில்லை. அனுமானமாகவே இருந்து வருகிறது. உத்தேசமாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஒன்றாம் நூற்றாண்டிற்குள்ளாகத் தோன்றியிருக்கக் கூடும் என்று பல்வேறு விதமான ஆய்வுகள் கூறுவதைக் காண முடிகிறது. இருந்த போதிலும் அது 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் வெகு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. 1980 களில் யோகா மேற்குலகிலும் ஓர் உடற் பயிற்சி என்ற அளவில் பரலானது. இந்திய மரபில் யோகாவானது தியான, ஆன்மீக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பது. ஆன்மீக தியானத்திற்கு உடற் பயிற்சியும் அவசியமான கூறுகளாகும்.

இந்தியாவிற்கும் யோகாவிற்குமான தொடர்பு குறித்த சுருக்கமான இந்த வரலாறு, குறைந்தபட்சம் உடை அளவிலாவது அதனை மேலும் செழுமையாக்கும் பொறுப்பிற்கு ஒரு இந்திய நிறுவனம் தகுதி பெற்றுள்ளது. ப்ரயோக்கின் தொழில் நுணுக்கக் கையேட்டில் குறிப்பிடுவது என்னவென்றால் யோகாவின் பிறப்பிடம் இந்தியா என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உறுதியானது அதன் உடையை உலகம் அளிக்க முடியாது என்பது.

ஆடை தயாரிப்பு

ப்ரயோக் வணிகப் பெயருக்குச் சொந்தமான இகா யோகாவியர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், 2013 இல் நிறுவப் பெற்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. உலக யோகா தினமான ஜூன் 21. 2015 அன்று ப்ரயோக் யோகா வணிகப் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. தனிச் சிறப்பு வாய்ந்த யோகா உடையை வடிவமைத்து தயாரிப்பதை ப்ரயோக் தனது கடமையாகக் கொண்டுள்ளது.

தமது ஆடை தயாரிப்பு குறித்து தேவா கூறுகிறார் – "யோகாவின் போது அணியக் கூடிய செயற்கை இழை (பாலியெஸ்டர்) ஆடைகள் அனைத்தையும் புறந்தள்ளச் செய்யும் பணியில் மிகவும் தீவிரமாக இருப்போம் நாங்கள். யோகா செய்பவர்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடை பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். யோகாவின் போது இயற்கையான சுவாசத்திற்கு உதவிகரமான பருத்திப் பின்னல் உடையை அணிவதே யோகப் பயிற்சியின் பலனை அதிகரிக்கும்’’

Hyper breath” என்ற தனிச்சிறப்பு வாய்ந்த யோகாவிற்கு ஏற்ற பருத்தித் துணி வகையைக் கொண்டது ப்ரயோக். நெசவும் பின்னலும் இணைந்த காற்றுப் புகும் வண்ணம் உருவாக்கப்பட்ட இத்துணி வகை யோகப் பயிற்சிக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 100% பருத்தியில் உலகத் தரம் வாய்ந்த நூலிழை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். பயிற்சிக்கு ஏற்ற வகையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் 10 சதவீதம் ஸ்பன் கலந்த கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் உடலுடன் இழையும் பகுதி மட்டும் பருத்தி நெசவில் அமையும்படியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ப்ரயோக் பெண்களுக்கான யோகா ஆடைகளை மட்டுமே தயாரித்து வருகிறது. வேட்டி பாணியிலான கீழாடையும், கால் சட்டையும், மேலாடைக்கு காப்ரிஸ், டுனிக்ஸ் போன்ற வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகைகள் மிகவும் பிரபலமாக விற்பனையாகி வருகின்றன.

சந்தை வாய்ப்பும் போட்டியும்

அமெரிக்க சந்தையில் யோகா ஆடை விற்பனை 26 பில்லியன் அமெரிக்க டாலரை அடைந்துள்ளது. உலகச் சந்தையில் 80 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே உள்ளது. உண்மையைச் சொல்வதென்றால் சந்தையில் தீவிர அக்கறை காட்டுவோருக்கு வானமே எல்லை. "எங்கள் வருமானத்தில் 90 சதவீதத்தை இந்தியாவிற்கு வெளியில் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளோம். அது தவிர 70% வருமானம் எங்களுக்கு அமெரிக்கா கனடாவில் இருந்தே கிடைத்து விடும். அமெரிக்காவில் அதிகபட்சமான விற்பனை கலிபோர்னியா மற்றும் நியூயார்க்கிலும், இந்தியாவில் டெல்லி என்சிஆரிலும், பெங்களூரிலும் நடைபெறுகிறது’’ என்றார் தேவா.

நிதி மற்றும் வருமானத் திட்டம்

நிறுவனத்திற்குத் தேவையான நிதியாதாரம் நரேஷ் மல்கோத்ரா அவர்களாலும், VAMM ஐச் சேர்ந்த அஜய் மல்கோத்ராவாலும் அளிக்கப்பட்டுள்ளது. நரேஷ் முன்னதாக செகுய்வா கேபிடல், காபி டே ஆகியவற்றிற்கு நிதியளித்துள்ளார். கேபிஎம்ஜியில் பங்குதாரராக இருக்கிறார். அஜயும் முன்னர் கேபிஎம்ஜியைச் சேர்ந்தவர். அத்துடன் யுபிஎஸிற்குப் பணியாற்றியுள்ளார்.

உலக அளாவிய வணிக முத்திரை உருவாக்கத்தில் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெயரை பெறுவதைத் தங்கள் இலக்காக்கத் திட்டமிட்டுள்ளது இவர்களது நிறுவனம். நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலரை எட்டுவதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது இக்கம்பெனி. தற்பொழுது ப்ரயோக் வணிகப் பெயர் உலகின் மிகப் பெரிய யோகா சந்தையான வட அமெரிக்காவில் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்பொழுது ப்ரயோக்கின் வணிகப் பெயருக்கான மக்கள் தொடர்பாளராக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள எஸ்கேசி இருந்து வருகிறது.

ப்ரயோக் குழுவினர்

உலகத் தரமான பொருள் தயாரிப்பை உருவாக்கவும், உலக அளவிற்கான வணிகப் பெயரை உருவாக்கவும் இக்குழுவினருக்கு பெயராக்கத்திலும் (branding) சந்தைப்படுத்துவதிலும், விளம்பரப்படுத்தலிலும், தொடர்ப்பு உத்தியிலும் நிறைய அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் தலைமைக் குழுவினர் (இணை நிறுவனர்களும் ஆவர்) அதற்குரிய தகுதிக்குப் பொருத்தமான பின்னணியைப் பெற்றவர்கள் தான்.

தலைமை நிர்வாக அலுவலர் சஞ்சய் நாயக் கேஜிபியில் இந்தியத் தொழில்நுட்பவியலும், கல்கத்தாவில் இந்திய நிர்வாகவியலும் பயின்றவர். சந்தை, விற்பனை மற்றும் சந்தைத் தொடர்பு ஆகியவற்றில் 32 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். ப்ரயோக்கைத் துவக்குவதற்கு முன் மெக்கான் எனும் உலகக் குழுவின் இந்தியத் தலைவராக ஒன்பதாண்டுகள் இருந்தார்.

ஃபிஷ் ஐ கிரியேட்டிவ் தொடர்பு பெயராக்கல் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகவும், சந்தை தலைமைப் பொறுப்பிலும் இருந்தார் தேவா. பெயராக்கல் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சிஎன்என் தொலைக் காட்சியிலும் பொருளியல் வல்லுனராகத் தோன்றியுள்ளார். பல முன்னணி பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.

உற்பத்தித் தலைமைப் பொறுப்பேற்றுள்ள மல்லிகா புரூவா, பெங்களூரில் மின்னியல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சமூக ஊடகங்களிலும் இணைய உத்தியிலும் சிறப்புத் தகுதி பெற்றவர். சர்வதேச முத்திரை பெற்ற வணிக அமைப்புகளான கார்டின், லேவிஸ் போன்றவற்றில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.

ப்ரயோக்கின் வடிவமைப்புத் தலைவராக இருக்கிறார் பிரியங்கா ஐயங்கார். லேவிஸ் ஸ்ட்ராஸ் இந்தியாவின் பெண்கள் உடைப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்த இவர், என்ஐஎப்டியில் பட்டம் பெற்றவர். வடிவ அச்சுப் பதிப்பில் சோதனைகள் மேற்கொள்வதிலும் பின்னல் வேலைப்பாடுகளிலும் விருப்பார்வம் உடையவர்.

சந்தை வாய்ப்பு

தற்போது மின்னியல் வர்த்தகத்தில் தனது தயாரிப்பை விற்பனை செய்து வருகிறது. உலகெங்கும் உள்ளூர் சந்தையிலும் விற்று வருகிறது. பிற்காலத்தில் சிறப்பு முன்னணி வர்த்தக நிறுவனங்களிலும், உலகளாவிய யோகா அரங்கங்களிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவில் பெரும் சங்கிலித் தொடர் விற்பனை இணைப்புகள் உடைய நெய்மன் மார்கஸ், ஃபிப்த் அவென்யூ, நோர்ட்ஸ்டர்டாம் போன்றவற்றுடனும் விற்பனை செய்ய இருக்கிறது.

விளம்பரம் மற்றும் பெயராக்கல் அனுபவப் பின்னணியை ப்ரயோகிற்கு அளித்துள்ள சஞ்சயும் தேவாவும் தங்களது உற்பத்திப் பொருளை விளம்பரப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். உலகின் ஆகச் சிறந்த மாடல்களையும் புகைப்பட திறனாளர்களையும் விளம்பரத்திற்குப் பயன்படுத்த உள்ளனர்.

திரைப்படம்

'ஃப்ரம் த பெர்த் பிளேஸ் ஆப் யோகா' என்ற திரைப்படத்தைத் தயாரித்து மின்னிய வர்த்தகத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இப்படம் இந்தியாவில் 26 இடங்களில் 50 நாட்களாகப் படம் பிடிக்கப்பட்டது. இப்படத்திற்கு கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ் இசையமைத்துள்ளார்.

வளர்ச்சிப் பாதையில்

நிறுவனம் ஆடை தயாரிப்பிற்கும் சந்தைப்படுத்தலுக்கும் பெருமளவு நிதி முதலீட்டை எதிர்நோக்குகிறது. இதில் பெரும்பகுதி வட அமெரிக்க நேரடி விற்பனைக்காகச் செலவிடப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் அதன் விற்பனையை 15 இல் இருந்து 20 மில்லியன் டாலருக்கு உயர்த்த உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் என்ஐஎஸ்இ பட்டியலில் இடம் பிடிக்கத் திட்டமிடுகிறது. இந்த இலக்கு மிகவும் துரிதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான். ஆனால் வானத்தை இலக்காக வைத்தால் தான் மேகத்தையாவது எட்ட முடியும்.

அதன் உலகச் சந்தை மற்றும் பெயராக்கம் குறித்துக் கேட்டபோது தேவா எந்தத் தயக்கமும் இன்றி சர்வசாதாரணமாகக் கூறினார் "டாலருக்கு உள்ள ரூபாய் மதிப்பு பற்றியது தான் எங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் அவர்களைக் காட்டிலும் 60 மடங்கு திறனை உயர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும்".

ஆங்கிலத்தில்: சௌமித்ரா கே சாட்டர்ஜி| தமிழில்: போப்பு