திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ.140 கோடி இழப்பு: இனிப்பான திருப்பதி லட்டு இனி இலவசமாக கிடைக்குமா?

1

உலகின் பெரும் பணக்கார கோவிலாக கருதப்படும் திருமலை திருப்பதியை நிர்வகிக்கும் தேவஸ்தானம், கடந்த மூன்று ஆண்டுகளாக 140 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறைந்த விலை மற்றும் இலவசமாக தங்களது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருவதால் கோவிலுக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

திருமலை திருப்பதியின் சிறப்பே அதன் உருண்டை வடிவிலான ருசிகர லட்டு பிரசாதம் தான். திருப்பதிக்கு செல்லும் தமக்கு தெரிந்தவர்கள் லட்டு பிரசாதம் தருவார்களா என்று ஏங்கும் அளவிற்கு அதற்கான வரவேற்பு பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. இந்த அதிசுவையான லட்டு ஒன்றின் விலை ரூ.25-க்கு கடந்த 11 ஆண்டுகளாக விற்கப்படுகிறது. ஆனால் ஒரு லட்டுவை செய்வதற்கான உற்பத்தி விலை ரூ.32.50-ஆக கணக்கிடப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்திகள் கூறுகிறது. 

திருமலைக்கு அருகில் உள்ள ஒரு  மிகப்பெரிய சமையற்கூடத்தில் செய்யப்படும் இந்த லட்டுகளுக்கு பக்தர்கள் இடையே குறைவில்லாத தேவை இருந்து கொண்டே இருக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் அனைவரும் அந்த லட்டுக்களை வாங்காமல் செல்வதில்லை. 

2016-ம் ஆண்டு, சுமார் 10 கோடி லட்டுக்கள் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாக பிடிஐ கூறுகிறது. குறைந்த விலையில் லட்டு விற்கப்படுவது தவிர, பல மணி நேரம் வரிசையில் நின்று இலவச சேவையில் வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 23 கோடி ரூபாய் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதே போல், 11 கிமி தூரம் மலையடிவாரத்தில் இருந்து மேல் வரை படிகளை ஏறி வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு அளிப்பது 22.7 கோடி ரூபாய் நஷ்டத்தை ஆண்டுதோரும் ஏற்படுத்துவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையான கால்களால் திருமலைக்கு நடந்து வந்து தரிசனம் செய்யும் முறையை பக்தர்களிடையே ஊக்குவிக்கவே இந்த திட்டம் அக்டோபர் 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் ஓர் ஆண்டிற்கு 70 லட்சம் பக்தர்கள் வரை திருமலை திருப்பதிக்கு நடந்து மலை ஏறிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

300 ரூபாய் டிக்கெட், 500 ரூபாய் விஐபி தரிசனம் டிக்கெட் வாங்கி வரும் சுமார் 70 லட்சம் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தகைய நஷ்டத்தை லட்டுகள் விற்பனை ஏற்படுத்தினாலும், அதன் விலையை அதிகரிக்கப் போவதில்லை என்று டிடிடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். லட்டுகளால் ஏற்படும் நஷ்டத்தினை ஈடுகட்ட, டிக்கெட் கொண்டு தரிசனம் செய்வோருக்கு வழங்கப்படும் இலவச லட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த 2000 ஆண்டு பழமை வாய்ந்த திருமலை திருப்பதியில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னரே லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகமானது. அதற்கு முன்னர் காலத்தில், அதிரசம் இனிப்பு தான் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில், திருப்பதியை நிர்வகித்த விச்சாரன கர்தா’க்கள் முதன்முதலில் லட்டு பிரசாதத்தை அறிமுகப்படுத்தி, அது இன்றுவரை பிரசித்துப் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: Think Change India