’தொழில்முனைவுக்கு புற்றுநோய் தடை அல்ல’- நிதீஷ் மற்றும் டிம்பிளின் கதை...

0

ஒன்றாக ஐஐஎம்-ல் படித்து பட்டம் பெற்று வாழ்வில் இணைந்த நிதீஷ் மற்றும் டிம்பில் தற்போது அவர்கள் தொழில்முனையும் கனவிற்கு ஒரு சிறு இடைவேளை கொடுத்துள்ளனர். காரணம் நிதீஷ்-ன் புற்றுநோய்.

ஐஐடி கான்பூர் (2012) மற்றும் ஐஐஎம் கொல்கத்தா (2017) என பலரும் கனவு காணும் இடங்களில் படித்த நிதீஷின் கனவு, இந்திய உணவுகளை உங்களது இல்லங்களுக்கு ’அப்பெட்டி’ Appeti மூலம் கொணர்தல். 

தனது மனைவி டிம்பிளோடு இணைந்து புதிய ஒரு வாழ்க்கையை தனது எம்பிஏ படிப்பை முடித்து விட்டு துவங்க இருந்தார் நிதீஷ். கல்லூரி மூலமாக டேவலப்மெண்ட் பேங்க் ஆப் சிங்கப்பூரில் கிடைத்த வேலையில் சேர இருந்தார் அவர். அவரது மனைவி அவர்களின் தொழில்முனைவை கவனிப்பதாக முடிவு. ஆனால் அவர்கள் கனவுக்கு ஒரு பெரும் இடியாய் வந்தது புற்றுநோய் வடிவில். 

புற்றுநோயின் மூன்றாவது நிலையில் இருந்தார் நீதீஸ் 2016-ல். அவரது நுரையீரல், வயிற்று பகுதி, இடுப்பு என புற்றுநோய் பரவி இருந்தது. தற்போது இதனை வென்று மீண்டும் தனது வாழ்விற்கு திரும்பும் எண்ணத்தில் அமெரிக்காவில் உள்ள எம்டீ ஆண்டர்சன் கான்சர் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தடைகளை தகர்க்கும் தொழில்முனையும் வேட்கை :

ஐஐஎம் கொல்கத்தாவில் முதல் வருடம் முடிந்த நிலையில் டிம்பிள் தனது கணவர் நிதீஷிடம் சில மாறுதல்களை கண்டுள்ளார். மிகவும் சோர்வாகவும், சில நேரங்களில் வயிறில் வலியும் அவருக்கு இருந்துள்ளது. ஆனால் படிப்பு மற்றும், தங்களை தொழில்முனைவை ஒரே நேரத்தில் கவனிப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக இவை இருக்கலாம் என இருவரும் அதனை கவனிக்கவில்லை.

அதன் பின் நிதீஷ் தனியாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ கிளினிக் சென்றார்.

“அந்த செய்தியை முதல் முறையாக தனந்தனியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் கல்லூரிக்கு வந்து என்னிடம் கூறிய போது எனக்கு அழக்கூட இயலாத அளவு அதிர்ச்சி ஏற்பட்டது,” என்கிறார் டிம்பிள்.

அவரது நிலைமை மோசமாக இருந்தாலும், அதனை ஒரு தடையாக நிதீஷ் கருதவில்லை.  தொழில்முனைதலில் இது போன்ற பல தடைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. தற்போது குணமடைவதே எங்கள் நோக்கமாகும். இதனை புதிய தொழில்முனைவாக கருதலாம். இதற்கு எங்களுக்கு முதலீட்டாளர்கள்(மருத்துவர்கள்) உள்ளனர். வழிகாட்டிகள் (மற்ற நோயாளிகள்) உள்ளனர், தேவையான மூலபொருட்கள் (மருந்துகள், நம்பிக்கை அளிக்கும் காணொளிகள்) உள்ளன. ஒவ்வொரு மாதமும் எங்கள் நிறுவனத்தில் வளர்ச்சி அறிக்கை குறித்த விவாதம் நிகழும் (உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்பு) என்கிறார் நிதீஷ்.

இதுவரை : 

முதன் முதலாக அளிக்கப்பட்ட இரசாயன சிகிச்சை நிதீஷ் உடலில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அவரால் வகுப்பிற்கு நடந்து செல்ல இயலவில்லை. அதிக நேரம் அமர இயலவில்லை. பாடங்கள் குறித்து தன்னோட வகுப்பில் படிக்கும் எவரோடும் அவரால் விவாதிக்க முடியவில்லை. மேலும் அவரது உடல் நலனிற்காக மற்றவகளிடமிருந்து தனித்து இருக்கும் நிலை உண்டானது. அடுத்ததாக நிதிநிலைமை மோசமடைந்தது. தங்களது படிப்பிற்காக நிதீஷ் மற்றும் டிம்பிள் 40 லட்சம் ருபாய் கடனாக வாங்கியிருந்தனர்.

 “தொழில்முனையும் போது இருந்த பணத்தை நாங்கள் முதலீடாக பயன்படுத்திவிட்டோம். எனவே புற்றுநோய் தாக்கிய பொழுது சிகிச்சைக்கு எங்களிடம் பணம் இல்லை,” என்கிறார் டிம்பிள்.

கல்லூரியில் உள்ள வேலைகளை முடித்தல், கீமோதெரப்பி பெறுதல், கல்லூரி மூலம் வேலை கிடைப்பதற்கு தயாராதல், தனது தொழில்முனைவை கவனித்தல் என ஒரு நோயாளியாக முடங்கிக் கிடக்க மறுத்து நிலைமையை எதிர்த்து போராடி வருகிறார் நிதீஷ். கீமோதெரபி முடிந்து இரண்டு நாட்கள் மட்டும் வகுப்பிற்கு விடுமுறை எடுத்துக்கொள்வார். காரணம் சிகிச்சை கொடுக்கும் சோர்வு.

12 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர், நிலைமை முன்னேறியதாக இந்த தம்பதியினர் நம்பினர். ஆனால், மருத்துவர்கள் புற்றுநோய் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதாக கூறியுள்ளனர்.

“அந்த நிலையை விவரிக்க இயலாது. படிப்பு ஒரு பக்கம், தொழில் முனைவு ஒரு பக்கம், நிதீஷ் சிகிச்சை ஒரு பக்கம் என அனைத்தையும் சமாளித்து வந்தேன். சில நேரங்களில் அவரால் இயன்ற பொழுது நிதீஷ் நிறுவனத்தைக் கவனித்து வந்தார். ஆனால் எங்களது விற்பனை சரிந்தது,” என நினைவு கூறுகிறார் டிம்பிள். 

வாடிக்கையாளர்கள் தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. மேலும் வேலையாட்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க இயலவில்லை. எனவே சில காலம் தங்களது நிறுவனத்தை நிறுத்தி வைக்க முடிவுசெய்தனர்.

“நீங்கள் உருவாக்கிய ஒன்றை விட்டுச்செல்வது சாதாரண காரியம் அல்ல. உங்களது நேரம், உங்களது ஆற்றல், உங்களது பணம் அனைத்தையும் செலவழித்து உருவாக்கிய ஒன்றை, உங்கள் குடும்பத்தோடு நீங்கள் அதன் காரணமாக சண்டையிட்ட ஒன்றை, இழக்கவேண்டிய சூழல் வந்தது. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களுக்கு முதலில் குணமடைய வேண்டும் என்பதே உடனடித் தேவையாக இருந்தது,” என்கிறார் டிம்பிள்.

நிதீஷின் மனஉறுதி :

தனது நிலையை நடைமுறைக்கு ஏற்ப அணுகினர் நிதீஷ். ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு தீர்வு உண்டு என்பதை மனதில் கொண்டு, ஒரு தொழில்முனைவன் போன்று, தனது தேவைகளை, நோக்கங்களை தொகுத்தார். எக்ஸ்செல் கொண்டு தனது நிதி நிலைமை, கல்லூரிக்குத் தேவையானவை, சிகிச்சைக்கான வழிகள் மற்றும் உணவுத்திட்டம் ஆகியவற்றை பட்டியலிட்டார்.

குடும்பத்தில் மூத்த சகோதரனாக இருந்ததால் தற்போது தனது பெற்றோரை கவனிக்கும் பொறுப்பும் நிதீஷுக்கு உள்ளது. இருவரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள். தனது தம்பியை கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய கடமையும் உள்ளது. புற்றுநோய் இருப்பது தெரிந்த உடன் தான் நிதீஷ் மற்றும் டிம்பிள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். 

“நிலைமையை சேர்ந்து எதிர்கொள்ள நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அவரை குணமாக்குவேன் என உறுதி பூண்டுள்ளேன்,” என்கிறார் டிம்பிள்.

இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் கைவிட்டாலும், அமெரிக்காவில் எம்டீ ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உடன்பட்டு அதன் மூலம் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். சிகிச்சையின் செலவு காரணமாக, க்ரவ்ட் பண்டிங் மூலம் நிதிதிரட்ட முடிவெடுத்து, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

நிதீஷின் சிகிச்சை வெற்றி பெற்று, விரைவில் அவர் குணமடைந்து, மீண்டும் தங்களது வாழ்க்கைக்கு அவரும் அவருக்காக போராடி வரும் டிம்பளும் திரும்ப நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ருதி கேடியா