தசைச் சிதைவு நோய் பாதித்த நைத்ரோவன், மின் வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கிய தன்னம்பிக்கை கதை!

1
”நீ அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்தால் ஆய்விற்காக அடிக்கடி லேப்புக்கு செல்ல வேண்டியிருக்கும். இங்கும் அங்கும் அலைவது உனக்கு கடினமாக இருக்கும். அதனால் நீ வணிகவியல் பிரிவையே எடுத்துக்கொள்...”,

என்று நைத்ரோவனின் உயர்நிலை பள்ளி ஆசிரியர் அவருக்கு அறிவுரைத்தார். ஆட்டோமொபைல் என்ஜினியராக வேண்டும் என்கிற தனது கனவை மனதுக்குள் புதைத்துக்கொண்டு ஆசிரியரின் வார்த்தைகளை மதித்து வணிகவியல் பிரிவில் சேர்ந்தார் அவர். பட்டப்படிப்பை முடித்து பின்னர் எம்பிஏ’வும் முடித்தார். 

நைத்ரோவன்- அவர் தயாரித்த வாகனத்துடன்
நைத்ரோவன்- அவர் தயாரித்த வாகனத்துடன்

மரபணு சார்ந்த பிறவிக் குறைபாடான தசைச் சிதைவு (Muscular Dystrophy) நோயால் பாதிக்கப்பட்ட நைத்ரோவனின் வாழ்க்கை பெரும் போராட்டங்கள் நிறைந்தவையாகவே இருந்தது. அவரது தந்தைக்கு இருந்த இதே குறைபாடு அவருக்கும் வந்திருப்பது தெரிந்ததும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் துணிந்து எதிர்கொள்ள முடிவெடுத்தார் நைத்ரோவன்.

“சிறுவயது முதலே நடப்பதில் தடுமாற்றமும், சிரமமும் இருந்தாலும் எல்லாரையும் போல நடக்கவே நான் விரும்பினேன். சக்கர நாற்காலியை பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் கீழே விழுந்ததால், சக்கர நாற்காலியைச் சார்ந்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்றார்.

தசைச் சிதைவு நோய் என்பது தசை நோய் வகையைச் சார்ந்தது. இந்த நோய் தாக்கத்தால் எலும்புத் தசைகள் அதிக வலுவிழந்து செயல்பாடற்று போகும் அபாயம் உள்ளது. நைத்ரோவனின் தந்தைக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையையே இந்த நோய் தாக்கும் என்றனர் மருத்துவர்கள். ஆனால் விதி அதன் வலிமையை காட்டியது. நைத்ரோவன் வளர வளர இந்த நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன.

இந்த நோய் குறித்து குடும்பத்தினர் நன்கு அறிந்ததால் உடனடியாக மருத்துவ உதவியை நாடினார்கள். ஆரம்பக் கட்டத்தில் நைத்ரோவனால் மிகுந்த சிரமத்துடன்தான் நடக்கமுடிந்தது. பள்ளியில் எப்படியோ சமாளித்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல உடலின் ஸ்திரதன்மை மேலும் மோசமடையும் என்பதை நன்கறிந்து அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

”ஒவ்வொரு ஆண்டும் நோயின் தாக்கம் அதிகரித்ததாலும் நிலைமையை எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக்கொண்டேன். முப்பது வயதாகும் போது சக்கர நாற்காலியின் துணை தேவைப்படும் என்று நினைத்திருந்தேன். ஆனால் 2010-ல் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததால் கணுக்கால் முறிவு ஏற்பட்டது. என் நிலைமை மேலும் மோசமானது.”

முறிவை சீர்செய்ய அறுவை சிகிச்சை செய்யலாம், ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவும் வாய்ப்புள்ளதால் அதை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்போதுதான் அவரது வாழ்க்கை இனி சக்கர நாற்காலியோடுதான் என்கிற நிலைமை உருவானது. 

”ஆனால் நான் சக்கர நாற்காலியுடன் தற்போது பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் என்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னால் கீழே விழுந்துவிடுவேனோ என்கிற பயம் இருக்கும். எதையாவது பற்றிக்கொண்டோ அல்லது யாருடைய உதவியாவது கிடைத்தால் மட்டுமே நடக்கமுடியும் என்று பயந்தேன். இப்போது நான் தனியாகவே பல வேலைகளை செய்யமுடிகிறது. ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நகர முடிகிறது.” என்றார் நைத்ரோவன்.

இந்த நேரத்தில்தான் பொறியாளரான அவரது தந்தை அவர் பயன்படுத்த ஒரு சிறிய ஸ்கூட்டரை வடிவமைத்துக் கொடுத்தார். ஏன் இந்த சிறிய அளவிலான ஸ்கூட்டரையே மேம்படுத்தி சாலையில் செல்லும் வகையில் ஒரு வாகனமாக வடிவமைக்கக் கூடாது என்று யோசித்தார் நைத்ரோவன்.

”சிறு வயதிலிருந்தே ஆட்டோமொபைல் துறையில் எனக்கு அதீத ஆர்வம் இருந்ததால் அந்தத் துறையில் நுழைவதற்கு இதுதான் பொன்னான வாய்ப்பு என்று நினைத்தேன்.” 

எம்பிஏ முடித்ததும் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிய விரும்பினார். மூன்று வருட நீண்ட காத்திருப்பிற்குப் பின்னும் பெரும்பாலான நிறுவனங்கள் அவரது குறைபாட்டை காரணம் காட்டி நைத்ரோவனை நிராகரித்தனர்.

”அந்நிறுவனங்கள் வேலை தராமல் என்னை நிராகரித்ததும் நல்லது என்றே எண்ணுகிறேன். ஏனெனில் அந்த நிராகரிப்புதான் என்னுடைய இந்த கனவை நோக்கி பயணிக்க வழிகாட்டியுள்ளது.”
நப்பின்னை குழு
நப்பின்னை குழு

தொழில்முனைவிற்கான நுழைவுச்சீட்டு

ஸ்டார்ட்-அப்’கான சந்தை குறித்து ஆராயத்தொடங்கினார். இரண்டு வருடங்கள் பகுதி நேர பணியாளராக, ஹோட்டல்கள், மருத்துவமனைகள், இ-காமர்ஸ், உற்பத்தி நிறுவனங்கள் போன்ற சின்ன நிறுவனங்களுக்கு ERP டெவலப் செய்வது, நிறுவனங்களுக்கான செயல்பாட்டு முறையை திட்டமிடுவது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. தனது தொழில்முனைவு திட்டங்களை மேலும் யதார்த்தமாக அமைத்துக்கொள்ள இந்த புரிதல் அவருக்கு உதவியது.

நானும் என்னுடைய தந்தையும் சேர்ந்து எங்களது ’பர்சனல் மொபிலிட்டி’ ஸ்கூட்டரை வடிவமைத்தோம். எம்பிஏ பட்டதாரியாக இருந்ததால் இந்த ப்ராஜெக்டை தொழிலாக எடுத்துக்கொண்டு ஒரு நிறுவனம் தொடங்க எனது குடும்பத்தினர் ஊக்குவித்தனர். தயாரிப்பு குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு முன்மாதிரியைக் குறித்த மக்களின் கருத்துகளைக் கொண்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு வெவ்வேறு விதமான முன்மாதிரிகளை உருவாக்கினோம் என்றார்.

”அப்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு ஆக்சிலரேடர் ப்ரோக்ராமுக்கு விண்ணப்பித்ததில் அவர்களுக்கு என்னுடைய முன்மாதிரி பிடித்திருந்தது. ஆனால் ஏதோ காரணத்திற்காக என்னுடைய திட்டத்தை நிராகரித்தனர். அப்போதுதான் என்னுடைய முன்மாதிரியை நானே செயல்படுத்த தீர்மானித்து என்னுடைய சொந்த நிறுவனத்தை தொடங்கினேன்.”

தமிழக அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் (PMEGP) விதை நிதியாக கிடைத்த 10 லட்ச ரூபாயுடன் நைத்ரோவன் இந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் ‘நப்பின்னை’ Nappinai என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 

”என்னுடைய நோக்கத்தை நன்கு உணர்ந்து செயல்படும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். தற்பொழுது அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் நைத்ரோவன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து இரண்டாவது சுற்று நிதித் தொகையாக பதினோரு லட்ச ரூபாயை திரட்டி நிறுவனத்தை நடத்திவருகிறார்.

தேவையின் பொருட்டு உருவான ’நப்பின்னை’ நுகர்வோர் சார்ந்த வணிகமாக மாறியுள்ளது. வாகனத் துறைக்குள் நுழைந்து மின் வாகன தயாரிப்புகளை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். போக்குவரத்துத் துறையிலும் பச்சைப் புரட்சி தொடங்கியுள்ளது. அலை கடக்கும்போது அத்துடன் சிரமமின்றி நகர்ந்து செல்வதுபோலல்லாமல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அலையை உருவாக்க திட்டமிடுகிறோம்.

சென்னையில் தயாரிக்கப்படும் இ-ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். Scotra CML என்ற எங்களது தயாரிப்பு மூலமாக அந்த நோக்கத்தை நிறைவேற்றியதும் வேறு சில தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தத் தயார் நிலையில் உள்ளதாக கூறினார் நைத்ரோவன். 

நமது நாட்டில் சுய போக்குவரத்து சந்தை செயலற்றதாகவே உள்ளது. இதற்கு நம் சாலையின் அடிப்படை வசதிகள்தான் காரணம். இதற்கான தீர்வை நாங்கள் உருவாக்கினோம். நமது சாலைகளின் தன்மைக்கேற்றவாறு Scotra CML வடிவமைக்கப்பட்டுள்ளதால் எளிதாக இதை குழந்தைகள் முதல் முதியோர் வரை இயக்கமுடியும்.

”Scotra CML என்பது குறைவான தூரம் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட மின் வாகனம். 25,000 ரூபாய் முதல் 69,500 ரூபாய் வரை அதிலுள்ள வசதிகளுக்கு ஏற்ப இது விற்கப்படுகிறது. சுய போக்குவரத்து சந்தையில் இது மிகவும் மலிவான விலையாகும்.”

Scotra CML முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு வாகனம். நமது நாட்டில் கிடைக்காத 20% மூலப்பொருட்கள் தவிர இதை முற்றிலும் இந்திய தயாரிப்பாக்கியுள்ளனர். இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வளங்களின் மூலம் இந்த 20 சதவீதத்தையும் பெற எங்களது ஆராய்ச்சி குழு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மற்ற பொருட்களை சென்னையிலே வாங்கப்படுவதாகக் கூறினார். 

”தற்போது உற்பத்திக்கு தயார்நிலையில் உள்ளோம். வரிசையாக ஆர்டர்கள் வந்துள்ளது. எங்களது நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. நான் சந்தித்த பெரும்பாலான விசி’க்களும், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்னுடைய உடல் குறைபாடு காரணமாக எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்,” என்றார் வருத்தத்தோடு.

ஊக்கமும் தன்னம்பிக்கையும்

தற்போது ‘நப்பின்னை’யில் 15 முழு நேர ஊழியர்கள் உள்ளனர். மேற்கொண்டு உதவுவதற்கு பயிற்சியாளர்களும் ஆலோசகர்களும் தேவைப்படும்போது இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது உற்பத்தி திட்டங்களை வேகமாக செயல்படுத்தவும் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் விநியோகிக்கவும் தற்போது பங்கு நிதியை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக நைத்ரோவன் கூறினார்.

நிக் உஜிசிக் என்ற மாற்றுத்திறனாளியே தனது வாழ்க்கைக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தொழில்முனைவில் மாற்றுத்திறனாளிகள் இன்னும் பெரிய உயரத்தை எட்டவில்லை எனவும் தெரிவித்தார் நைத்ரோவன். சமூக நலன் கருதி அனைத்து வகையான குறைபாடுகள் உள்ளவர்களும் பயன்படுத்தும் விதமான கார் ஒன்றை டிசைன் செய்து உருவாக்குவதே தனது கனவு மற்றும் லட்சியம் என்றார். இந்த இளம் தொழில்முனைவோர் விடைபெறுவதற்கு முன்,

”இந்த உலகில் மாற்றுத்திறனாளிகள் ஒரு அலுவலக பணியில் சேர்ந்து எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளவே ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் நான் எனக்கு அதிக விருப்பமான ஒன்றை பின்பற்ற முடிவெடுத்தேன். எனக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்யவில்லை. மக்களின் மனதில்தான் வரையறைகளே தவிர உடலில் இல்லை என்பதை நிரூபிக்கத்தான்...” 

Scotra CML Demo
Scotra CML Demo

வலைதள முகவரி: Nappinnai