பிரதமர் மோடியின் 'ஸ்டார்ட் அப் இந்தியா' செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

0

இந்தியாவின் 69 வது சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் பற்றி அறிவித்தார். ஐந்து மாதங்கள் கழித்து ஜனவரி 16 ம் தேதி பிரதமர் ஸ்டார்ட் அப்களுக்கான செயல்திட்டத்தை அறிவித்திருக்கிறார். அவரது உரை ஊக்கத்துடன் நகைச்சுவைத் ததும்ப அமைந்திருந்தது. “யாராவது என்ன வித்தியாசம் என்று கேட்டால், அரசு சனிக்கிழமை அன்று செயல்படுவது, அதிலும் மாலை ஆறு மணிக்கு மேல் செயல்படுவது தான் வித்தியாசம் என்பேன்” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிட்டார். மற்றொரு இடத்தில், "ரித்தேஷ் அகர்வால் ( ஓயோ நிறுவனர்) பேசுவதை கேட்கும் போது, என்னைப்போன்ற டீ விற்றவர் எப்படி ஹோட்டல் சங்கிலித்தொடரை அமைப்பது பற்றி நினைக்கவில்லை என தோன்றியது” எனக் குறிப்பிட்டார்.

உற்சாகமும், துடிப்பும் நிறைந்திருந்த விக்யான் பவன் அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான செயல்திட்டத்தை அறிவித்தார். அதன் முக்கிய அம்சங்கள்;

1. சுய சான்றிதழ் அடிப்படையில் அனுமதி: கட்டுப்பாட்டு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதை சுய சான்றிதழ் மூலம் தெரிவிக்க அனுமதிக்கப்படும். தொழிலாளர் சட்டங்களைப்பொருத்தவரை முதல் 3 ஆண்டுகளுக்கு எந்த பரிசோதனையும் இருக்காது. சுற்றுச்சூழல் சட்டங்களைப்பொருத்த வரை வென்மை பிரிவில் உள்ள ஸ்டார்ட் அப்கள் சுயச் சான்றிதழ் வழங்கலாம்.

2. ஸ்டார்ட் அப் இந்தியா ஹப்: தொடர்பு மற்றும் உதவிக்கான ஒற்றை முனையமாக இருக்கும்.

3. எளிய நடைமுறை: ஏப்ரலில் அறிமுகம் செய்யப்படும் மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலம் எளிய படிவத்தை பூர்த்து செய்து ஸ்டார்ட் அப் நிறுவனம் அமைக்கலாம்.

4.சொத்துரிமை பாதுகாப்பு: சொத்துரிமை (patent) பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆகியவை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும் என்று மோடி கூறினார். அறிவுசார் சொத்துரிமை வழிமுறைகளை அரசு வெளிப்படையானதாக ஆக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் அறிவு சார் சொத்துரிமையின் மதிப்பை ஆரம்பத்திலேயே உணரும் வகையில் விண்ணபங்கள் விரைவாக பரிசீலிக்கப்படும். ஸ்டார்ட் அப்களின் விண்ணப்பங்கள் வேகமாக கவனிக்கப்படும்.

5. சட்ட உதவிக்கான குழு: சொத்துரிமை விண்ணப்பத் தாக்கம், பைசல், காப்புரிமை, சொத்துரிமை, வடிவமைப்புத் தொடர்பான விண்ணப்பங்களை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்வது ஆகியவற்றில் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டிகள் உதவுவார்கள். ஸ்டார்ட் அப்கள் தாக்கல் செய்யும் விண்ணப்பங்களை சரிபார்க்க வழிகாட்டிகளுக்கான செலவை அரசு ஏற்கும்.

6. ஸ்டார்ட் அப் சொத்துரிமை விண்ணப்பங்களுக்கு 80 சதவீத சலுகை: ஆரம்பக் கட்டத்தில் ஸ்டார்ட் அப்களுக்கான நிறுவனச் செலவைக் குறைக்க சொத்துரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய 80 சதவீத சலுகை அளிக்கப்படும்.

7. ஸ்டார்ட் அப்களுக்கான சொத்து கொள்முதல் விதிமுறைகள் தளர்வு: பொது கொள்முதலில் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு நிகரான வாய்ப்பை புதிய ஸ்டார்ட் அப்களுக்கு உறுதி செய்ய உற்பத்தி துறை ஸ்டார்ட் அப்களுக்கு தரம் மற்றும் தொழில்நுட்ப காரணிகளில் எந்த தளர்வும் இல்லாமல் முந்தைய அனுபவம் அல்லது விற்றுமுதல் ஷரத்தில் தளர்வு செய்யப்படும்.

8. வேகமான வெளியேற்றம்: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேகமாக வெளியேற உதவும் வகையில் நிறுவனங்களை மூடுவதை விரைவாக மேற்கொள்வதற்கான அம்சம் 'தி இன்சால்வன்சி அண்ட் பாங்க்ரப்சி பில்' 2015 ல் சேர்க்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் தாக்கல் செய்த 90 நாட்களில் எளிமையான கடன் அமைப்பு உள்ள ஸ்டார்ட் அப்கள் மூடப்படலாம்.

9. ரூ.10,000 கோடி நிதி: புதுமை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அரசு ரூ2,500 கோடி ஆரம்ப நிதியை உருவாக்கும். 4 ஆண்டுகளில் இது ரூ.10,000 கோடியாக அதிகரிக்கும்.

10. கடன் உறுதி நிதி: அனைத்துத் தரப்பினருக்கும் கடன் உதவி மூலம் தொழில்முனைவை ஊக்குவிக்க தேசிய கடன் உறுதி அறக்கட்டளை நிறுவனம்/சிட்பி மூலம் கடன் உறுதி வழிமுறை அமல் செய்யப்படும். 5 ஆண்டுகளில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

11. மூலதன ஆதாய வரி விலக்கு: அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதிகளின் நிதியில் மூலதன ஆதாயம் முதலீடு செய்யப்பட்டால் விலக்கு அளிக்கப்படும். மேலும் புதிய நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் முதலீட்டிற்கான மூலதன ஆதாய வரி விலக்கு அனைத்து ஸ்டார்ட் அப்களுக்கும் விரிவாக்கப்படும்.

12. வரி விலக்கு: ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியை ஊக்குவிக்க 2016 ஏப்ரலுக்கு பிறகு துவக்கப்படும் ஸ்டார்ட் அப்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

13. முதலீடுகள் மீது வரி விலக்கு: நியாய சந்தை மதிப்புக்கு (FMV) மேல் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது போல இந்த மதிப்புக்கு மேல் முதலீடு செய்யும் இன்குப்பேட்டர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்.

14. ஸ்டார்ட் அப் திருவிழாக்கள்: புதுமையை வெளிப்படுத்த மற்றும் கூட்டு முயற்சிக்கான திருவிழாக்கள்.

15. அடல் புதுமை திட்டம் அறிமுகம்

தொழில்முனைவை ஊக்குவிக்க

  • துறை சார்ந்த இன்குபேட்டர்கள்
  • பல்கலைக்கழகங்களில் 3டி பிரிண்டர்கள் கொண்ட 500 சோதனைக்கூடங்கள்
  • தொழில்முனைவோருக்கு இன்குபேஷனுக்கு முந்தைய பயிற்சி
  • ஏற்கனவே உள்ள இன்குபேஷன் மையங்கள் வலுப்படுத்தல்
  • அதிக வளர்ச்சி ஸ்டார்ட் அப்களுக்கு துவக்க நிதி
  • புதுமையை ஊக்குவிக்க
  • புதுமை முயற்சிக்கான விருது - மாநில அளவில் 3, தேசிய அளவில் 3
  • விழிப்புணர்வு உண்டாக்க மற்றும் மாநில அளவில் பயிலறங்குகள் நடத்த மாநில புதுமை ஊக்க மையங்களுக்கு உதவி
  • இந்தியாவின் முக்கிய பிரச்சனைகளுக்கு குறைந்த செலவிலான தீர்வுகளை வழங்க ஊக்குவிக்கும் 'கிராண்ட் இன்னவேஷன் சாலஞ்ச் அவார்ட்'

16. 35 புதிய இன்குபேட்டர்கள்: கல்வி அமைப்புகளில் புதிய இன்குபேட்டர்கள அமைக்க 40 சதவீத நிதி ( அல்லது அதிகபட்சம் ரூ. 10 கோடி) மத்திய அரசால் வழங்கப்படும். 40 சதவீதம் மாநில அரசு மற்றும் 20 சதவீதம் தனியார் துறை வழங்க வேண்டும்.

17. ஐஐடி மெட்ராசில் உள்ள ஆய்வுப் பூங்கா போன்ற 7 புதிய ஆய்வு பூங்காக்கள்: அரசு 7 புதிய ஆய்வு பூங்காக்களை அமைக்கும். ஆறு ஐஐடிகளிலும் ஒரு ஐஐஎஸ்சியிலும் ஆரம்ப முதலீடு தலா ரூ.100 கோடியில் அமைக்கப்படும். ஆய்வு நோக்கிலான நிறுவனங்கள் இந்த பூங்காக்களில் மையம் அமைத்து அதில் உள்ள வல்லுனர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய கல்வி அமைப்புகளில் 31 புதுமை மையங்கள், 13 ஸ்டார்ட் அப் மையங்கள், 18 தொழில்நுட்ப வர்த்தக இன்குபேட்டர்கள் அமைக்கப்படும்.

18. பயோ டெக்னாலஜியில் கவனம்: ஐந்து புதிய பயோ கிளஸ்டர்கள், 50 புதிய இன்குபேட்டர்கள், 150 தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலங்கள் 20 பயோ கனெக்ட் அலுவலகங்கள் அமைக்கப்படும்.

19. மாணவர்களுக்கு ஊக்கம்: ஐந்து லட்சம் பள்ளிகளில் 10 லட்சம் புதுமையான முயற்சிகள் எனும் இலக்குடன் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை முயற்சித் திட்டம். புதுமை மற்றும் தொழில்முனைவு மைய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 20 மாணவர்களுக்கான ரூ.பத்து லட்சம் மதிப்பு கொண்ட விருது. ஐஐடி மாணவர்களில் தரமான ஆய்வுக்காக ஆண்டுதோறும் 'உச்சத்தார் அவிஷ்கர் யோஜானா' (Uchhattar Avishkar Yojana ) மூலம் ரூ. 250 கோடி அளிக்கப்படும்.

தமிழில்: சைபர்சிம்மன்