மாணவர்களை புதிய கற்றல் முறையில் 21-ம் நூற்றாண்டிற்கு தயார்படுத்தும் சென்னை மையம்!

0

இன்று பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதே கணக்கு மற்றும் அறிவியல் பாடம் மீது இருக்கும் பயமே. தொடக்க காலத்தில் இருந்தே கணக்கு என்றாலே அதை பூதம் போல் காட்சி செய்கின்றனர் பல மாணவர்கள். கணக்கு மற்றும் அறிவியல் பாடத்திற்கு மட்டுமே அதிக செலவு செய்து பள்ளிக்கு பின் தனி வகுப்பில் மாணவர்களை சேர்க்கின்றனர். ஆனால் ஒரே முறையான வகுப்பு, மாணவர்களை சலிப்படைய செய்கிறது. இந்த தொழிநுட்ப காலத்தில் அவர்களுக்கு ஏற்றவாறு வித்தியாசமாய் வகுப்பு நடுத்த முன் வந்துள்ளது ’ThinkDiff S'kool’.

நிறுவனர் மற்றும் குழு
நிறுவனர் மற்றும் குழு

இது கணக்கு அறிவியலோடு மட்டும் நிற்காமல் தொழிநுட்ப மற்றும் பொறியியல் வகுப்புகளையும் வழங்குகிறது. அதாவது STEM (Science, Technology, Engineering and Math).

இந்நிறுவனத்தை நிறுவியவர் புவனா, பொறியியல் படிப்பிற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு கணவருடன் அமெரிக்கா சென்றார். அதன் பின் எம்.பி.எ பட்டம் பெற்று அதில் முதல் மாணவியாய் வந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாமிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார்.

அவர் படிப்பிற்கு பிறகு பல கார்ப்ரெட் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார் ஆனால் கார்ப்ரெட் உலகம் பிடிக்கவில்லை என உணர்ந்து தொழில் தொடங்க முன் வந்துள்ளார் புவனா. அதிலும் நிச்சயம் கல்வி சார்ந்தே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

“நான் அமெரிக்காவில் இருந்த போது அந்த கல்வி முறை நம் நாட்டிலிருந்து வேறுப்பட்டு இருந்ததை கண்டேன். மேலும் அக்கல்வி முறை நிஜ வாழ்க்கைக்கு ஏற்றதாய் இருந்ததது. அவர்களின் கல்வி தர மதிப்பீடு செயல்முறைக்கு தகுதியுடையதாய் இருந்தது,”

என தன் தொழில் தொடக்கத்திற்கு முன்னோடியாய் இருந்த காரணத்தை விளக்குகிறார்.  அதன் பின்னரே நம் கல்வியில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஒரு கற்றல் மையத்தை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தொடங்கினார். 2013-ல் தன் சேமிப்புப் பணத்தை முதலீடாய் போட்டு இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளார் புவனா.

“முதலில் அறிவியல் பாடத்தில் இருந்தே தொடங்கினேன் படிப்படியாக செயல்முறை பாடத்திட்டத்தை உருவாக்கினேன். குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வத்தை மற்றும் படைப்பாற்றல் வெளிக்கொண்டு வரும் வகையில் வகுப்புகள் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தேன்,”

என தன் முதல்கட்ட செயல்களை விளக்குகிறார் புவனா.

இந்த டிஜிட்டல் உலகில் உள்ள குழந்தைகள் தொழில்நுட்பத்தின் நுகர்வோர்களாகவே இருக்கின்றனர் ஆனால் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக இல்லை. அதனால் குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்க கணினி நிரலாக்கங்களை ThinkDiff-ல் கற்பிக்க விரும்பினோம் என்கிறார். மேலும் இதில் எடுக்கப்படும் பாடத்திட்டம் அனைத்துமே குழந்தைகளுக்காக சுவாரசியமாகவும் எளிதாகவும் புவனா தனிப்பட்ட முறையில் தயாரித்ததாகும். இதில் 6-16 வயதான குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.

21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு குழந்தைகளை தயார்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான கற்றல் நிரலாக்கங்களை தயார்படுத்துகின்றனர் ThinkDiff அமைப்பு.

“STEM என்பது இந்தியாவை பொறுத்தவரை ஒரு புது முறை. நிஜ வாழ்க்கையில் உள்ள கருத்தாக்கங்களின் கருத்தியல், புரிதல் மற்றும் பயன்பாட்டிற்கான செயல்களின் தேவைகளை மக்கள் இப்பொழுதே உணரத் தொடங்குகின்றனர். இந்த விழிப்புணர்வை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நாம் ஏற்படுத்த வேண்டும்,”

என தன் அமைப்பிற்கு சவாலாய் இருக்கும் உலகச் சூழலை எடுத்துரைக்கிறார் புவனா.

தன் சொந்த சேமிப்பில் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு இதுவரை எங்கிருந்தும் முதலீட்டை புவனா பெறவில்லை. இருவராய் தொடங்கிய இவ்வமைப்பில் தற்பொழுது 10 பேர் கொண்ட குழுவாய் உயர்ந்துள்ளது.

பள்ளிக்கு பிறகு, வார இறுதி, கோடை வகுப்பு, கே.ஜி வகுப்பு போன்ற பல பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்டுகின்றனர். இதற்கு 1500 – 2500 வரை மாதம் வசுலிக்கப்படுகிறது. மேலும் ThinkDiff பள்ளியில் இருந்து STEM திட்டத்திற்காக ’New york academy of Sciences’-ல் இரு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“உலகளாவிய உள்ள மற்ற குழந்தைகளுடன் அவர்கள் இணைந்து பணிபுரிந்து STEM சவால்களை மேற்கொள்வார்கள். மேலும் ஒரு வழிக்காட்டியாக New york academy of Sciences-ல் ஒருவராக நானும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்,”

என தன் வெற்றி பயணத்தை நம்முடன் பகிர்ந்து முடிக்கிறார் புவனா. மேலும் தற்போது இவர்கள் தங்கள் பாடமுறைகளை வெளிப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் குறிப்பிக்காக கம்யூட்டர் சயின்ஸ் உலகின் அற்புதங்களை குழந்தைகளுக்கு சுவாரசியமாக கற்றுத்தரும் வகையில் வடிவமத்துள்ளனர் ThinkDiff S'kool.