மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்திவரும் ஒரு உன்னத மனிதன்! 

0

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டமான தாரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் அஜய் பண்டிட். தன் பத்தாவது வயதில் நல்ல பள்ளியில் சென்று படிக்கவேண்டும் என்பது அஜய்க்கு தேவையாக இருந்தது. ஆனால் கிராமத்தில் அப்படி ஒன்றுமே கிடையாது. படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் அவரது தந்தையாரின் ஆதரவும் அவரை பள்ளிக்கு தினமும் சைக்கிளில் 14 கிலோமீட்டர் செல்லவைத்தது.

சொந்த கிராமத்தில் வாய்ப்பு, தகவல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாதபோதும் அவரது தந்தை சிறு அறிவுரையுடன் கூடிய பாதையைக் காட்டினார் – “கடினமாக உழைத்து உனக்கான ஒரு சூழலை உருவாக்கிக்கொள்.”

அவரது பால்ய காலத்தின் அனுபவங்களும் பாதிப்புகளும் அஜயிடம் அழிக்கமுடியாதவையாக இருக்கின்றன. இந்தூரில் சமூகப் பணியில் முதுகலைப் படிப்பைப் படித்தார். ஆனால் அவருடைய விருப்பம் ,மீண்டும் தான் வளர்ந்த இடத்துக்குத் திரும்புவதாக இருந்தது. 2005 ம் ஆண்டு சில நண்பர்களுடன் சேர்ந்து அஜய், 'சினர்ஜி சன்ஸ்தான் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அது கல்லூரியோடு முடிந்துபோகிற திட்டமாக இல்லை. 2006ம் ஆண்டு அதனை முறைப்படி உருவாக்கினார். தற்போது அஜய்க்கு வயது 32. அவருடைய நண்பர்கள் சினர்ஜி சன்ஸ்தானை கடந்த பத்து ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்கள்.

மத்தியப்பிரதேசத்தின் ஹார்தா மாவட்டத்தில் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் சினர்ஜி சன்ஸ்தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது. குழந்தைகள் விளையாட மைதானம், தரமான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சினர்ஜி சன்ஸ்தான் உதவி செய்கிறது.

குழந்தைகளும் இளைஞர்களும் அவர்களுடைய உரிமைகளை தெரிந்துகொள்வதோடு அதனை பெறுவதற்கான வசதியையும் பெறவேண்டும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துவருகிறோம், எனக்கு என்பதில் இருந்து நமக்கு என்ற நிலைக்கு உதவும், சமூகத்தில் அவர்களுடைய உற்சாகமான ஈடுபாட்டை உறுதிசெய்கிறோம். அவர்கள் உதவவேண்டும். இது அவர்களை சமூகத்துடன் இணைத்துவைக்கும்.

கடந்த பத்தாண்டுகளாக, சினர்ஜி சன்ஸ்தான் வெறுமனே குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக மட்டும் பணியாற்றவில்லை. கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடுவது, இளைஞர் கல்வி மற்றும் ஆளுமைப் பயிற்சிகள், தொழில்முனைதல், உள்ளூர் தன்னாட்சி, பெண் தலைமை மற்றும் சுகாதாரம் தொடர்பான முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.

தொடக்கமுயற்சிகள், கூட்டுறவு மற்றும் தாக்கம்

குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான பல நிகழ்வுகளை சினர்ஜி சன்ஸ்தான் முன்னெடுத்துவருகிறது.

முறைசாராக் கல்வி மையம், சஹாக் – ஏக் நிராலி பஹல் என்று பெயரிட்டுள்ளார்கள். ஹர்தாவில் வசிக்கும் சேரிக் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் செலுத்திய குழுவினர் 6 க்கும் 13 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள். பெண் குழந்தைகள்மீது சிறப்புக் கவனம் செலுத்தினார்கள். இந்த திட்டத்தை சமூகத்தின் உதவியுடன் செய்கிறார்கள்.

ஊட்டச்சத்தின்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான திட்டங்கள், ஜனவரி 2010 முதல் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பத்து பழங்குடியினர் கிராமங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டம் கிராமப்புற சுகாதாரம், தண்ணீர் மற்றும் துப்புரவு குழுக்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல உள்ளூர் அமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது. கடந்த 2012ம் ஆண்டு சைல்டுலைன் இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து குழந்தைகளின் பிரச்சினைகளை கூறுவதற்கான 24x7 இயங்கும் 1098 என்ற ஹெல்ப் லைனை உருவாக்கினார்கள்.

குழந்தை கடத்தல், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் உள்பட பல பிரச்சினைகளில் மாவட்ட குழந்தை உரிமை அமைப்புடன் இணைந்து சினர்ஜி தீவிரமாக செயல்படுகிறது. இது யுனிசெப் அமைப்புடன் சேர்ந்து செய்யப்படும் முயற்சி. இக்குழுவில் ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சினர்ஜி குழுவினரும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்குழு 200 இளம் குடிமகன்களை பயிற்றிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த பத்து குழந்தைகள் உரிமை குழுக்களையும் அமைத்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களிடம் தலைமைத்துவம் ஆகியவற்றில் சினர்ஜி உதவியிருக்கிறது. குடும்ப வன்முறை, பாலியல் சமத்துவமின்மை மற்றும் பெண்களின் உரிமைகள் ஒட்டுமொத்த கிராமப் பெண்கள் சமூகம் மற்றும் பெண் பஞ்சாயத்து உறுப்பினர்களிடமும் மிகப்பெரிய விஷயங்களாக இருக்கின்றன.

சினர்ஜியின் அடுத்த கவனம் சுகாதாரம். 230 ஆஷா பணியாளர்களுக்கு சினர்ஜி, அவர்களுடைய திறனை மேம்படுத்த தேசிய கிராமப்புற சுகாதார கமிஷன் பரிந்துரைக்கும் பயிற்சிகளை அளிக்கிறது. இந்தப் பெண்கள் கிராமப்புறங்களில், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், மகப்பேறு மற்றும் குழந்தை நலம், மலேரியா, டைபாய்டு, டிபி போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழுக்களிடமும் சுகாதாரப் பணிகளில் சினர்ஜி ஈடுபடுகிறது. சினர்ஜி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் உறுப்பினராக இருக்கிறது. ஹார்தா மாவட்டத்தில் உள்ள 200 கிராமங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது சினர்ஜி.

அதையடுத்து ஆய்வு முயற்சிகளிலும் சினர்ஜி ஈடுபடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மற்ற மாவட்டங்களில் சுகாதாரம், கல்வி தொடர்பான கவனம் செலுத்துகிறது. மத்தியப்பிரதேசத்தின் காண்ட்வா, பெதுல், செகூர், ரெய்சன், விதிஷா, கார்கோன், பார்வானி, ஜபூவா, ஹோசங்காபாத் போன்ற 16 மாவட்டங்களில் தகவல்களை சேகரித்திருக்கிறது. அதேபோல பிரவா மற்றும் சிஒய்சி எனப்படும் இளைஞர்கள் கூட்டு இயக்கத்திலும் சினர்ஜிசன்ஸ்தான் சேர்ந்து செயல்படுகிறது. மேலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் பிரச்சாரத்தில் தீவிரமான பங்கேற்பாளராக இருக்கிறது.

கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியபோது, மக்கள் கிண்டலாகப் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அஜய். என்ன செய்துவிடப்போகிறார்கள் என்று நினைத்தவர்கள் அமைதியாகிவிட்டார்கள் என்கிறார் அவர். இந்த பத்தாண்டு கால பயணத்தில் 52 கிராமங்களை இந்த அமைப்பு சென்று சேர்ந்திருக்கிறது. கொத்தடிமை குழந்தைகள் 150 பேருடன் நெருக்கமாக பணியாற்றியதோடு, 1000 இளைஞர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இதுவரை சினர்ஜிசன்ஸ்தான் 3 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. கடந்துபோன ஆண்டுகளில் அவர்கள் ஆக்சன் எய்டு, பிரவா, யுன்னிட்டி அறக்கட்டளை, சிஒய்சி, யுஎன்எப்பிஏ, அன்விமன், யுனிசெப் மற்றும் மகாராஷ்டிரா அரசு ஆகியவற்றிடமிருந்து நிதி பெற்றிருப்பதாக அஜய் குறிப்பிடுகிறார்.

சவால்கள்

இன்னும் புறக்கணிக்கப்பட்ட மாவடங்களில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாகக் கூறுகிறார் அஜய். குழந்தை மற்றும் இளைஞர் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பணியில் அரசும் நகரத்தில் வாழும் படித்தவர்களும் ஈடுபடவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

சமூக தொழில்முனைதலில் இளைஞர்களை ஊக்குவிப்பதும் சமூகத்துடன் இணைந்து புதிய முயற்சிகளை செய்வதும் அமைப்புகளை உருவாக்குவதும் பெரும் சவாலாக இருப்பதாக அஜய் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த சமூகம் இதுபோன்ற வாழ்க்கைக்கு உற்சாகப்படுத்தாது. இளைஞர்களும் இதிலிருந்து நகர்ந்து நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்குச் செல்லவே விரும்புகிறார்கள். மீண்டும் கிராமங்களுக்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்களுடைய வீடுகளும் கிராமங்களும் நல்ல இடத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்” என்றும் கூறுகிறார் அஜய்.

முதலீடுகளும் தரவுகளும் சினர்ஜிக்குத் தேவைப்படுகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கூட்டு முதலீட்டுக்கு சினர்ஜிசன்ஸ்தான் முயற்சி செய்துவருகிறது.

பாதையின் முடிவில் வெளிச்சம்

எப்போதும் அஜயின் நண்பர்களும் உறவினர்களும் இதுபோன்ற பணியைப் பற்றி கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் இந்தப் பணியின் தன்மையை புரிந்துகொள்ளமுடியவில்லை, ஒரு நிறுவனத்தில் போய் வேலை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என்கிறார்கள். அஜயின் அடுத்த இலக்கு, மறுவாழ்வு மையம் மற்றும் கொத்தடிமை குழந்தைகள் இணைந்த குழந்தைகளுக்கான சமூகக் கல்விச்சாலையை உருவாக்குவதே.

நிச்சயம் மாற்றம் நிகழும் என்று நம்புகிறார் அஜய். தன் பயணத்தை அவர் பிரதிபலிக்கிறார்: “நாங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள். எங்களுக்கு நிறைய தடைகள் வந்தன. அதனை கடந்துவிட்டோம். நாங்கள் புதிய வெளியை உருவாக்கி தாக்கத்தை ஏற்படுத்துவோம். எங்களால் முடிந்த எல்லோராலும் முடியும்.”

ஆக்கம்: SNIGDHA SINHA | தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஒடிசாவில் மலையின மக்களுக்காகத் துவக்கப்பட்ட சமூக நிறுவனம்!

அறிவை அடித்தட்டு மக்களின் உடைமையாக்கும் முழக்கம்!